நன்றி குங்குமம் தோழி அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, ஆட்டோக்காரர்கள் இடையிலான ஒரு வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் மற்றும் சில நண்பர்கள் இணைந்து ஆட்டோக்காரர் ஒருவரை அடிக்க...
நன்றி குங்குமம் தோழி
அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, ஆட்டோக்காரர்கள் இடையிலான ஒரு வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் மற்றும் சில நண்பர்கள் இணைந்து ஆட்டோக்காரர் ஒருவரை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதை மற்ற ஆட்டோக்காரர்கள் தடுத்தபின், அடி வாங்கிய ஆட்டோக்காரர் சொன்னது, நான்கைந்து பேர் சேர்த்து ஒருத்தரை இப்படி அடிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றார்.
அதேபோல், சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்கள் மூலம் நாம் பார்ப்பது, மாணவிகள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் அடிப்பது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் அடிப்பது என்று கணக்கு வழக்கில்லாமல் அடிதடிகளை வயது வித்தியாசமின்றி, பொது இடங்களில் நாம் பார்க்க நேரிடுகிறது. இம்மாதிரியான சம்பவங்களை, திரைப்படங்களில் அல்லது ஏதோ ஒரு இக்கட்டான நேரத்தில் மட்டுமே பார்த்திருப்போம்.
மகளின் மதிப்பெண் குறைந்ததற்காக, தந்தையே மகளை அடித்து கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியை பார்க்கிறோம். கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்வது அல்லது மனைவியை கொலை செய்வதை இயல்பான செய்தியாய் தொடர்ந்து பார்க்கிறோம். இவர்கள் யாருமே ரவுடிகள் இல்லை என்பதையும் நாம் பார்க்கிறோம். சாதாரண மக்கள் என்று நினைக்கும் இவர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வர ஆரம்பிக்கிறது என்ற கேள்வியே நம் முன் சவாலாக மாறி நிற்கிறது.
ஒரு பக்கம் அடிதடி என்றால், மற்றொரு பக்கம் தண்டனைகள் என்ற பெயரில் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வது அதிகரித்து இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு மாணவனை ஆசிரியர் திட்டிவிட்டார் என்பதால், ஆசிரியர் பெயரை எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை செய்ததை செய்தியில் பார்க்கிறோம். தன் பிறந்தநாளை தனது வீட்டில் கொண்டாடவில்லையென்று தற்கொலை செய்வது, தான் ஆசைப்படும் நவீன மாடல் பைக்கினை வீட்டில் வாங்கித் தரவில்லையெனத் தற்கொலை செய்வது என்ற செய்திகளையும் தொடர்ந்து பார்த்து
வருகிறோம்.
இப்படியாக ஒருவரையொருவர் அடிப்பது அல்லது மற்றவர்களுக்கு உணர்வு ரீதியான தண்டனையை கொடுக்க தன்னைத்தானே பலி கொடுப்பது என்று சமூகமே புரிந்துகொள்ள முடியாத புதிராய் மாறிக்கொண்டு இருக்கிறது. எதனால் இந்த மாற்றம் என்றால், போதைப் பழக்கமும், அதனால் ஏற்படும் தைரியத்தால் வன்முறை என்றும், தான் ஆசைப்படும் விஷயத்தின் மீதான அங்கீகாரம் மதிக்கப்படவில்லை எனில், தன்னை வருத்திக் கொள்வது என்ற வீம்புப் பிடிவாதமும் சமூகத்தின் முன் சவாலாய் இருக்கிறது.
இங்கு நான் யார் தெரியுமா? என்னை எப்படி கேள்வி கேட்கலாம்? என் ஆசையை எப்படி ஒதுக்கித் தள்ளலாம்? எனக்கான மரியாதை என்ன? என்னைப் போய் இப்படி அசிங்கப்படுத்தலாமா? இப்படியான பல்வேறு என்னைப் பற்றி, நான், எனக்குள் இருக்கும் இம்மாதிரியான வார்த்தைகளுக்குள் மக்கள் அடிமையாகி இருக்கிறார்கள். இதனால் தங்களுக்கென்று ஒரு குழுவையும், தங்களுக்கென்று ஒரு அதிகாரத்தையும் அவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் யாருக்கு என்ன பாதிப்பு என்பதைப் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. தான் மட்டுமே சமூகத்தின் ஒரு அங்கீகாரம் என்ற எண்ணமே அவர்களை வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் செய்கிறது.
மனிதன் தான் ஒரு சமூகப்பிராணி என்பதை முற்றிலும் இங்கு மறந்துவிட்டான். தான் மட்டுமே சமூகத்தின் ராஜா. தான் மட்டுமே சமூகத்தின் அதிகாரம். தன்னை தவிர மற்ற அனைத்து விஷயங்களுமே எனக்கு கீழானவை என்ற எண்ணம் அவனுக்குள் தூக்கலாக இருக்கிறது. இந்த எண்ணம் மிகப்பெரிய ஆபத்தையும், எதிர்மறை விளைவுகளையும் சமூகத்தில் உண்டு பண்ணுகிறது. இந்த எதிர்மறை விளைவுகளைத்தான் நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கி விட்டோம். இதனைத் தடுக்க முயற்சிக்க வேண்டுமென்பதே இன்றைய சவாலாய் நம்முன் இருக்கிறது.
மரபணு ரீதியாக வேட்டையில் அதிக ஈடுபாடு நமக்கு எவ்வளவுதான் இருந்தாலும், ஒரு பக்கம் நாகரீக சமூகத்திற்கு நாம் மாறிவிட்டோம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, வீடு என்ற ஒன்று இருந்தாலே, அதில் முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பலரும் இருக்கத்தானே செய்வார்கள். இதில் அவரவருக்கு என்று தனிப்பட்ட குணாதிசயங்கள் பல இருந்தாலும், அதை வெளிப்படுத்த ஒரு அளவீடும், வரைமுறையும் இருக்க வேண்டுமென நிபந்தனை வைத்திருப்பார்கள். மனித குணாதிசயங்கள் வீட்டுக்குள் எதிரும் புதிருமாய் இருந்தாலே எல்லை மீறி போய்விடக்கூடாது என்பதில் கறாராக இருப்பார்கள். இதில் நிபந்தனைகளை மீறும் போது, நமக்கான எல்லைக்கோட்டை தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
இன்றைய நமது சமூகத்தில் பல்வேறு விதமான எதிரும், புதிருமான மனிதர்களின் கருத்துக்களை கேட்க நேரிடும் போது நாம் ஒரு நிதானத்திற்கு வரவேண்டும். அந்த நிதானத்தை நமது வீடுகள் தராமல் போகிறதோ என்ற எண்ணம்தான் சமூகத்தில் பிரதிபலிக்கிறது.மனித நாகரீகம் மாறலாம். ஆனால், மனித உணர்வுகள் என்றைக்கும் மாறாது என்ற ஜெயகாந்தன் எழுத்தைப்போல, நிதானத்தையும், பொறுமையையும் மனிதன் கைவிடப் பழகும்போது, அதுவொரு கட்டத்தில் மனிதனுக்குதான் பாதிப்பை உருவாக்கும். உதாரணத்திற்கு, மனமும், உடலும் ஒன்றுக்கொன்று சங்கிலி போல் பிணைத்திருக்கும் அளவுக்கு, அதிக கோபமும், கூச்சலும் நமது நரம்புகளை பாதிக்கும்.
இளம் வயதில் ஆடினால், முதுமையில் நோயில் அவதிப்பட நேரிடும். இப்படியாக நாம் சமூகத்தை மதிக்காமல் போனால், இயற்கையாக உடல் பாதிப்படைய ஆரம்பிக்கும். அதனால்தான் இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒரு சிறு துரும்பென தொடர்ந்து நம் முன்னோர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், மனதைக் கையாளப் பழக வேண்டும்.
மனதைக் கையாளப் பழகும் போதே, மனித உறவுகளை கையாளப் பழகுவோம். இங்கு அனைத்துமே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. எதை விட்டும் எதையும் தனியாகக் இங்கே கையாள முடியாது. நீங்கள் எடுக்கும் ஆயுதமான வன்முறையும், தண்டனையும் உங்களை நீங்களே அழித்துக் கொள்வதற்குச் சமம். இதில் மற்றவர்கள் பாதிக்கப்பட்டாலும், அந்த பாதிப்பு அவர்களுக்கு சில காலத்திற்கு மட்டும்தான் என்பதை மறந்துவிட வேண்டாம். இயற்கைக்கு முன் மனிதன் சவால்விட முடியாது. அதனால் சமூகத்திற்கு முன்னும் நம்முடைய இருப்பும் ஒரு அங்கமாக மட்டுமே இருக்கும் என்பதை என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்