Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முடக்கும் முதுகு வலியும்... முதன்மையான கேள்வி பதில்களும்!

நன்றி குங்குமம் தோழி

இப்போது இருக்கும் அவசர உலகில் முதுகு வலி என்பது வீட்டில் ஒருவருக்காவது இருக்கும் அளவிற்கு மாறிவிட்டது. சமீபத்தில் என் உறவினர் ஒருவர் முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்கவர், முதுகு வலி என்று இடுப்பு பெல்ட் தினமும் அணிவதாக சொன்னார். ஐடி ஊழியரான இவர், தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் இருப்பதாகவும் சொன்னார். இவரின் நம்பிக்கை முதுகு வலிக்கு அவர் அணியும் பெல்ட் போதுமானது, உடற்பயிற்சி செய்ய நிறைய நேரம் எடுக்கும் என்பது, அவர் மட்டும் இல்லை நம்மில் பலர் இப்படி நிறைய தவறான புரிதல்களோடு இருக்கிறோம். எனவே முதுகு வலிக்கு சிகிச்சை செய்ய வரும் நபர்களின் கேள்விகளை இங்கே பதில்களுடன் தொகுத்துத் தருகிறேன். இது பலருக்கும் முதுகு வலி பற்றி முழுவதும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என நம்புகிறேன்.

*உடற்பருமனாக இருப்பவர்களுக்குத் தானே முதுகு வலி வரும். நான் சரியாக என் பி.எம்.ஐ-க்குள்தானே இருக்கிறேன், எனக்கு ஏன் வருகிறது?உடல் ஒல்லியாக இருந்தாலும், கச்சிதமாக இருந்தாலும் முதுகு வலி வரும். முதுகு வலி வர முக்கியமானக் காரணம் தசைகளின் வலிமையைப் பொருத்தும், ஊட்டச்சத்துகளைப் பொருத்தும் என்பதால் உடல் பருமனை பொருத்து இல்லை.

*ஸ்ட்ரெச்சிங் (Stretching) உடற்பயிற்சிகள் செய்வதால் முதுகு வலி குறைகிறது. ஆனால் அதனை ஒரு மாதம் விட்டுவிட்டால் வலி திரும்பவும் தொடர்கிறதே, ஏன்?ஸ்ட்ரெச்சிங் (தசை தளர்வு) பயிற்சிகள் தசைகளை இறுக்கமாக இல்லாமல் இலகுவாக வைக்க மட்டும்தான். இதனுடன் சேர்த்து தசை வலிமை (Strengthening) பயிற்சிகள் செய்ய வேண்டும். அப்போதுதான் முழுப் பலன் கிடைக்கும். இப்படி இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தாலே முதுகு வலிக்கு முற்றிலும் குட்-பை சொல்லலாம்.

*என் வயது 39 ஆகிறது. இரண்டு சிசேரியன் செய்துள்ளேன். வேலைகள் அதிகமாக இருந்தால் மாதத்தில் இரண்டு முறையாவது முதுகு வலி வருகிறது. பின் ஓய்வெடுத்தால் சரியாகி விடுகிறது.

எக்ஸ்ரே ஏதேனும் எடுக்க வேண்டுமா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா?

தசைகள் பலவீனமாய், இறுக்கமாய் இருக்கும் போது வேலைகள் அதிகம் செய்தால் முதுகு வலி வரும். இதனை போதிய உடற்பயிற்சிகள் மூலம் சரி செய்து கொள்ளலாம். இதற்கு எக்ஸ்-ரே அவசியம் இல்லை. அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகினால் அவர்கள் தசைகளின் திறனை பரிசோதனை செய்து அதற்கேற்ப பயிற்சிகள் வழங்குவர். உங்களுக்கு இருப்பது ஆரம்பகால முதுகு வலி. இதனை இந்த நிலையிலேயே முற்றிலும் சரி செய்துகொண்டால் வாழ்நாள் முழுக்க முதுகு வலியால் முடங்க வேண்டிய அவசியமில்லை.

*தினமும் நாற்பது கிலோமீட்டர் தூரம் இரு சக்கர வாகனம் ஓட்டுகிறேன். முதுகு வலியும் உள்ளது. அவ்வப்போது மாத்திரைகள் போட்டுக் கொள்கிறேன். இதற்கு முழுத் தீர்வு என்ன?

மாத்திரை, மருந்துகள் அந்த நேர நிவாரணி மட்டுமே. முழுமையான தீர்வு இல்லை. உடற்பயிற்சிகள் மட்டும் தான் முழுமையான தீர்வு. நாற்பது கிலோ மீட்டர் என்பது பெரிய தூரம் கிடையாது. எனவே உடற்பயிற்சிகள் கற்றுக்கொண்டு தசைகளை பலப்படுத்திக் கொண்டால் போதும், நீங்கள் தாராளமாக வாகனம் ஓட்டலாம். வலி இருக்காது.

*வயிறும் முதுகும் சேர்ந்து வலிக்கிறது. என்னவாக இருக்கும்? கடந்த வருடம்தான் வயிற்றை ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தேன். அதில் எதுவும் இல்லை. ஆனால் ஒரு மாதமாக இப்படி வலிக்கிறது?

தசை, எலும்பு, ஜவ்வு, மூட்டுப் பிரச்னைகளால் ஏற்படும் முதுகு வலியில் வயிறும் வலிக்காது. ஆனால் ஏதேனும் வயிற்றில் தொற்று இருந்தாலோ, சிறுநீரகக் கல் இருந்தாலோ இப்படி சேர்ந்து வலிக்கலாம். நீங்கள் ஒரு பொது மருத்துவரை அணுகி வயிற்று வலிக்கான காரணத்தை கண்டறியுங்கள். வயிற்று வலி முற்றிலும் குணமடைந்த பின்னும் முதுகு வலி இருந்தால் அதனை இயன்முறை மருத்துவர் துணை கொண்டு குணப்படுத்தலாம்.

*தினமும் நடைப்பயிற்சி செய்கிறேன். பூங்காவில் இருக்கும் சில உடற்பயிற்சி மெஷின்களில் பயிற்சியும் செய்கிறேன். இருப்பினும் முதுகு வலி ஒரு வருடமாக இருக்கிறது. ஆக்டிவாக உடற்பயிற்சி

செய்தும் ஏன் இப்படி எனக்கு நடக்கிறது?

நடைப்பயிற்சி செய்தால் முதுகு வலி வராது என்பது இல்லை. மேலும் பூங்காக்களில் இருக்கும் இயந்திரங்களில் பயிற்சி செய்யும் முன் எவ்வளவு செய்ய வேண்டும், எத்தனை முறை செய்ய வேண்டும், யார் செய்ய வேண்டும் என பல விஷயங்கள் உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் நினைக்காமல் நாம் ஒரு ஆர்வத்தில் இதனை செய்கிறோம். மேலும் இந்த வகை பயிற்சிகள் முதுகு வலியினையும் தீர்க்காது. முறையாக இயன்முறை மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

*என் பாட்டிக்கு எண்பது வயதாகிறது. ஆக்டிவாக எல்லா வேலைகளையும் செய்வார்கள். ஆறு மாதமாக முதுகு வலியால் அவதியுறுகிறார். மாத்திரைகள் அவருக்கு வாய்ப்புண், சோர்வு என சரியான பலன் தராதவையாக இருக்கிறது. மேற்கொண்டு என்ன செய்வது?

இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலம் வலியினை குறைக்க முடியும். இதில் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது. மேலும் வயது சற்று அதிகம் என்பதால் மாத்திரை, மருந்துகள் கண்டிப்பாக பக்க விளைவுகளை உண்டாக்கும். இந்த வயதில் உடற்பயிற்சிகள் செய்ய முடியாது என்பதால், வலியினை மட்டும்தான் குணப்படுத்த முடியும். பின் மீண்டும் சில மாதம் கழித்து வலி வந்தால் இதே போல் இயன்முறை மருத்துவம் செய்துகொள்ளலாம். எப்போதும் போல ஆக்டிவாகவும் இருக்கலாம்.

*நான் புதிதாக ஐ.டி. வேலையில் சேர்ந்துள்ளேன். என்னுடன் பணிபுரியும் அனுபவம் மிக்க அனைத்து ஊழியர்களும் சொல்வது முதுகு வலி இல்லை கழுத்து வலியால் அவதியுறுவது. அப்படியும் இல்லையெனில் உடற்பருமன், மாதவிடாய்க் கோளாறு என ஏதாவது ஒரு பிரச்னையாவது எதிர்கொள்கிறார்கள். நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன செய்து தற்காத்துக் கொள்வது?

ஆரோக்கியம் சார்ந்து விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு முதலில் என் வாழ்த்துகள். நீங்கள் சொல்வது சரிதான். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, வேலையில் மன அழுத்தத்துடன் இருப்பது என எல்லா சிக்கல்களும் ஐ.டி. போன்ற துறைகளில் இப்போது சாதாரணம் ஆகிவிட்டது. எனவே உணவில் கட்டுப்பாடும், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு உண்பது அவசியம். மேலும் உடற்பயிற்சிகள் செய்து ஃபிட்டாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இதுவே ஆரோக்கியமாய் இருப்பதற்கான சூட்சுமங்கள்.

*மாதவிடாய் நேரத்தில் வரும் முதுகு வலிக்கு தீர்வு உள்ளதா?

முழுத்தீர்வு உண்டு என சொல்ல முடியாது. ஏனெனில் இது ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்கள். போதிய ஊட்டச்சத்து மிக்க உணவுகள், உடற்பயிற்சிகள், மாதவிடாய் நேரத்தில் ஓய்வு மற்றும் தேவையான நீர் அருந்துவது இது எல்லாம் அவசியம். இதையெல்லாம் பின்பற்றினால் 70 சதவிகித வலியினைக் குறைத்துவிடலாம். மீதம் இருக்கும் வலி விகிதம் ஹார்மோன்கள் கையில் என்பதால் வலி வரும்போது நாம் அதனை எதிர்கொள்ளத்தான் வேண்டும். சுடுநீர் ஒத்தடம், இதமான மசாஜ் போன்றவை இதற்கு கை கொடுக்கும்.

*வாரத்தில் ஒரு தடவையாவது வீட்டு அருகில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். முதுகு வலி வந்ததிலிருந்து ஒரு வருடமாய் விளையாடுவதில்லை. என்னால் மீண்டும் விளையாட்டினை தொடர முடியுமா?

முதுகு வலி வரும் காரணத்தை கண்டறிந்து அதற்கான உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவரிடம் கேட்டு கற்றுக்கொண்டு செய்து முதலில் ஃபிட்டாக மாற வேண்டும். பின் விளையாட்டினை தாராளமாக தொடரலாம்.மொத்தத்தில் இந்தக் கேள்விகள் அனைத்தும் உங்கள் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். விழிப்புணர்வுடன் செயல்படுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்