Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

கலந்த உணவுகள்... அலெர்ட் ரிப்போர்ட்!

பொதுநல மருத்துவர் அஸ்வின் கருப்பன்

சமீபத்தில், திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டதால், பலரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டிருப்போம். அப்படி திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸில் என்ன இருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன.. அதனை உட்கொள்ளலாமா.. கூடாதா என்பது குறித்து மருத்துவர் அஸ்வின் கருப்பன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

திரவ நைட்ரஜன் என்பது இன்டஸ்ட்ரியல் குலண்ட் ஆகும். அதே தன்மை கொண்டதுதான் ட்ரை ஐஸும். திரவ நைட்ரஜன் ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு ஆகும். இதன் வெப்ப நிலை 196°C என கூறப்படுகிறது. திரவ நைட்ரஜன் எந்தப் பொருளையும் உடனடியாக உறைய வைக்கும் திறன் கொண்டது. ட்ரை ஐஸ் என்பது திட வடிவில் உள்ள கார்பன் டை ஆக்சைடு ஆகும். கார்பன் டை ஆக்சைடு திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு செல்கிறது.

திட கார்பன் டை ஆக்சைடு மைனஸ் 78.5 சென்டிகிரேடில் உள்ளது. இவை இரண்டுமே ஒரு பொருளை குளிச்சியாக வைத்திருக்க பயன்படுத்தப்படுவதாகும். உதாரணமாக, சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒரு சில பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரீசரில் வைத்து பாதுகாப்போம் அல்லவா.. அப்படி ஃப்ரீசர் போன்றதுதான் இந்த திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ். இதனை பெரும்பாலும், தொழிற்சாலைகளில் சில பொருட்களை குளிர்ச்சியாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனை எந்தவிதமான உணவுப் பொருளிலும் சேர்க்கக் கூடாது. அதற்கு அங்கீகாரமும் கிடையாது.

மருத்துவ உலகில், கால் ஆணியை நீக்க, மருக்களை நீக்க மற்றும் கருமுட்டையை பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, சில வகையான தடுப்பூசிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும்போது, ​​தடுப்பூசிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த ட்ரை ஐஸ் பயன்படுத்தப்படுகிறது. உணவு பயன்பாட்டுக்கு என்று எடுத்துக் கொண்டால், ஐஸ்க்ரீமை குளிர் நிலையில் பதப்படுத்தி வைக்கவே, இதுவரை ட்ரை ஐஸை பயன்படுத்தி வந்தார்கள். மேலும், நாம் ஐஸ்க்ரீமோ அல்லது ஐஸ் கேக் போன்றவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது, அவை நம்மிடம் வந்து சேரும் வரை, உருகிவிடாமல் இருப்பதற்காக, இந்த ட்ரை ஐஸை பேக்கிங் உள்ளே வைத்து அனுப்பப்படுகிறது. இப்படிதான் ஃபுட் இண்டஸ்ட்ரிகளில் ட்ரை ஐஸ் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை வெறும் கைகளால் கையாண்டால், சருமத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அவை தீக்காயங்கள் போன்ற காயங்களை ஏற்படுத்தும். எனவே கையாளும் போது கையுறைகளை அணிவது அவசியம் ஆகும். இப்படியான ஒரு பொருளை உண்டால் என்னவாகும் என்று யோசித்து பாருங்கள். ஆனால், சமீபகாலமாக, திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸை நேரடியாக உணவுகளில் சேர்க்கின்றனர்.

இதற்கு காரணம், சமீபகாலமாக, உணவுப் பிரியர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை தேடித் தேடி உண்ணத் தொடங்கியுள்ளனர். எனவே, அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பெரிய பெரிய உணவகங்களில் இருந்து தெருவோர கடைகள் வரை புதுவிதமான உணவுகளை உருவாக்குவதிலும், தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், உணவுப் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ப அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில், திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ் உணவுகளில் கலக்கப்படுகிறது. இது உணவில் கலக்கப்படும்போது, ஏற்படும் புகையை பார்த்து ஆர்வமாகி, அதனை ருசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கி உண்கின்றனர்.

இது முற்றிலும் கவன ஈர்ப்பு செயல்தான். மற்றபடி, இந்த திரவ நைட்ரஜனோ அல்லது ட்ரை ஐஸோ உணவில் பயன்படுத்த அரசு சார்பில் எந்தவித அங்கீகாரமும் கொடுக்கவில்லை. இது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், சமீபகாலமாக, சட்டவிரோதமாக ட்ரை ஐஸை வாங்கிவந்து, புது ட்ரெண்டாக, பான்மசாலா, பிரவுனி, ஐஸ்க்ரீம், பிஸ்கட் போன்றவற்றில் பயன்படுத்தி கவனத்தை ஈர்க்கின்றனர்.

இந்த ட்ரை ஐஸ் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை கையில் கொஞ்ச நேரம் பிடித்திருந்தாலே தோல் வெந்து போய் தீ காயம் ஏற்பட்டது போன்ற காயங்களை ஏற்படுத்தம் தன்மைக் கொண்டது. அப்படியிருக்கும்போது இதனை உண்ணும்போது, தொண்டையில் இருந்து உணவுக் குழல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். உள்ளுறுப்புகளில் வெந்துப் போன உணர்வை ஏற்படுத்தும், வயிற்றில் அல்சர் புண்களை உருவாக்கும்.

மேலும், இது வயிற்றில் ஓட்டையை ஏற்படுத்தி, அந்த ஓட்டையின் மூலம் காற்று புகுந்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதுபோன்று, இந்த திரவ நைட்ரஜன் வயிற்றுக்குள்ளே போகும்போது, உடலில் உள்ள ஆக்சிஜன் முழுவதையும் இழுத்து ஆவியாக்கிவிடும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிலருக்கு மரணத்தையும் ஏற்படுத்திவிடக்கூடும்.

அந்தவகையில் தான், சமீபத்தில் மும்பை குருகிராமில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தியவர்களுக்கு மவுத் ஃப்ரெஷ்னருக்குப் பதிலாக பீடாவை ட்ரை ஐஸில் முக்கி கொடுத்துள்ளார்கள். அதை சாப்பிட்டதும் அவர்களுக்கு ரத்த வாந்தியை ஏற்படுத்தியது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) படி, ட்ரை ஐஸ் ஒரு ஆபத்தான பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்.டி.ஏ) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) கூட ட்ரை ஐஸ்களை வெறும் கைகளால் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இதனை உட்கொள்வது என்பது முற்றிலும் தவறானது ஆகும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

பொதுவாக தெரியாத எந்தவொரு புது உணவின் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு அதை உண்ண நினைக்கும்போது, நாம் உணவில் சேர்க்கப்படும் மூலப் பொருட்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தற்போது உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது. உங்கள் கைப்பேசியில் இணையத்தின் மூலம் நீங்கள் உண்ணப்போகும் உணவைப் பற்றி தெரிந்து கொண்டு பின்னர் உண்ண வேண்டும். அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும் முன்பு, அதைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு பின்னர் கொடுப்பது நல்லது.

அதிலும், முக்கியமாக நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதுதானா என்பதை அறிந்து உண்பது மிகமிக முக்கியமானதாகும். ட்ரை ஐஸ் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை. செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டு கவனத்தை ஈர்க்கும் வகையில் கலர் கலராக தயாரிக்கப்படும் உணவுகளும் கூட தீங்கு ஏற்படுத்தக் கூடியதுதான். ஏனென்றால், ட்ரை ஐஸை பொருத்தவரை உடனடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆனால், செயற்கை நிறங்கள் மெல்ல மெல்ல பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.

இந்த உணவை சமீபமாக, பலரும் சாப்பிட்டு தானே வருகிறார்கள். அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தவில்லையே என்று சிலர் நினைக்கலாம். உதாரணமாக விற்பவர், அந்த பொருளை திரவ நைட்ரஜனில் முக்கி எடுத்து கொடுத்திருந்தால், அதை சாப்பிடும்போது பெரிய பாதிப்புகள் இல்லாமல், சிறிதளவு வாய் வெந்து போதலோடு முடிந்திருக்கும். ஆனால், உணவுப் பொருளின் மீது அளவு தெரியாமல், திரவ நைட்ரஜனை ஊற்றி கொடுக்கும்போது, அதனை உண்ட உடனேயே அது பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் ரத்தவாந்தி எடுக்க வைக்கிறது.

இதில் முக்கியமாக நான் சொல்ல நினைப்பது என்றால், சமீபகாலமாக, விதவிதமான உணவுகள் குறித்து விமர்சனங்கள் செய்யும் இணைய நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகிறது. அதில் ஈர்க்கப்பட்டு, பலரும் உணவுகளை தேடித் தேடி உண்ண தொடங்கியுள்ளனர். எனவே, புட் வலாக் வைத்திருக்கும் யூ டியூபர்கள், ஒரு உணவைப் பற்றிய விமர்சனத்தை கொடுக்கும் முன்பு அந்த உணவு குறித்து நன்கு அறிந்து கொண்டு பின்னர் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பார்வையாளர்கள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தரமற்ற உணவுகளைப் பற்றிய விமர்சனங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பாதிப்புகள்

இந்த திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ் சாப்பிட்டால் வாய் எரியும். சுவாசிப்பது கூட சிரமமாக மாறும். மேலும் போதுமான காற்றோட்டம் இருக்கும் போது மட்டுமே அவை திறக்கப்பட வேண்டும். இல்லையெனில் ட்ரை ஐஸ் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

ட்ரை ஐஸ் உயிருக்கு ஆபத்தானதா?

ட்ரை ஐஸை தற்செயலாக உட்கொள்வது கூட உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். கடுமையான உள் காயங்களை ஏற்படுத்தலாம். அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு வாய் அல்லது செரிமான மண்டலத்தில் வெளியிடப்படுகிறது. இது செரிமான அமைப்பில் ஆபத்தான வாயுவை உருவாக்குகிறது.வயிற்று வலி, வாந்தி, குடல் துளை மற்றும் வயிற்றில் துளைகள் ஏற்படும். மூச்சுத் திணறல் ஏற்படும். ட்ரை ஐஸ் தற்செயலாக வாயில் விழுந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக இதனை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியமானது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்