Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

 நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனக்கு வயது 50. கடும் வாயுத்தொல்லையால் கடந்த ஓராண்டாக அவதிப்படுகிறேன். உடலின் தோள்பட்டை மற்றும் பல்வேறு பகுதியிலும் துடிப்பு இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?

- ஜே.ராமலிங்கம், சுல்தான்பேட்டை.

ரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகைப் பலகாரங்களை உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் மேற்கண்ட வாயுத் தொல்லை, உடலின் பல பகுதிகளில் தசைப்பிடிப்பாக வெளிப்பட வாய்ப்புள்ளது.

வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு வாய் முதல் ஆசனவாய்வரை உள்ள உணவுப் பாதையை முழுமையாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்குச் சத்தான அறுசுவை உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மலக்கட்டு இருந்தால் திரிபலா சூரண மாத்திரை காலை, மாலை இரண்டும், அல்லது நிலாவரை சூரண மாத்திரை இரவில் இரண்டும் எடுத்துக்கொள்ளலாம்.வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, அஜீரணத்துக்குப் பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரை (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம், சீனி கலந்தது) வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி லேகியம், அஸ்வகந்தி லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் ஆகாரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். ஓமத் தீநீர் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் 10 மி.லி. சாப்பிடலாம்.

உடலின் தசைத் துடிப்பு தீர, தலை நடுக்கம் தீர, மேற்கண்ட மருந்துகளுடன் அமுக்கரா சூரண மாத்திரை இரண்டைக் காலை, இரவு சாப்பிடலாம். முக்குற்றத்தையும் சமப்படுத்தும் இவை, வருமுன் காக்க நாம் அனைவரும் உட்கொள்ளக்கூடியவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனக்கு வயது 30, ஒரு மாதமாகப் பின்புறத் தலையில் நரம்புடன் சேர்த்து வலிக்கிறது. பார்வையில் சிறிது குறையையும் உணர்கிறேன். தலை மந்தமாக இருப்பது போலத் தோன்றுகிறது. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆலோசனை கூற முடியுமா?

- அசோக்குமார் ராஜா, சென்னை.

பின்புறத் தலைப் பகுதியில் வலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன:பின் தலையில் அடிபட்டிருந்தால் வலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலியாலும் இப்படி ஏற்படலாம் (Migraine headache). பின்பகுதி ரத்தநாள அழற்சி பாதிப்புகளால் வலி ஏற்படலாம். முதுகெலும்புச் சிதைவு நோய்களாலும், கழுத்து சதை பிடிப்பாலும் தலைவலி ஏற்படலாம். சில வகை வலிப்பு நோய்களாலும் இந்தத் தொந்தரவுகள் ஏற்படலாம்.

மனச்சோர்வாலும், மிகை ரத்த அழுத்தத்தாலும் இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். பின்பகுதி தலை நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பாலும் (Occipital neuralgia) பின்பகுதி தலைப் பகுதியில் வலியும் மதமதப்பும் ஏற்படலாம்.பின்புற மூளைப்பகுதி பாதிப்புகளாலும் (Occipital lobe), நோய்களால் அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதாலும் பின்புறத் தலைவலி ஏற்படுவதுடன் பார்வை கோளாறுகளும் ஏற்படலாம்.

எனவே, நீங்கள் நல்ல நரம்பியல் நிபுணர், கண் நோய் சிறப்பு நிபுணர் ஆகியோரிடம் மருத்துவ ஆலோசனை பெற்று உரிய பரிசோதனைகளைச் செய்வதுடன், தலைப் பகுதியில் ஸ்கேன் பரிசோதனையும் செய்து நோய்க்குத் தீர்வு காணலாம். வலிநிவாரணிகளைத் தற்காலிகமாக மட்டும் பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

எனக்கு வயது 55. இடது கால் முட்டிக்கு மேல் வீக்கம் உள்ளது. நீட்டவும் மடக்கவும் முடியவில்லை. நீர்கோத்து வலிக்கிறது. நீரை ஊசியின் மூலம் எடுத்துவிட்டால், மறுபடியும் நீர்கோக்குமா? என்ன செய்தால் நோய் தீரும்?

- இ.பி.சிங்காரவேலன், திருச்சி.

மூட்டு வலி வருவதற்குப் பொதுவான காரணங்கள்: உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவது, தெரிந்தோ, தெரியாமலோ அடிபடுவது, தொற்றுநோய்க் கிருமிகளால், வைரஸ் கிருமி தாக்குவது, நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துகள் குறைவால், அதிக குளிர்ச்சியால், இதயக் கோளாறு, அதிக கொழுப்பு, அதிக ரத்தக் கொதிப்பு, தீவிர சர்க்கரை நோய் பாதிப்பு, பரம்பரையாகவும், வயது முதிர்வு, தீராத மலக்கட்டு போன்றவற்றால் எலும்பு மூட்டு தேய்தல், வலி, வீக்கம், நீர்கோத்தல் போன்றவை ஏற்படலாம். மூட்டு வலிகளை வீக்கத்துடன்கூடிய மூட்டு வலிகள், வீக்கம் இல்லாத மூட்டு வலிகள், இணைப்புத் தசை மூட்டு வலிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

வீக்கத்துடன் கூடிய மூட்டு வலிகளுக்கு உதாரணம் ருமாட்டிக் ஆர்த்ரட்டிஸ், ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ், சைனோவைட்டிஸ், ஆன்கியோலைசிங் ஸ்பான்டைலைடிஸ், கௌட்

போன்றவற்றைக் கூறலாம்.இணைப்புத் தசை தாபித மூட்டு வலிகளுக்கு லூபஸ் ஸ்கிளிரோசிஸ் (நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவை) காரணமாகக் கூறலாம்.

உங்களுக்கு ஏற்பட்டிருப்பது வீக்கத்துடன் கூடிய சைனோவைட்டிஸ் மூட்டு வலி. இதில் நீர்கோத்து வீங்கி வேதனையை உண்டு பண்ணும். இதற்குத் திரிகடுகு சூரணம், அமுக்கரா சூரணம், நிலவேம்பு குடிநீர் சூரணம், ரசம், கந்தகம், காக்தம், இரும்பு, இந்துப்பு, வெங்காரம் சேர்ந்த உலோக, உபரச பாடாண வகை மருந்துகள், எண்ணற்ற பேடண்ட் வகை மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. உள் மருந்து, வெளிப்பூச்சு மருந்து, ஒத்தடம், பற்று போன்ற சிகிச்சைகள் மூலம் இந்நோயைத் தீர்க்கமுடியும்.

எனக்கு நீண்ட நாட்களாக கால் நகங்களில் சொத்தை உள்ளது. எலுமிச்சைச் சாறுடன் மஞ்சள் கலந்து தடவினால் நல்லது என்கிறார்கள். உண்மையா? சொத்தை விழுந்த நகங்களை நிரந்தரமாகச் சரிசெய்வது எப்படி?

- மா.ஆனந்தி, செய்யாறு.

நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail) என்பது ‘டிரைக்கோபைட்டன் ரூப்ரம்’ (Trichophyton rubrum) எனும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படுகிற சரும நோய். இந்த நோய் கை விரல்களைவிடக் கால் விரல்களையே அதிகமாகப் பாதிக்கும். ஈஸ்ட் (Yeast) எனும் பூஞ்சைக் கிருமிகளும், மோல்டு (Mold) எனும் பூஞ்சைக் காளான் கிருமிகளும் இந்த நோயை ஏற்படுத்தக்கூடியவை. இதன் மருத்துவப் பெயர் ‘ஆனிகோமைக்கோசிஸ்’ (Onychomycosis).

சமையல் வேலை, வீட்டு வேலை, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும்போது, தண்ணீரில் அதிக நேரம் விரல்கள் புழங்குவதால், பூஞ்சைக் கிருமிகள் தொற்றிக்கொள்ள அதிக சாத்தியம் உள்ளது. இதைத் தடுக்க, வேலை முடிந்ததும் கை கால்களைக் கழுவிச் சுத்தமான துணியால் ஈரத்தைத் துடைத்து, விரல்களை உலரவைத்த பிறகுதான் அடுத்த வேலையில் ஈடுபட வேண்டும். ஈரமான சூழலில் பூஞ்சைக் கிருமிகள் வளர்வதற்கு அதிக சாத்தியம் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

இதற்கு சிகிச்சை அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பூஞ்சைக் கிருமிகளைக் கொல்வதற்கென்றே வீரியமான மாத்திரை மருந்துகளும் வெளிப்பூச்சுக் களிம்புகளும் நிறைய உள்ளன. ஆனால், நகச்சொத்தை இவற்றுக்கெல்லாம் அசைந்து கொடுப்பதில்லை. பணச் செலவு குறித்துக் கவலைப்படாமல், மிகவும் பொறுமையாகப் பல மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு நோய் குணமாகும். எலுமிச்சைச் சாறுடன் மஞ்சள் கலந்து தடவினால் நோய் கட்டுப்படும் என்பதற்கு ஆதாரமில்லை. நோய்த் தடுப்புதான் இந்த நோய்க்குச் சரியான தீர்வு.