நன்றி குங்குமம் தோழி
நீங்கள் எந்தப் பக்கம்?
இன்றைய நவீன அறிவியல் உலகில் நம் எல்லோருக்கும் தினசரி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பது தெரியும். அதுவும் ஆண்களைப் போலவே பெண்களும் அதிகமாக உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம். இந்நிலையில் அண்மையில் வெளியான ஓர் ஆய்வின்படி, ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் வருடாந்திர கட்டணம் செலுத்தி உடற்பயிற்சிக் கூடத்தை உபயோகித்து வருகின்றனர். ஆனால், அவர்களில் சிலர் உடற்பயிற்சிக் கூடத்தை விட்டுவிட்டு வீட்டில் செய்வதற்கு விருப்பப்படுகின்றனர்.
இத்தகைய சூழலில் பலருக்கும் எழும் கேள்விகள் சில உண்டு. உடற்பயிற்சியினை வீட்டில் இருந்தபடியே செய்வதா? அல்லது உடற்பயிற்சிக்கூடத்தில் சென்று செய்வதா? இரண்டிலும் உள்ள சாதக- பாதகங்கள் என்ன? இவற்றில் இயன்முறை மருத்துவரின் பங்கு யாது? போன்றவற்றை இங்கே விரிவாக தெரிந்துகொள்வோம், வாருங்கள்...
உடற்பயிற்சி பயன்கள்...
*உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை தரும் ஒரு மருந்து உடற்பயிற்சி மட்டும்தான். உடற்பயிற்சி செய்வதால் இதயம் பலம் பெறுகிறது. இதனால் இதயக் குழாய் அடைப்பு, இதயம் பலவீனம் ஆவது போன்ற நோய்களை தடுக்க முடியும்.
*உடற்பயிற்சிகள் வழியாக நம் மூளை சுறுசுறுப்பாக இயங்க முடியும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நீண்ட நேரம் ஆற்றலுடன் நம் மூளை வேலை செய்யும். மூளையில் உள்ள நரம்பு செல்கள் வயதானாலும் புத்துணர்வுடன் இருக்கும்.
*உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் உடலில் உள்ள கெட்ட ரசாயனங்கள் அகற்றப்பட்டு நம் தோல் புதுப்பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.
*உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் தசைகளும், மூட்டுகளும் பலமடையும். இதனால் எலும்பு முறிவை தடுக்கலாம். மேலும், தசைகளில் வரும் வலி, சுளுக்கு, சோர்வு ஆகியவற்றை குறைக்கலாம். முதுகு வலி, கால் மூட்டு வலி, கழுத்து வலி போன்ற உடல் மூட்டு வலிகளையும் தடுக்கலாம்.
*நீண்ட நாட்கள் உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்து வருவதால் நம் எலும்புகள் பலமடையும். இதனால் வயதான பின் வரும் எலும்பு அடர்த்தியின்மையை தடுக்க முடியும்.
*உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதால் ஜீரண மண்டலம் சரியாக இயங்கும். சரியான நேரத்திற்கு பசி எடுப்பது, சரியாக ஜீரணமாவது, மலச்சிக்கல் இல்லாமல் கழிவுகள் சரிவர வெளியேறுவது போன்றவை தினசரி எந்தச் சிக்கலும் இல்லாமல் நடைபெறும்.
*உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்து வருவதால் தூக்கத்தில் இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் சரியாகும். எட்டு மணி நேரம் இயல்பாக நம்மால் தூங்க முடியும். நேரத்திற்கு தூங்கி நேரத்திற்கு எழ முடியும்.
*உடற்பயிற்சிகள் செய்வதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் கல்லீரலை பாதுகாக்கலாம்.
*சர்க்கரை நோய், கொழுப்படைந்த கல்லீரல் (Fatty Liver), இன்சுலின் எதிர்ப்புத் தன்மை (Insulin Resistance), உடல் பருமனை தவிர்க்கலாம். மேலும், குழந்தையின்மை, பி.சி.ஓ.டி. பிரச்னை, முறையற்ற மாதவிடாய், மனச்சோர்வு போன்ற சிக்கல்களில் இருந்து எளிதில் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் வெளிவரலாம்.
உடற்பயிற்சிக்கூடம்...
1. சாதகங்கள்
* குறைந்தது நம்முடன் பத்து நபராவது உடற்பயிற்சிகள் செய்வார்கள் என்பதால் அவர்களுடன் நாம் கலந்துரையாடி, நட்பு பாராட்டி நமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்ளலாம்.
* நிறைய பெண்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கும் என்பதால் பலர் முன்னிலையில் நாம் உடற்பயிற்சிகள் செய்வதனால் கூச்ச சுபாவம் மறைந்து நமக்கு தைரியம் உருவாகும். இதனால் சுய நம்பிக்கை (Self confidence) பெருகும்.
* குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு சிறிது நேரம் தனிமை அவசியம் என்பதால் உடற்பயிற்சிக்கூடம் செல்வது என்பது அவர்களுக்கு ஏற்ற ‘தனக்கான நேரம்’ (Me time) ஆக இருக்கிறது.
* நம் கூட்டில் இருந்து வெளிவந்து வெளிவட்டாரத்தில் உள்ள மனிதர்களுடன் பழகுவது, வெளியிடங்களுக்கு செல்வதினால் மன அமைதி கிடைக்கிறது.
* உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து, கற்றுத்தர இயன்முறை மருத்துவர்கள் இருப்பார்கள்.
* நம் உணவுப் பழக்கவழக்கங்களை சரிபார்த்து திருத்துவதற்கு உணவியல் நிபுணர்கள் இருப்பார்கள். மேலும் சில வசதி படைத்த (Elite) உடற்பயிற்சிக் கூடங்களில் பொது மருத்துவர்கள் இருப்பார்கள். நமக்கு வேறு ஏதேனும் உடம்பில் பிரச்னை இருந்தால் அவர்களிடம் ஆலோசனை பெறலாம்.
* வெவ்வேறு வகையான உபகரணங்கள், உடற்பயிற்சி சார்ந்த பொருட்கள் இருக்கும் என்பதால் நாம் பலவித பயிற்சிகளையும் செய்து பார்த்து தேர்வு செய்யலாம்.
2. பாதகங்கள்
* நேரத்தை ஒதுக்குவதே முதல் பாதகம். உடற்பயிற்சிக்கூடத்திற்கு கிளம்ப வேண்டுமெனில் அதற்கென தனியாக உடை அணிந்து, அதற்கென தனியாக கிளம்பி, தனியாக நேரத்தை ஒதுக்கி வர வேண்டும். அந்த நேரத்தில் வேறு ஏதேனும் வேலை வந்துவிட்டால் அன்றைய உடற்பயிற்சிக்கான நேரம் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
* பருவநிலை மாற்றங்களான தொடர் மழை, அதீத வெயில் போன்ற சூழலில் நம்மால் சரிவர உடற்பயிற்சிக்கூடத்திற்கு போக முடியாது.
* ஒரு சில உடற்பயிற்சிக்கூடங்களில் ஆண்களும் இருப்பார்கள். இதனால் நம் தனிப்பட்ட சூழல் (Privacy) பாதிக்கப்படும். பெண்கள் மட்டுமே இயங்கும் உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் அதிக பணம் செலவாகலாம்.
* உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்வதென்றால் வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நம் சேமிப்பிலிருந்து ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சிக்கூடத்திற்கு கட்டணம் செலுத்த இந்த தொகை தேவைப்படுகிறது.
வீட்டிலேயே உடற்பயிற்சிகள்...
1. சாதகங்கள்
* நம் வீட்டிலேயே, நமக்குப் பிடித்த இடத்தில் செய்வதினால் ஒரு செளகரியம் (Comfort Zone) கிடைக்கிறது. இதனால் எந்தவித படபடப்பும் இல்லாமல் நாம் ஆசுவாசமாக உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* நமக்கு வேண்டிய நேரத்தில் நாம் உடற்பயிற்சிகளை செய்யலாம். உதாரணமாக, நாம் நான்கு மணிக்கு எழுந்திருக்கும் நபராக இருந்தால் காலை நான்கு மணிக்கே நாம் உடற்பயிற்சிகளை தொடங்கலாம். இதுவே உடற்பயிற்சிக்கூடம் என்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அதை தவறவிட்டால் நம்மால் அன்று உடற்பயிற்சிகள் செய்ய இயலாது.
* மேலும் அதீத குளிர், மழை, வெப்பம் போன்ற பருவநிலை மாறுதல்களிலும் வீட்டிலேயேதான் நாம் உடற்பயிற்சிகள் செய்யப் போகிறோம் என்பதால் நமக்கு சுலபமாக இருக்கும்.
* வீட்டில் நாம் மட்டும் உடற்பயிற்சி செய்வதால் ஒருவித பிரைவசி இருக்கும்.
* வீட்டில் குடும்ப நபர்களுடன் உடற்பயிற்சி செய்வதால் குடும்பத்தில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை பேசி நம் குடும்பத்தினை மேன்மைப்
படுத்த முடியும்.
2. பாதகங்கள்
* வீட்டில்தானே இருக்கிறோம் என நினைத்து பல பெண்கள் மாலை செய்யலாம், மதியம் செய்யலாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். இவ்விதமான சோம்பேறித்தனத்தில் நாம் பல நாட்கள் உடற் பயிற்சிகள் செய்யாமல் தவறிப் போய்விடும்.
* வீட்டில் உடற்பயிற்சிகள் செய்வதால் தினசரி நாம் தொலைபேசி வழியாக மட்டும்தான் இயன்முறை மருத்துவரிடமோ அல்லது உணவியல் நிபுணரிடமோ பேச முடியும். இதுவே, உடற்
பயிற்சிக்கூடத்தில் செய்யும்போது நாம் ஏதேனும் தவறு செய்தாலும் அதனை உடனே திருத்துவதற்கு நிபுணர்கள் இருப்பார்கள். உதாரணமாக, நமக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் நாம் அதிக உடற்பயிற்சி செய்யும் போது மயக்கம் ஏற்படலாம். இவ்வாறான விஷயங்களை நாம் தொடர்ந்து உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்லும் போது அங்கிருக்கும் நிபுணர்கள் கண்டறிந்து தவறுகளை எடுத்துரைப்பர்.
* நாம் மட்டும்தான் வீட்டில் உடற்பயிற்சிகள் செய்வோம் என்பதால் வெளி மனிதர்களோடு ஒரு புதிய நட்பு, புதிய உரையாடல்கள் எதுவும் இல்லாமல் தனிமையாக இருப்போம்.
* வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்வதால் குழந்தைகள் இருந்தால் அவர்கள் நடுவில் வந்து தொந்தரவு செய்வதும், வீட்டில் உள்ள பெரியவர்களை நாம் மனதில் வைத்துதான் மற்ற வேலைகளையும் நடுவில் செய்ய வேண்டும் என்பதால் பூரண ‘தனக்கான தனிமை நேரம்’ (Me time) இருக்காது.
* பெண்களுக்கு தங்களின் தினசரி வேலைகளில் (Daily Routines) அடிக்கடி மாற்றம் நிகழ்ந்தால் அவர்களுக்கு பிடிக்கும். அப்படி மாற்றமில்லாமல் தினமும் ஒரே மனிதர்களை வீட்டுக்குள்ளேயே பார்த்துக்கொண்டு ஒரே உடற்பயிற்சிகளை செய்துகொண்டு இருப்பதால் சீக்கிரத்தில் சலிப்பு தட்டிவிடும்.
டிப்ஸ்...
* உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்வது பிடிக்கவில்லை என்றால் நாம் நம் குடும்ப உறுப்பினர்களோடு உடற்பயிற்சிகள் செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடற்பயிற்சிகள் இருக்கும் என்பதால் இது ஒரு புது வித மாற்றத்தை உருவாக்கிக் கொடுக்கும்.
* நாம் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கிறோம் என்றால் அதில் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் உள்ள பெண்களை திரட்டி ஒரு பத்து பேர் ஒன்றாக சேர்ந்து ஒருவரின் வீட்டில் செய்யலாம். இதனால் நமக்கு ஒரு நண்பர்கள் வட்டம் உருவாவதுடன் நாமும் உடற்பயிற்சிகள் செய்து முடித்துவிடலாம்.
* கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கப்பில்ஸ் (Couples) உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* உடற்பயிற்சிகளை முறையாக இயன்முறை மருத்துவரிடம் கற்றுக்கொண்டு, ஆன்லைன் வழியாக நாம் நமக்குப் பிடித்த நட்பு வட்டாரத்துடன் உடற்பயிற்சிகள் செய்யலாம்.
இயன்முறை மருத்துவரின் பங்கு...
* நாம் முறையாக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றால் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி முறையான தசை பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம். ஒருவரின் தசை அமைப்பு எப்படி உள்ளது, அவருக்குத் தேவையான உடற்பயிற்சிகள் என்ன, தேவையான எண்ணிக்கை என்ன என்பது அனைத்தையும் இயன்முறை மருத்துவர்தான் முடிவு செய்வார்.
* ஒரே விதமான உடற்பயிற்சிதான் எனினும் உடல் பருமனாக இருப்பவரால் அதே உடற்பயிற்சியை செய்ய இயலாது. அவருக்கு தனியாக அந்த உடற்பயிற்சியில் சில மாற்றங்களை செய்து கற்றுத் தருவார். இப்படி பல நுணுக்கமான விஷயங்கள் இருப்பதால் நாம் முறையாக உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ள இயன்முறை மருத்துவர் அவசியம்.
* நாம் உடற்பயிற்சிக்கூடத்திற்கு சென்றால் அங்கு நம்முடைய இயன்முறை மருத்துவர் இருப்பார் என்பதால், நமக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் பிரச்னை இல்லை. தேவையான ஆலோசனைகளையும் உடற்பயிற்சிகளையும் அவரே தருவார்.
* அதுவே நாம் வீட்டில் இருந்து உடற்பயிற்சிகள் செய்யப் போகிறோம் என்றால் அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, அவரிடம் போதிய உடற்பயிற்சிகளை கற்றுத் தெரிந்துகொள்ளலாம்.
* மேலும் தொடர்ந்து ஒரே விதமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது என்பதால் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையோ, வருடத்திற்கு ஒரு தடவையோ உடற்பயிற்சிகளை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு கற்றுக் கொடுப்பர்.
* மேலும், வீட்டில் இருந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நிறைய உபகரணங்கள் இல்லாமல் குறைவான அளவில் உபகரணங்களை பயன்படுத்தி எப்படி புதிய உடற்பயிற்சிகளின் பலன்களை பெறுவது என்பதையும் அவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்.
மொத்தத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான். நமக்குத் தேவையான, நமக்கு எது சிறந்ததோ, நம் இயல்பு வாழ்க்கைக்கு எது சுலபமாய் இருக்கிறதோ அதையே நாம் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு உறுதுணையாக என்றும் இயன்முறை மருத்துவர் உடன் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
