நன்றி குங்குமம் டாக்டர்
உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா
நமது முன்னோர்கள் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக கீரைகளையே உணவாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது நம் பாரம்பர்யத்தின் தனிசிறப்பு. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒரே நேரத்தில் பல நோய்களுக்கு மருந்தாக உதவும் கீரைகள் ஒருசில கீரைகள் மட்டுமே. அந்தவகையில் சுக்கான் கீரையும் ஒன்று. வட்ட வடிவான இலைகளைக் கொண்ட இந்தக் கீரையின் ஆங்கிலப் பெயர் ஸோரல் என்பதாகும்.
இது அனைத்து இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இதற்கு சுக்கு கீரை என்ற வேறு பெயரும் உண்டு. அதிகமாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்தக் கீரையை வாரம் ஒருமுறையாவது எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில் கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்த இக்கீரை பெரிதும் உதவுகிறது. அதிக புளிப்பு சுவையுடைய கீரை அனைத்து தட்ப வெப்ப சூழல்களையும் தாங்கி வளரக்கூடியது. ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்படும் சுக்கான் கீரை பச்சை நிறத்தில் இருக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டது. கொத்துமல்லி இலையை போன்ற நறுமணம் கொண்டது.
சுக்கான் கீரையில் காணப்படும் சத்துக்கள்
நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்தவை. மேலும் வைட்டமின்கள் ஏ,பி, மற்றும் சி ஆகியவற்றையும் கொண்டுள்ளது. கால்சியம் தாராளமாக இக்கீரையில் கிடைப்பதால் பால் சேர்க்காதவர்களுக்கு இக்கீரை ஒரு நல்ல மாற்று உணவாகும்.
சுக்கான் கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்:
ஆந்த்ரோ குயினோன், கீரை சோபாணால், எமோடின், ரூட்டின், காம்பெரால், சாப்போனின் ஆக்சலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகள் காணப்படுகிறது.
சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்
*நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினை சீர்படுத்தி மனதை அமைதிபடுத்த உதவுகிறது.
*மூட்டு வலி, கால்வலி, எரிச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.
*இரும்புச்சத்து நிறைந்து உள்ளதால் ரத்தசோகை நோயை தடுக்க உதவுகிறது.
*கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் சுக்கான் கீரையில் உள்ளதால் உடல் வலிமையை பாதுகாக்க உதவுகிறது.
*வைட்டமின் சி இருப்பதனால் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக சுக்கான் கீரை திகழ்கிறது.
*பித்த வாந்தி, வயிறு உப்புசம் போன்றவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.
*மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
*காசநோய், ஆஸ்துமா, இருமல், மூச்சு திணறல் போன்ற நோய்களுக்கும் சுக்கான் கீரையை மருந்தாக பயன்படுத்தலாம்.
*குறிப்பாக, மன அழுத்தம், உணவு முறை மாற்றங்கள் போன்ற காரணங்களினால் ஏற்படும் வயிற்றுப்புண் பிரச்னையை தடுக்க உதவுகிறது.
*உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பினை சீராக்க உதவுகிறது.
*பல் வலி பிரச்னைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்னைக்கும் சுக்கான் கீரை உதவுகிறது.
மேலும் பசியைத்தூண்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உணவில் சேர்க்கும் முறை
வழக்கமான கீரைகளை நாம் எப்படி சமைக்கிறோமோ அதே போல இந்த கீரையையும் சமைத்து சாப்பிடலாம். அல்லது துவையல் போல செய்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அல்சர் பிரச்னை இருப்பவர்கள் இந்த கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அல்சர் விரைவில் குணமாகும். சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சட்னி போல் செய்தும் சாப்பிடலாம்.
சுக்கான் கீரையோடு புளி சேரக்காமல் பாசிப்பருப்பு சேர்த்து கலந்து உணவில் சேர்த்துக் கொள்ள அதன் மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும்.
இந்தக் கீரை நமது ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கக் கூடியது. இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம். ஒருவரின் ரத்த அழுத்தம் சீராக இருந்தாலே அவர்களின் இதயம் பாதுகாப்பாக இருக்கும். அதன்படி உணவில் சுக்கான் கீரையை சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அத்துடன் நமது இரத்தத்தையும் இது சுத்திகரிக்கிறது.
அதேபோல சுக்கான் கீரையில் சூப் செய்து குடித்தால் கல்லீரல் பாதிப்புகள் சரியாகும்.வாத பிரச்னை இருப்பவர்கள், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், தைராய்டு பிரச்னை உடையவர்கள், ரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் சமையலில் இக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாடல்
வாதமறும் பித்தமறு மாறாவரோசிவிடுஞ்
சீதமுடனே யகலுஞ் சேயிழையே- போதப்
புளித்த விலைக்கறிக்குப் போமி ரத்த பித்தங்
களித்த கரப்பனொடு காண்.