Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிறுகீரை மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

இந்த உலகத்தில் நாம் வாழும் சூழலில் நம்மை தாமாக காப்பது பசுமை மூலிகைகள்தான். அந்தவகையில், நம் பாரம்பரிய உணவுக்கட்டமைப்பில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது சிறுகீரை (Amaranthus Polygonoides). பொதுவாக கீரை சாப்பிடும் பழக்கம் உடலை வலுவாக்கும் என்பது சான்றோர்கள் கூற்று. ஏனெனில், அந்தஅளவிற்கு உடலுக்கு வலிமையை தரக்கூடிய போதிய சத்துக்கள் கீரையில் நிரம்பியிருக்கின்றன.

சிறுகீரை மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய கீரையாகும். இது இந்தியா முழுவதும் பொதுவாக காணப்படுகின்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கையாகவே வளர்கிறது. மிதமான வெப்பம், நல்ல சூரிய ஒளி, அடிக்கடி நீர்ப்பாசனம் மற்றும் வளமிக்க மண் ஆகியன சிறுகீரையின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகின்றன.

சிறுகீரையில் காணப்படும் ஊட்டச்சத்துகள்

சிறுகீரையை சைவ உணவுகளின் ராணி என்றும் அழைப்பது உண்டு. இதற்கு காரணம் சிறுகீரையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகளேயாகும். அவை, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் பி1, பி2, பி3 மற்றும் ஏ, சி ஆகியவை அதிகளவில் உள்ளன. மேலும் சிறுகீரையில் உடலுக்கு தேவையான பல்வேறு சக்தி வாய்ந்த மூலக்கூறுகள் காணப்படுகின்றன.

பிளேவோணாய்டுகள்: சிறுகீரையில் ரூட்டின், கேம்ப்பெரால், குயுர்சிடின் உள்ளிட்ட சக்திமிக்க மூலக்கூறுகள் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகளாக செயல்பட்டு செல் அழிவைத்தடுக்கின்றன.

பீட்டாலைன் - சிறுகீரையின் பச்சை மற்றும் சிவப்பு நிறத்திற்கு காரணமான மூலக்கூறாகும். இதன் புற்றுசெல்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது. மேலும் பீட்டா கரோட்டீன், லியுடின், சியாசாந்தைன் மூலக்கூறுகள் மேம்படுத்த உதவுகிறது.

சாபோனின்கள்: இவை தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

டானின்கள்: உடலில் உள்ள சீரற்ற மூலக்கூறுகளை கட்டுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ஆல்கலாய்டுகள்: நரம்பு மண்டலத்தை சீராக்கி பல்வேறு வலிகளை குறைக்க உதவுகிறது.

மருத்துவ பயன்கள்

சிறுகீரையில் ஃபோலேட் அதிகமாக இருப்பதினால் ரத்த சோகையை குணப்படுத்தக்கூடியது. வைட்டமின் கே மற்றும் கால்சியம் சிறுகீரை கொண்டுள்ளதினால் எலும்புகளை வலுவாக்கி மூட்டுவலி பிரச்னையை போக்க உதவுகிறது.

உடல் எடை கட்டுப்பாடு: குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து இருப்பதினால் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: விட்டமின்கள் நிறைந்துள்ளதினால் நல்ல ஆரோக்கியத்தை உடலுக்கு அளிக்கக் கூடியது.

நார்ச்சத்து கொண்டதினால் மலச்சிக்கல் சார்ந்த பிரச்னையை முற்றிலும் குறைக்க உதவுகிறது.

சிறுகீரையிலுள்ள கால்சியம் சத்துக்கள், எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிப்பாட்டுக்கும் உதவுகிறது.

உள்ளுறுப்புகளை வலுப்படுத்துவதில் இந்த சிறுகீரைக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.

இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு அதிக ஆற்றலையும், சக்தியையும் தருவது இந்த சிறுகீரை.

சிறுநீர்ப்பையை சிறப்பாக செயல்பட வைக்கிறது சிறுகீரை. இதனால், சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கு, இந்த கீரையின் பங்கு அபரிமிதமானது. சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள், சிறுகீரையை வாரம் 2 முறையாவது சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.ரத்தசோகை பிரச்னை இருப்பவர்களும், இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடவேண்டும். இதனால், ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சிறுகீரை உணவு வகைகள்

சிறுகீரை மசியல், சிறுகீரை கூட்டு, சிறுகீரை வடை மற்றும் சிறுகீரை சூப், சிறுகீரை பொரியல், சிறுகீரை அடை என பல வகைகளில் தயார் செய்து பயன்படுத்தலாம்.

சிறுகீரை என்பது எளிதாக கிடைக்கக்கூடிய கீரையாக இருந்தாலும் அதில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்து மருத்துவ பயன் மனித உடலுக்கான ஆதரவு தரக்கூடியது. ஆகையால் நாம் இதனை அன்றாட உணவில் அடிக்கடி சேர்த்தால் பல நோய்களை தவிர்த்து ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும்.பழமையில் சொல்வது போல சிறுகீரை சாப்பிட்டால் மருத்துவரைப் பார்ப்பதற்கு தேவையில்லை.

பாடல்

சிறுகீரை சிறந்த மருந்து,

தேய்ந்து நின்று பசுமை நல்கும்,

இரத்தம் சுத்தம் இழந்தவர்க்கே,

உயிர் உற்சாகம் இழை செய்திடும்.

வாதம் கபம் களைய உதவும்,

சோகம் சோம்பல் துடைக்கும் மருந்து,

இரத்த அழுத்தம் சரியாக வைக்கும்,

மூட்டுவலி நீக்கும் சக்தி தரும்.

சிறுகீரை சாப்பிடும்போது,

உடலில் நோய் முளைக்காது,

தினமும் உணவில் சேர்த்திடுவீர்.

நீடித்த ஆயுள் நிச்சயம் உண்டே!