நன்றி குங்குமம் தோழி
உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!
உடலும் மனமும் ஒருங்கிணைவதே யோகா. நமது உடலுக்கும் மனதுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. மகிழ்ச்சியான சூழல் நிலவும் போது, எதையும் நம்மால் சாதித்துவிட முடியும்
என்கிற ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும். அதேநேரம், அழுகை, இழப்பு, கவலை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் வெளிப்படும் போது, அன்றாடம் செய்கிற எளிய வேலைகளையும் செய்ய முடியாத சோர்வு ஏற்படும். இந்த நிலையில்தான், நமது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் செயலை யோகா செய்கிறது.யோகாவில் உடலை இயக்குவதன் மூலம் உள் உறுப்புகள் மற்றும் உடல் உறுப்புகளை சீராக்கி, ஆரோக்கியமாக சமநிலையில் வைக்கும் போது, நம் எண்ணங்களும் ஆரோக்கியமாகவும், நேர்மறையாகவும், நிறைவானதாகவும் இருக்கும்.
திரிகோணாசனம்
திரிகோணாசனம் என்பது நின்ற நிலையில் செய்யப்படும் ஒரு யோகாசனம் ஆகும். இந்த ஆசனத்தை அனைவராலும் சுலபமாக செய்து விட முடியும். உடலை முக்கோண வடிவத்தில் நீட்டித்து, உடல் மற்றும் மன ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது.முந்தைய இதழில் வெளியான வீரபத்ராசனம் ஒன்று, இரண்டுக்கு கால்களை வைக்கும் அதே நிலைதான் திரிகோணாசனத்திற்கும். இரண்டு பாதங்களுக்கு இடையே மூன்று அல்லது நான்கு அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.
இப்போது உங்கள் வலது பாத விரல்கள் வலது பக்கம் நோக்கி இருக்க வேண்டும். கைகள் இரண்டையும் நன்றாக விரித்து, நீட்டி, தோள் உயரத்திற்கு வைத்து, மூச்சை வெளியிட்ட நிலையில், படம் ஒன்றில் காட்டி இருப்பது போல், வலது பக்கமாக, உடலையும் கைகளையும் பக்கவாட்டில் சாய்க்க வேண்டும்.அதிகபட்சம் உள்ளங்கை தரையில் பதியும் வரை கையினைக் கொண்டு செல்லலாம்.
கையினை தரை வரை கொண்டு செல்ல முடியாதவர்கள், தொடை அல்லது கெரண்டை கால் பகுதியை தொட்டு செய்தாலும் சரியே.கால்களில் உள்ள முட்டிகள் இரண்டும் மடங்காமல் நேராய் இருக்கிற மாதிரி கவனித்துக் கொள்ள வேண்டும். 30 விநாடிகள் இதே நிலையில் நீடித்துவிட்டு, மூச்சை உள்ளிழுத்தவாறு, இயல்புக்கு வரவேண்டும். இதே முறையை பின்பற்றி வலது பக்கமும் செய்தல் வேண்டும்.
பலன்கள்
*இது இளமையை தக்க வைக்க செய்கிற ஆசனம்.
*கால்கள் நன்கு பலம் பெறும்.
*இடுப்பு, வயிற்றுப் பகுதி, ஜீரண மண்டலம், சுவாச மண்டலம், கைகள், தோள்கள் ஆரோக்கியம் மேம்படும்.
பரிவிருத்த திரிகோணாசனம்
‘சுழலும் முக்கோண ஆசனம்’
என்று அழைக்கப்படும் ஒரு சக்தி
வாய்ந்த யோகாசனம் இது.
கால்கள் இரண்டையும் குறைந்தது நான்கு அடிக்கு நன்றாக பக்கவாட்டில் விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வலது காலை 90 டிகிரி வலது பக்கம் திருப்பி, கைகள் இரண்டையும் தோள் பட்டை உயரத்திற்கு உயர்த்தும் போது, மார்பு விரைத்த நிலையில் இருத்தல் வேண்டும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே, வலது கை விரல்கள், இடது பாத விரல்களை தொடும் வரை கீழே குனிய முயற்சிக்கலாம். செய்ய முடியாதவர்கள் தொடைப் பகுதி, முட்டி, கெரண்டை கால் பகுதியென எங்கு வேண்டுமானாலும் தொட்டு செய்யலாம். இதே முறையை இடது பக்கமும் செய்தல் வேண்டும்.
பலன்கள்
*உடலில் உள்ள அனைத்து தசை மற்றும் மூட்டுகளுக்கு வலிமை அதிகரிப்பதுடன், அதன் இயக்கத்தை உறுதிப்படுத்தும்.
*சுவாச உறுப்பு மற்றும் ஜீரண உறுப்பு செல்களின் கழிவுப் பொருட்கள் வெளி ஏற்றத்திற்கு உதவியாக இந்த ஆசனம் இருக்கும்.
பிரசாரித பாதோத்தாசனம்
கால்கள் இரண்டிற்கும் இடையே குறைந்தது நான்கு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இப்போது இரண்டு பாதங்களின் விரல்களும் சற்று உள் பக்கமாக திருப்பி இருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்தபடி அடி வயிற்றின் தசைகளை இறுக்கி பிடித்துக் கொள்ள வேண்டும். மூச்சை இப்போது வெளியில் விட்டபடி முன் பக்கமாக குனிய வேண்டும். முழங்கைகள் இரண்டையும் படத்தில் காட்டியது போல தளர்வாக மடக்கி, உள்ளங்கைகள் இரண்டும் தரையில் பதியும்படி வைக்க வேண்டும்.
இப்போது உச்சந்தலை விரிப்பில் படும் வரை, படத்தில் காட்டியிருப்பது போல் நன்றாகக் குனிய வேண்டும். இதுவே பிரசாரித பாதோத்தாசனம். 15 முதல் 20 விநாடிகளுக்கு இதே நிலையில் நீடிக்கலாம். ஆசனத்தை விட்டு வெளியேறும் பொழுது தரையிலிருந்து கைகளை எடுத்து இடுப்பில் வைத்து, பிறகு பொறுமையாக மூச்சை உள்ளிழுத்த நிலையில், உடலை நேராக்கிக் கொண்டு, கால்களையும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பலன்கள்
*இடுப்பு மூட்டுகளை நெகிழ்வாக்கவும், முதுகெலும்பை வலுப்படுத்தவும், உடலின் பின்புற தசைகளை நீட்டவும் உதவுகிறது.
*தொடைப் பகுதி தசைகள், கெண்டை கால் தசைகளில் உள்ள இறுக்கம் விலகி வலிமை கூடும்.
*மூளைக்கு ரத்த ஓட்டம் பாய்வதால், உடல், மனப்பதட்டம் நீங்கும். தலைவலி பிரச்னைகள் சரியாகும்.
*வயிற்றுப் பகுதி உள்ளுறுப்புகள், ராஜ உறுப்புகளின் செயல்பாடுகள் மேம்படும்.
கருடாசனம்
பார்ப்பதற்கு கழுகு போன்ற அமைப்பில் இருப்பதால் கருடாசனம் என்ற பெயர் உள்ளது. விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்து நிமிர்ந்து நிற்க வேண்டும். இப்போது ஒரு புள்ளியில் பார்வையை மையப்படுத்தி அதையே கவனிக்க வேண்டும்.
படத்தில் காட்டியிருப்பது போன்று, வலது காலை எடுத்து இடது காலின் மீது வைத்து பின்னிக் கொள்ள வேண்டும். இப்போது வலது கையையும் இடது கையின் மீது வைத்து பின்ன வேண்டும். இடுப்பை சற்று கீழே இறக்கி சற்றே தாழ்ந்து, கருடாசன நிலையில் 30 விநாடிகளுக்கு நின்று பழகலாம். வலது பக்கம் செய்தது போலவே இடது பக்கமும் செய்தல் வேண்டும்.
பலன்கள்
*நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை அதிகப்படுத்தும்.
*நாளமில்லா சுரப்பிகளின் இயக்க கோளாறில் நிகழும் ஹார்மோன் இன்பேலன்ஸ் பிரச்னையை சரி செய்யும்.
*கூடுதலாக உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
*உடலுக்கும் மனதுக்கும் இணக்கம் ஏற்படுத்தி, நினைவாற்றல் அதிகரிக்கும்.
புகைப்படம் : ஆ.வின்சென்ட் பால்
