Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்க அரிசி… ஒரு மரபணு மாற்ற உணவு!

நன்றி குங்குமம் டாக்டர்

காலங்காலமாக மனிதனுக்கு அரிசி அவனுடைய பிரதான (Staple) உணவுகளில் ஒன்று. இயற்கையாகப் பல லட்சக்கணக்கான வகை அரிசிகள் விளைகின்றன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான நன்மைகள் இருக்கின்றன. என்ற போதும் அவை எல்லாவற்றிலும் சில பொதுத்தன்மைகள் இருக்கின்றன. அவற்றில் பிரதானமானது அவற்றில் உள்ள மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட். இதைத் தவிர ஒவ்வொரு அரிசியிலும் ஒவ்வொருவகை நுண்ணூட்டச்சத்துக்கள் அரிசியின் ரைபோஸ் பண்புகள் நுட்பமாக வேறுபடும். இதுவே அரிசிகளின் பொதுவான இயல்பு.

விஞ்ஞான வளர்ச்சி வேளாண்மை மற்றும் உணவுத் துறைக்குள் வந்த போது அது மிகப் பெரிய புரட்சிகர மாற்றங்களை உருவாக்கியது. அதில் ஒன்றுதான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள். இப்படி மரபணு மாற்ற பயிர்களில் உணவுகளில் இன்னொரு முக்கிய வரவுதான் தங்க அரிசி.

சரி தங்க அரிசி (Golden Rice) என்றால் என்ன?

தங்க அரிசி என்பது தங்கத்தாலான அரிசியா இருக்குமோ என்றால் அதுதான் இல்லை. தங்கம் போன்ற நிறமுடைய அரிசி மற்றும் தங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அளவுக்கு இந்த அரிசிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. மற்றபடி தங்கத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றே சொல்லலாம். சரி தங்க அரிசி அதாவது Golden Rice என்பது முழுக்க முழுக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் (Geniticaly Modified Crop). அதாவது சாதாரணமாக பயிரிடப்படும் அரிசி தாவரத்தின் செல்களில் உள்ள ஜீனில் காணப்படும் DNA வில் ஒருசில மாற்றங்கள் செய்து வேறு சில தாவரங்களின் பண்புகளை இனக்கலப்பு செய்துகொண்டு வரப்பட்ட அரிசி ரகம்தான் இந்த தங்க அரிசி. இந்த மரபணு மாற்றும் ஆய்வானது காலம் காலமாக உருளைக்கிழங்கு, தங்காளி, பட்டாணி, கத்தரி, பருத்தி போன்ற பல பயிர்களில் செய்யப்பட்டு வரும் ஆய்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின் A வின் ஒரு முக்கிய தாதுதான் இந்த பீட்டாகரோட்டின். பீட்டா கரோட்டின் தாவரங்களில் காணப்படக்கூடியது. முக்கியமாக அதிக அளவு அடர் செம்மஞ்சள் நிறப் பழங்களில் இது காணப்படும் கரிமச் சேர்மமாகும். இது கரிமச்சேர்மம் என்றால் உயிர் உள்ள பொருட்களில் இருக்கும் தாதுக்கள்தான். இதுவே கனிமச் சேர்மம் என்றால் உயிர் அற்ற பொருட்களில் காணப்படும் தாதுக்களை குறிக்கும்.

இந்த கரிமச்சேர்மமான பீட்டா கரோட்டினை வைத்துதான் முழுக்க முழுக்க A வகை விட்டமின் உயிர்சத்துவை உள்ளடக்கிய தங்க அரிசியை உருவாக்கி இருக்கிறார்கள். முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விஞ்ஞானியான பீட்டர் ப்ரம்லி (Peter Bramley) என்பவர் இந்த தங்க அரிசிக்காக ஒரு அடித்தளம் போட்டார். அதாவது இவர் தக்காளியில் இந்த பீட்டா கரோட்டினை மரபணு மாற்றம் மூலம் செலுத்தி பின் வெற்றி கண்டார்.

அதனைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பீட்டர் ப்ரம்லி புரவேக் பல்கலைக் கழகப் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டு சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் கிளை நிறுவனமான தாவர அறிவியல் நிறுவனமான இன்கோ பொற்றிகஸ் (Ingo Potrykus) உடன் இணைந்து இந்த தங்க அரிசிக்கான ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த தங்க அரிசியை பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை 8 ஆண்டுகள் கழித்து அறிவியல்சஞ்சிகை என்னும் பத்திரிக்கையில் 2000ஆம் ஆண்டு வெளியிட்டடார்.

இதன் பிறகுதான் தங்க அரிசி பற்றிய செய்திகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அதன் பிறகு பிலிப்பைன்சில் உள்ள பன்னாட்டு அரிசி ஆய்வு மையமும் (IRRI-International Rice Research Institute), USA வில் உள்ள ராக்கேபெல்லெர் அமைப்பும் (The rockefeller foundation) இணைந்து இந்த ஆய்வை கையில் எடுத்து தங்க அரிசியை உற்பத்தி செய்து 2000 ஆம் ஆண்டே முதன் முதலில் வெளியிட்டனர்.

இந்த அரிசி மஞ்சள் நிறத்துடன் கூடிய சற்றே பொன் நிறத்தில் காணப்பட்டது. மேலும் ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிடிலும் இந்த தங்க அரிசியிப் பீட்டா கரோட்டினின் அளவு குறைவாக காணப்பட்டது.பின் 2005 ஆம் ஆண்டு மேலும் ஒரு சில மரபணு மாற்றங்கள் செய்து இந்த தங்க அரிசியின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டனர். முன்பு இருந்த தங்க அரிசியைவிட இந்த புதுரக தங்க அரிசியின் நிறம் கூடுதலாகவே இருந்தது. இந்த நிறத்திற்காக இவர்கள் சோளத்தில் உள்ள ஜீனின் மூலக்கூறை பயன்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் ஆய்வாளர்கள் எதிர்பார்த்தது போலவே விட்டமின் A வின் தாதுவான பீட்டா கரோட்டினின் தாக்கம் இந்த அரிசியில் கூடுதலாகவே காணப்பட்டது. அதாவது முன்பு இருந்த தங்க அரிசியைவிட இந்த பார்ட் 2 தங்க அரிசியில் 23 மடங்கு கூடுதலான பீட்டா கரோட்டினின் அளவு அதிகமாகவே காணப்பட்டது. இவ்வளவு நேரம் தங்க அரிசி என்றால் என்னவென்று பார்த்தோம்.

சரி தங்க அரிசி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம் 2005-ல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி உலக அளவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் விட்டமின் A உயிர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கணிசமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே. அதாவது வருடாவருடம் ஏறத்தாழ 6,70,000 குழந்தைகள் இதனால் இறப்பதாகவும், 5 இலட்சம் பேருக்கு அதிகமானோருக்கு மீளமுடியாத கண்பார்வை இழப்பு ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களும் இந்த விட்டமின் A குறைபாட்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இந்த விட்டமின் A குறைபாட்டால் கண் பார்வை இழப்பு மட்டும் இல்லாமல் அம்மை, தேமல் போன்ற தோல்நோய்களுக்கும் வழிவகுக்கிறது. உலக நாடுகளில் 125 நாடுகளில் இந்த விட்டமின் A குறைபாட்டின் தாக்கம் அதிகம் காணப்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் அரிசியை ஒரு பிரதான உணவாக உட்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எல்லாம் கருத்தில்கொண்டு மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளாமல் இந்த விட்டமின் A குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு கொண்டுவரப்பட்ட அரிசி ரகம்தான் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட தங்க அரிசி.இந்த தங்க அரிசியை பல ஆய்வுகளுக்கு உட்படுத்தி சோதனை செய்த பின்பு 2018-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.இந்தியாவில் 2016-ல் IARI (Indian Agricultural Research Institute) ஆல் பீகாரில் முதன்முதலில் சாகுபடி செய்தனர். இருப்பினும் இந்த திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

அது மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் விட்டமின் A குறைபாட்டின் தாக்கம் சற்று குறைவு என்றே சொல்லலாம்.. மேலும் வெள்ளையர்கள்தான் இந்த விட்டமின் A குறைபாட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.என்னதான் மருந்து இல்லாமல் விட்டமின் A குறைபாட்டை போக்க தங்க அரிசி கொண்டுவரப்பட்டாலும், மரபணு மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக இந்த தங்க அரிசி மருந்து உட்கொள்வதற்கு சமமே என்ற கருத்து இந்தியர்களிடம் உள்ளது. இந்தக் கருத்தாலும் தங்க அரிசிக்கு நம் சமூகத்தில் போதிய வரவேற்பு இல்லை.

தொகுப்பு: லயா

பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள்

பல சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற உணவுகளில் பீட்டா கரோட்டின் இருந்தாலும், பச்சை நிற உணவுகள் கூட நல்ல ஆதாரங்களாகும். உணவின் நிறம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக பீட்டா கரோட்டின் உள்ளது. உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளைப் பாருங்கள்.

கேரட் (கரோட்டின் என்பது லத்தீன் வார்த்தையான ‘கரோட்டா’ என்பதிலிருந்து வந்தது, அதாவது கேரட்) பூசணிக்காய், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை, மாங்கனி, திராட்சைப்பழம், ப்ரோக்கோலி, வெங்காயம், பட்டாணி, பிளம்ஸ், மிளகுத்தூள், கீரை, தக்காளி மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் - ஆர்கனோ, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், வோக்கோசு.

பீட்டா கரோட்டின் அறிவோம்!

பீட்டா கரோட்டின் என்பது தாவரங்களில் காணப்படும் ஒத்த நிறமியாகும், இது பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு தெளிவான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களை அளிக்கிறது. வைட்டமின் ஏ செல் வளர்ச்சி மற்றும் சரியான பார்வைக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும், மேலும் இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது . பீட்டா கரோட்டின்கள் மாலைக்கண் நோய் மற்றும் உலர் கண் நோயைத் தடுக்கின்றன. அவை வயது தொடர்பான மாகுலர் சிதைவை (AMD) குறைக்கலாம் (50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக ஏற்படும் மங்கலான பார்வையை ஏற்படுத்தும் ஒரு கண் நிலை).

பீட்டா கரோட்டின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இருதயநோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.வாய்வழி லுகோபிளாக்கியா உள்ளவர்களுக்கு நாக்கு, ஈறுகள் அல்லது கன்னங்களுக்குள் வெள்ளைப் புண்கள் இருக்கும். பீட்டா கரோட்டின்கள் இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க உதவும். வைட்டமின் ஏ ஆரோக்கியமான நுரையீரல் செயல்பாட்டிற்கும் முக்கியமானது மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.