Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடலுக்கு ஊட்டமளிக்கும் தங்கப்பால்!

நன்றி குங்குமம் டாக்டர்

தினமும் ஒரு டம்ளர் தங்கப்பால் சாப்பிட்டு வந்தால், தொண்டைச்சளி, தும்மல், இருமல் போன்றவை குறைந்து உடல் தெம்பாக இருப்பதை உணர முடியும். தங்கப்பால் என்ற பெயரைக் கேட்டவுடன் ஏதோ தங்கத்தைப் பாலில் உரசிக் குடிப்பதைத்தா தங்கப்பால் என்று பலரும் நினைக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளியவர்களும் குடிக்கக் கூடிய பானம்தான் தங்கப்பால். நன்கு காய்ச்சிய இருநூறு மில்லி லிட்டர் சூடான பாலில் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சிறிது சர்க்கரையோ அல்லது பனங்கற்கண்டோ சேர்த்து கலந்தால், பார்ப்பதற்கு தங்க நிறத்துடன் இருப்பதால் இப்பெயர் வந்தது. இதிலும் மேலும், மருத்துவக் குணத்தைக் கூட்ட, சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.

அதிக நாட்கள் நீடித்திருக்கும் காய்ச்சல், மனநோய், உடல் காய்ந்து இளைக்கச் செய்யும் நிலைகள், குடல் பலவீனத்தால் ஏற்படும் பெருமலப் போக்கு, ரத்தக்குறைவு, குடல் எரிவுள்ள நிலைகள், நீர் வேட்கை, இதயநோய், வயிற்றுவலி, மலக்கட்டு, சிறுநீரக அழற்சி, மூலம் ரத்தமாகக் கக்குவது, ரத்தபேதி, ரத்தமாகச் சிறுநீர் வெளியாவது, கருச்சிதைவு, அதிக உடற்பயிற்சியால் வாட்டம், பட்டினிக் களைப்பு இவற்றிற்கு பால் நல்லது. இதில்தான் மஞ்சள் தூளை நாம் கலக்குகிறோம்.

உணவாக ஏற்கப்படும் மஞ்சள் தொண்டையிலும் இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கிறது. கபம் சிறிது சிறிதாக வலியின்றிப் பிரிந்து வெளியாகிறது. நாக்கின் தடிப்பைக் குறைத்துச் சுவை கோளங்களுக்குச் சுறுசுறுப்பளித்து நல்ல சுவையுணர்ச்சியைத் தருகிறது. வாய், நாக்கு, தொண்டை, எகிறு, அண்ணம் முதலிய இடங்களில் ஏற்படும் வேக்காளத்தையும், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவற்றுக்குச் சுறுசுறுப்பு ஊட்டி பசி, சீரண சக்தியை உண்டாக்குகிறது. குடலில் புழு, கிருமி தங்கவிடாமல் வெளியேற்றிவிடுகிறது. காய்ச்சல் சூட்டைக் குறைக்க வல்லது.

மிளகு சுவையில் காரம் மிகுதி, கசப்பும் உண்டு. அதன் ஊடுருவும் தன்மை, சூடான குணம் காரணமாக, பசியை நன்கு தூண்டி உணவைச் சீரணிக்கச் செய்யும். உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும். கல்லீரல், குடல், சுறுசுறுப்புடன் இயங்கும். தொண்டையில் அடைக்கும் கபம் இளகி சுவாசக் கஷ்டம் நீங்கும்.

அதனால் பால் - மஞ்சள்தூள், மிளகு ஆகியவற்றின் சேர்க்கையை காலை, மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுபவர்களுக்கு தலை, மூக்கு, வாய் சார்ந்த சளி உபாதைகளை நன்கு போக்கிக் கொள்ள முடியும். அதனால் உடல் பலவீனமும் குறைந்து, உடல் தெம்பானது விரைவில் ஏற்படவும் இந்தத் தங்கப்பால் உதவுகிறது.

தொகுப்பு: தவநிதி