Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாய்வு பிரச்னையிலிருந்து விடுபட!

நன்றி குங்குமம் டாக்டர்

பலருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்னை வாய்வு தொந்தரவு. அதற்கு முக்கிய காரணம், உணவு பழக்கம்தான். இந்த வாய்வு பிரச்னை தொடரும்போது, அது வேறுசில பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, வாய்வு பிரச்னைகளிலிருந்து விடுபட சில எளிய வழிகளைப் பார்ப்போம்.

பால் பொருட்களில் கவனம் தேவை

வாய்வு பிரச்னைகளுக்கு மிக முக்கிய காரணம் பால் பொருட்கள் அதிகம் உண்பது. எனவே, பால் பொருட்களை எப்போதும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால், அவை வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். அதிலும் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் அதிகளவு வாய்வுத் தொல்லையை

ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

மூலிகை தேநீர்

வாய்வுத் தொல்லை அதிகம் இருப்பவர்கள், மூலிகைத் தேநீரை அருந்துவது நல்ல பலனைத் தரும். மூலிகைகள் செரிமானத்தை சீராக்குவதோடு வாய்வுத் தொல்லையில் இருந்தும் நிவாரணம் தரும். குறிப்பாக இஞ்சி, பட்டை போன்றவை சேர்க்கப்பட்ட தேநீரைப் பருகினால், செரிமானப் பாதையில் உள்ள பிரச்னைகள் நீங்கி, செரிமானம் சீராக நடைபெற்று, வாய்வுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கும்.

வேகமாக சாப்பிடாதீர்கள்

சிலருக்கு உணவை தட்டில் வைத்தவுடனேயே வேகவேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். அது முற்றிலும் தவறானது. அப்படி உணவை வேகமாக விழுங்கும்போது உணவுடன் சேர்த்து காற்றையும் அதிக அளவில் உள்ளிழுக்க நேரிடுகிறது. இதனாலும் வாய்வு தொந்தரவு ஏற்படும். ஆகவே உணவை உட்கொள்ளும்போது, மெதுவாக நன்கு மென்று உண்ண வேண்டும்.

கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்

பொதுவாக கொழுப்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும்போது, செரிமானம் மெதுவாகவே நடைபெற்று, உணவு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இப்படி உணவு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்போது, வயிற்றில் வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும். ஆகவே வாய்வு தொல்லையைத் தடுக்க, கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகள்

உருளைக்கிழங்கு, பீன்ஸ், பருப்புகள், முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். ஆகவே வாய்வு தொந்தரவு இருப்பவர்கள் இந்த காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

குளிர் பானங்கள்

குளிர் பானங்களை குடிக்கும்போது, அவை கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றி, அது வயிற்றில் செல்லும்போது வாயுவாக மாறும். அதிலும் குளிர்பானங்களை அவ்வப்போது தொடர்ந்து குடித்து வந்தால், வாய்வுத் தொல்லை ஏற்படுவதோடு, இன்னும் தீவிரமான சில பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். எனவே, குளிர்பானங்களை அடிக்கடி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

புகைப்பிடிக்கும் போது, புகையை உள்ளிழுப்பதால், புகைப்பிடிப்போருக்கு வாய்வுத் தொல்லை அதிக அளவில் இருக்கும். எனவேதான், தொடர்ந்து பல ஆண்டுகளாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இயல்பாகவே செரிமானக் கோளாறு பிரச்னை இருக்கும். இதன் காரணமாகவே வயிறு உப்புசமாக இருக்கும். ஆகவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுக்கு முன் நீர்

ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும் உணவுக்கு பத்து நிமிடம் முன்பு குறைந்தது 1 கப் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், செரிமான பாதையில் எவ்வித இடையூறும் இல்லாமல் உணவு சென்று செரிமானமடையும். இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுவது குறையும்.

பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம்

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள், சாப்பிடும்போது பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் சாப்பிடும்போது பேசுவதால், உணவுடன் சேர்ந்து காற்றும் வயிற்றினுள் செல்கிறது. இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுகிறது. ஆகவே பேசிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது

பொதுவாக உணவு உண்டவுடனேயே தூங்கச் செல்வது மிகவும் தவறான ஒன்று. அது உடல் நலத்தில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். அதில் ஒன்றுதான் வாய்வு பிரச்னையும். எனவே, உணவு உண்டதும் உடனே தூங்கச் செல்லாமல் சிறிது நேரம் நடப்பது நல்லது. மேலே சொன்ன பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் வாய்வு பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

தொகுப்பு: கவிதா பாலாஜி