Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

GBS குய்லைன் பேர் சிண்ட்ரோம் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

நவீன வாழ்க்கை முறை மாற்றங்களாலும், உணவு பழக்கங்களாலும் அவ்வப்போது பலவித நோய்கள் மனிதர்களை பாதிக்கிறது. அவற்றில் சில நோய்கள் குணப்படுத்தக் கூடியதாகவும் சில நோய்கள் குணப்படுத்த முடியாத அரிய நோயாகவும் இருக்கிறது. அந்த வகையில், மிகவும் அரிதான நோய்களில் ஒன்றாக இருக்கிறது ஜிபிஎஸ் எனும் குய்லைன் பேர் சிண்ட்ரோம் (GBS - guillain barre syndrome) நோய். இந்தியாவைப் பொருத்தவரை 1 லட்சம் பேரில் 8-10 பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். பத்து பேரில் மூன்று பேர் மரணத்தை தழுவுகின்றனர். இத்தனை அரிதான இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன, அறிகுறிகள் என்ன, சிகிச்சை முறைகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நரம்பியல் மருத்துவர் ப்ரீத்தா. அவர் கூறியதாவது:

ஜிபிஎஸ் என்பது அரிய வகை நரம்பியல் நோயாகும். அதாவது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே நமது உடலுக்கு எதிராக மாறும்போது இந்நோய் ஏற்படுகிறது. இது வைரஸ் தொற்றினாலோ அல்லது பாக்டீரியா தொற்றினாலோ ஏற்படுகிறது. பொதுவாக நமது உடலில் ஏதாவது தொற்று ஏற்படும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதனை எதிர்த்து போராடி நோயின் தீவிரத்தை குறைக்கும். ஆனால், இந்த வைரஸ் தொற்று ஏற்படும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு கூடுதலாகி அதுவே உடலுக்கு எதிராக மாறி நரம்புகளை பாதிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு நரம்பின் மேற்புறத்தில் படிந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது எந்தெந்த நரம்புகளில் எல்லாம் படிகிறதோ அதன் தொடர்புடைய உறுப்புகளை எல்லாம் செயலிழக்கச் செய்துவிடும் மிகவும் அரிதான ஆபத்தான நோய். இது பக்கவாதத்தில் ஒரு பிரிவு என்றும் சொல்லலாம். இது பெரும்பாலும், கை மற்றும் கால்களையே அதிகம் பாதிக்கும். இந்த நோய் சிறியவர் பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல் எந்த வயதினரையும் பாதிக்கலாம். அதே சமயம், வீட்டில் ஒருவருக்கு இந்நோய் ஏற்பட்டால் மற்றவருக்கு பரவக்கூடிய தொற்று நோயும் அல்ல. அதுபோன்று இது பரம்பரை காரணமாகவும் ஏற்படுவதில்லை.

ஜிபிஎஸ் நோய், வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டோம். இந்த கிருமிகள் பெரும்பாலும் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே பரவுகிறது. அதாவது சரியாக சமைக்கப்படாத உணவு, சுகாதாரமற்ற உணவு, மீந்துபோன உணவு, பழைய உணவுகளை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது, நீண்ட நாளான பழைய சீஸ்சை சாப்பிடுவது, நீண்ட நாள் பதப்படுத்திய இறைச்சிகளை சாப்பிடுவது, சரியாக சமைக்கப்படாத இறைச்சி உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் ஏற்படக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றாகும்.

இது மிகவும் ஆபத்தான நோய். இந்த நோயை பொருத்தவரை நோய் ஏற்பட்ட ஓரிரு நாட்கள் மற்றும் வாரங்களிலேயே தீவிரமடைந்து உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடலாம். இதன் அறிகுறிகள் என்று பார்த்தால், இது பக்கவாதத்தை ஒத்து இருக்கக் கூடியது. முதலில் கால் நரம்புகளில் இருந்து ஆரம்பித்து அப்படியே வயிற்றுப் பகுதிக்கு தொப்புள் கொடி வழியாக வந்து அப்படியே நெஞ்சுப் பகுதி, கழுத்து, தலை வரை சென்று பாதிக்கும். இதனால் கால்களை அசைக்க முடியாத நிலை, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படும். பாராலிஸ் அட்டக் ஏற்படுவது போன்று கால் ஒரு புறமாக கோணலாக போகும். முக பக்கவாதம் ஏற்படலாம். கைகள் பாதிக்கப்படலாம்.

*மேலும், இது மூச்சுக் குழாய் அடைப்பை ஏற்படுத்தலாம்.

*தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி முகவாதத்தை ஏற்படுத்தலாம்.

*கண்கள் சரியாக மூட முடியாமல் போகலாம்.

*கை - கால்கள் அசைவற்றுப் போய்விடும்.

*உடல் பலவீனம்

*கால்கள் நடப்பது கடினமாக இருப்பது.

*உட்கார்ந்து எழுவதில் சிரமம்.

*காலணியை கூட கால்களில் போட முடியாது.

*கைகளில் எந்த பொருட்களையும் தூக்கவோ பிடிக்கவோ முடியாது.

*சாப்பாடு விழுங்குவதில் சிரமம்.

*கழுத்து தூக்குவதில் சிரமம்.

*புரண்டு படுப்பது சிரமம்.

*தண்ணீர் கூட குடிக்க முடியாதபடி விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் நோய் ஏற்பட்ட ஓரிரு நாளில் தீவிரமாகும். ஒரு சிலருக்கு 3-4 நான்கு வாரங்களில் தீவிரமாகலாம். இதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்கவில்லை என்றால் மரணத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக பத்து பேருக்கு ஜிபிஎஸ் ஏற்பட்டால் அதில் மூன்று பேருக்கு மரணம் ஏற்படலாம். ஒருமுறை ஜிபிஎஸ் நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அதன்பிறகு அவர்களால் பெரும்பாலும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியாது. பலரும் அதன் பாதிப்புகளுடன் தான் வாழ வேண்டியது இருக்கும். அது எந்த வகை ஜிபிஎஸ் ஏற்பட்டிருக்கிறதோ அதைப் பொருத்து அதன் பாதிப்புகளும் இருக்கும்.

பொதுவாக ஐந்து வகையான ஜி பி எஸ் இருக்கிறது. அதில் டிமைலினேட்டிங் வகை மற்றும் ஆக்சோனல் வகை பொதுவானது. இவற்றுடன் தொடர்புடைய துணை வகைகள் கடுமையான அழற்சி டிமைலினேட்டிங் பாலிராடிகுலோனூரோபதி (AIDP): மிகவும் பொதுவான வடிவம் (60-90%)ஆக்சோனல் துணை வகைகள்: கடுமையான மோட்டார் ஆக்சோனல் நியூரோபதி (AMAN) (வரலாற்று ரீதியாக சீன பக்கவாத நோய்க்குறி); கடுமையான மோட்டார்-உணர்ச்சி ஆக்சோனல் நியூரோபதி (AMSAN).

பிராந்திய GBS நோய்க்குறிகள்: மில்லர் ஃபிஷர் மாறுபாடு (MFS/MFV), அட்டாக்ஸியா, ஆப்தால்மோப்லீஜியா மற்றும் பலவீனம் இல்லாத அரேஃப்ளெக்ஸியா ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் GQ1b எதிர்ப்பு ஆன்டிபாடிகள் உள்ளன; பாலிநியூரிடிஸ் கிரானியாலிஸ் போன்றவை ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான அறிகுறிகளும், பாதிப்புகளும் இருக்கும். இவற்றிற்கு சிகிச்சை அளித்தாலும், 80 சதவீதம் சரி செய்ய முடியும். மீதமுள்ள 20 சதவீதம் கேள்விக்குறிதான். பிசியோதெரபி போன்றவற்றின் மூலம் குணப்படுத்த முயற்சிக்கலாம். எனவே, நார்மலான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவது சற்று கடினமானதுதான்.

ஜிபிஎஸ்ஸில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்னவென்றால், பெரும்பாலும் வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட, சுகாதாரமான உணவுகளை உண்ண வேண்டும்.சரியாக சமைக்கப்படாத இறைச்சி வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் தொடர்ந்து கடுமையான வலியுடன் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த நோயை பொருத்தவரை எவ்வளவு விரைவில் நோயை கண்டு அறிகிறோமோ அதைப் பொருத்து தீவிர பாதிப்புகளை தவிர்க்க முடியும். அதுபோன்று முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கால்களில் மரத்துபோகிற உணர்வு ஏற்பட்டு அது கீழ் இருந்து மேல் பகுதியை நோக்கிச் செல்வது போன்று உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்