நன்றி குங்குமம் தோழி
பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் போல் இளம் பெண்களும், கல்லூரி மாணவிகளும் ஒல்லியா, ஃபிட்டா இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இப்போதெல்லாம் ‘டயட்டில் இருக்கிறேன்’ என்று காலை நேர உணவுகளை சாப்பிடாமல் இருக்கும் மாணவிகளும், இளம் பெண்களும் உண்டு. அவ்வாறு இருந்தால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். மேலும், பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும் பழக்கம் இன்று இளம் வயது பெண்களையும் ஆண்களையும் தொற்றிக் கொண்டுள்ளது.
பழங்களை மட்டும் உணவாக சாப்பிடுவது எந்தளவுக்கு உடலுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளைத் தரும் என்று விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
‘‘பழங்கள் மற்றும் பழச்சாறுகளை மட்டுமே உட்கொண்டு டயட்டில் வாழ்ந்த ஒரு இளைஞர் திடீரென்று மரணமடைந்துள்ளார். முழுநேர பழ உணவுகளை எடுத்துக் கொண்ட ஆணுக்கு ஏற்பட்ட உயிர் அபாயம், ஸ்லிம்மாக வேண்டும் என்று பழ உணவுகளை எடுத்துக் கொண்டு உடலை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும் பெண்களுக்கும் அதே நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண், பெண்களுக்கு இருப்பது நல்லதுதான். ஒருவர் சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிகமாக இருப்பது ஏன்? உடலில் தேவையின்றி பல வருடங்களாக சேரும் கொழுப்புதான் எடை கூடுவதற்கு காரணம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் உள்ள கலோரிகள் மற்றும் மாவுச்சத்தினை குறைப்பார்கள். உடற்பயிற்சி என இந்த மூன்று வழிகளை பெரும்பாலானவர்கள் கடை பிடிப்பார்கள்.
உடலுக்கு மாவுச்சத்து (Carbohydrates), கொழுப்புச் சத்து (Fats), புரதச்சத்து (Protein) அத்தியாவசியமானவை. மாவுச்சத்தைக் குறைத்தால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தை கட்டாயம் ஓரளவு கூட்ட வேண்டும். உடலின் வளர்ச்சிக்கும், தசைகள் மற்றும் அனைத்து திசுக்களுக்கும் புரதச்சத்து உதவும். இதைக் குறைக்கக் கூடாது. ஆனால், பலரும் மாவுச்சத்தையும் குறைத்து, போதிய கொழுப்புச் சத்தும் இல்லாமல், புரதச்சத்தும் தேவையான அளவு உட்கொள்ளாமல், உடல் எடை குறைக்கிறேன் என்று வலைத்தளங்கள் மூலம் தாங்களாகவே உணவு முறையை தீர்மானிக்கிறார்கள்.
உடல் எடை குறையும் போது ஏற்படும் நுண்சத்து, தாது உப்பு குறைபாடுகள், இழப்புகளை ஈடு செய்து கொள்ள வேண்டும். முழுக்க முழுக்க பழங்களையும் பழச்சாறுகளையும் உணவாக உட்கொள்ளும் போது ஒட்டுமொத்த மாவுச்சத்தும் குறைந்து கலோரியும் குறைவதால், உடல் எடை குறையும். ஆனால், அது ஆரோக்கியமானது அல்ல. முழுநேர பழ உணவு முறையில் சில வைட்டமின்கள் குறிப்பாக விட்டமின் சி அதிகமாக உடலுக்குக் கிடைக்கும். பழங்களில் பி12, இரும்புச் சத்து, கால்சியம், கொழுப்பு, அமிலங்கள், விட்டமின் டி போன்றவை மிக மிகக் குறைவாக உள்ளது. இலை பழச்சாறுகளில் முற்றிலும் இல்லை. இதனால் நரம்பு அழற்சி, மூளைத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம், ரத்த சோகை ஏற்படக்கூடும்.
பழங்களில் நார்ச்சத்து அதிகம். அதில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. நார்ச்சத்து மலச்சிக்கலுக்கான மருந்து, குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிப்புக்கு உள்ளாகும். ஆனால், அதுவே அளவுக்கு மிஞ்சும் போது அதிகமான நொதித்தலால் குடலில் வாயுவை அதிகளவு உற்பத்தி செய்து, வயிற்று உப்புசத்தை உண்டாக்கலாம். பழங்களில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் பழங்களை உண்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைவில்லாமல் கிடைக்கும். அதே சமயம் பல பழங்களில் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்கும்.
இதனால் அதிகப்படியான சர்க்கரையைக் கையாள இன்சுலின் அதிகமாக சுரந்து சிறுநீரகங்களுக்கு வேலைப்பளு கூடும். அடுத்து, பழங்களில் ஃப்ரக்டோஸ் என்னும் சர்க்கரை உள்ளது. இந்த
சர்க்கரையைக் கல்லீரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். அளவுக்கு அதிகமாக ஃப்ரக்டோஸ் சர்க்கரையை கல்லீரல் கொழுப்பாக மாற்றி உள்ளுறுப்புகளிலும், கல்லீரலிலும் சேமிக்கும். இதனால்
கல்லீரலில் கொழுப்பு சேரும் ஆபத்து ஏற்படலாம்.
பழங்கள் ஆரோக்கியமானவை என்று நினைத்து அதிகமான பழங்கள் சாப்பிட்டு வரும் உடல் பருமன் உள்ளவர்கள் பலர் சர்க்கரை நோயாளிகளாக மாறி இருக்கிறார்கள். இதற்குக் காரணம், ஏற்கனவே இருக்கும் உடல் பருமன், நீரிழிவு, கல்லீரல் கொழுப்பு அனைத்தும் கூட்டணி அமைத்து உடலைப் பாதிக்கும். அதிகளவு பழங்கள் வழியான ஃப்ரக்டோஸை உட்கொள்ளும் போது, அது சர்க்கரை எதிர்ப்பு சக்தியை மோசமாக்கும் என்கின்றன ஆய்வுகள்.
பழங்களில் புரதச்சத்தும், கொழுப்புச் சத்தும் (அவகாடோ தவிர) மிகவும் குறைவு என்பதால் பழங்களையே பிரதானமாக உண்பவர்களுக்கு நாளடைவில் தசை வலு இழக்கும். பழங்களை அளவாகச் சாப்பிட வேண்டும். முழு உணவாக மாற்றிக் கொள்ளக் கூடாது. இன்சுலின் சுரப்பு குறைவாக உள்ளவர்கள், பழங்களை மிகக் குறைவாக உண்பதே நல்லது. இன்சுலின் குறைபாடு உள்ளவர்கள் பழங்களை சிற்றுண்டி போல சாப்பிடலாமே தவிர முழு உணவாக உண்ணக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதனால் உணவுமுறையில் எச்சரிக்கையாக இருப்போம்” என்றார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
தொகுப்பு: பாரதி