Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிறப்பு முதல் 5 வயது வரை…

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி

பொதுவாக பிறந்தது முதல் ஐந்து வயது வரைதான் குழந்தைகள் வீட்டில் அதிக நேரம் செலவிடும் காலகட்டம் ஆகும். இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு வீடே பள்ளியாகவும் பெற்றோரே ஆசிரியராகவும் விளையாட்டே கல்வியாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியை பற்றி தெரிந்துகொண்டு பெற்றோர் அவர்களை வழிநடத்தும்போது, குழந்தைகள் உடல் நலனும் மனநலனும் பெற்று எல்லாவகைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

ஒன்று முதல் ஐந்து வயது வரை குழந்தைகளின் உணவு முறை:

குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். 6 மாதம் முதல் ஒரு வயது வரை கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உணவுகளை கொடுக்க தொடங்கலாம். ஒரு வயது முதல் குழந்தை எல்லா உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கலாம். குழந்தையின் உடல்வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக்கு சரிவிகித உணவுகளை தருவது மிகவும் அத்தியாவசியமானது. 5 வயது வரை உள்ள குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது.

இது ஒருவகையில் உண்மையே! இந்த வயது குழந்தைகளால் அதிகளவு உணவு உட்கொள்ள முடிவதில்லை. இதுவே அவர்கள் சரியாக சாப்பிடாததற்கு காரணம். எனவே, அவர்களுக்கு கொடுக்கும் உணவில் எல்லா சத்துக்களும் அடங்கி இருப்பது போல் பார்த்துக் கொள்வது அவசியம்.இந்த வயதில் குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய உணவுகள். தானியங்கள் - அரிசி, கோதுமை, ராகி, கம்பு போன்றவை.

புரதச்சத்து மிகுந்த பருப்புவகைகள் முட்டை, மீன், இறைச்சி, நட்ஸ், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், நெய் போன்றவை ஆகும்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள்

இந்த வயது குழந்தைகள் ஒருநாளில் 5 விதமான காய்கறிகள் மற்றும் பழங்களை சுவைத்துப் பழக வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி, மீன், கீரை வகைகள் ஆகியவற்றை கொடுப்பதால் ரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கலாம்.அதிக அளவு சர்க்கரை, உப்பு நிறைந்த நொறுக்கு தீனிகள் கொடுப்பதை தவிர்க்கவும். சுண்ணாம்பு சத்து சரியான அளவு குழந்தைக்கு கிடைக்க, 1-2 வயது வரை தினமும் 400 மி.லி. அளவு தண்ணீர் கலக்காத மாட்டுப்பால் காய்ச்சி கொடுக்க வேண்டும்.

3-5 வயது வரை 300 மி.லி. மாட்டுப்பால் தண்ணீர் கலக்காமல் காய்ச்சி கொடுக்க வேண்டும். பால் சார்ந்த பொருட்களான தயிர், சீஸ் போன்றவற்றையும் கொடுக்கலாம். டீ, காபி குழந்தைகளுக்கு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.குழந்தைகளுக்கு தனியாக உணவு ஊட்டுவதைவிட குடும்பமாக அமர்ந்து சாப்பிடும்போது குழந்தையை அருகில் அமர வைத்துக்கொண்டு, அதுவே தானாக எடுத்து சாப்பிடும் பழக்கத்தை பழக்குவது நல்லது. இதன் மூலம் குழந்தைகள் சிறுவயது முதலே எல்லாருடனும் பழகுவதற்கும் பேசுவதற்கும் ஒரு தருணமாக அது அமையும்.

பெரியோர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது குழந்தைகளும் அதைப் பின்பற்றுவர். அதனால் பெரியோர்கள் குழந்தைகளுக்கு உணவு பழக்க வழக்கங்களில் எப்போதும் முன்மாதிரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் கலந்த உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்ள பழக்கிக்கொண்டால் அது அவர்களின் வாழ்நாள் முழுவதற்கும் உடல்நலம் பேணவும் ஆரோக்கியமாக வாழவும் உறுதுணையாக இருக்கும்.

குழந்தை சாப்பிட மறுக்கும் சில உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்க்காமல், சிறிது சிறிதாக அவர்கள் விரும்பும் வகையில் விதவிதமாக சமைத்து சாப்பிட பழக்கிக் கொடுக்க வேண்டும்.

ஒரு உணவை பலமுறை சுவைக்க கொடுக்கும்போது அவர்கள் அதை சாப்பிட பழகுவார்கள். உணவு எடுத்துக்கொள்ளும் முன்னும் உணவு சாப்பிட்டு முடித்த பின்னும் கைகளை

சோப்புப் போட்டு பழக்கித் தர வேண்டும்.குழந்தை சாப்பிடும்போது, தனியாக விட்டுச்செல்லக் கூடாது. அருகில் இருந்து கவனிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

*குளிர்பானங்கள்

*பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள்

*துரித உணவு வகைகள்

*பொறை ஏற்படுத்தக் கூடிய முழு நட்ஸ் வகைகள், பொட்டுக் கடலை, வேர்க்கடலை போன்றவை

தூக்கம்

*குழந்தைகள் பிறந்த முதல் வருடத்தில் 12-16 மணி நேரம் தூங்குவார்கள்.

*1 லிருந்து 2 வயது வரை 11 - 14 மணி நேரம் தூங்குவது அவசியமாகும்.

*3 வயதில் இருந்து 5 வயது வரை 10 முதல் 13 மணி நேரம் வரை தூங்குவது அவசியமாகும்.

தூக்கத்தின் முக்கியத்துவம்

தூக்கத்தின்போது உடல் வளர்ச்சிக்கான மிக முக்கியமான வளர்ச்சி ஹார்மோன்களை உடல் வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் தசைகளை வலுவாக்க உதவுகிறது. திசுக்கள் புதுப்பிக்கிறது. எலும்புகளின் உறுதியான வளர்ச்சியை தூண்டுகிறது.மேலும், குழந்தைகள் தூங்கும்போது மூளை நினைவுகளை ஒருங்கிணைத்து கற்றலுக்கு தேவையான தொடர்புகளை உருவாக்குகிறது. இதனால், போதுமான தூக்கம் மிக மிக அவசியமாகும்.

இப்படி சரியான முறையில் தூக்கம் பெறும் குழந்தைகள் கல்வியில் சிறப்பாக செயல்படுகிறார்கள். கூர்மையான நினைவாற்றலைக் கொண்டுள்ளார்கள். மேலும் புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளனர்.தூக்கத்தைப் பற்றி நாம் அறியாத விஷயங்களில் ஒன்று, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதில் தூக்கமும் பங்கு வகிககிறது என்பது. இதனால் குழந்தைகள் தொற்றுநோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி பெறுகின்றனர். நோய் ஏற்பட்டாலும் அதிலிருந்து வேகமாக மீண்டு வருகின்றனர்.

அதனால் ஆரோக்கியத்தை பேணுவதற்கு, போதுமான அளவு ஆழ்ந்த தூக்கம் அவசியமாகிறது. மேலும், அதிக கவனம் மற்றும் கற்றலில் ஈடுபாடு ஆகியவற்றை தூக்கம் மேம்படுத்துகிறது.

போதியளவு நன்கு ஓய்வு எடுக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் உணர்ச்சி ரீதியாக சமநிலையுடனும் தங்கள் சகாக்களுடன் நேர்மறையான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் தன்மையுடன் விளங்குகிறார்கள்.

குழந்தைகள் ஆரோக்கியமான தூக்கத்தை பெற சில வழிறைகள்:

குழந்தையின் தூங்கச் செல்லும் நேரத்தை நிர்ணயித்து அதையே பின்பற்ற பழக்க வேண்டும்.தூங்கும் நேரம் மற்றும் விழித்திருக்கும் நேரத்தை மாற்றாமல் ஒரே நேரமாக கடைப்பிடியுங்கள்.

தூங்கப் போகும் முன் குளித்து உடை மாற்றுவது நல்ல தூக்கத்தை தரும்.குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு, குழந்தையின் அறையில் உள்ள விளக்குகளை அணைத்துவிடுங்கள். மற்றும் கைப்பேசி, தொலைக்காட்சியை குழந்தைகள் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

மாறாக பாட்டுப்பாடுவது, கதை சொல்வது, குழந்தைக்கு பெற்றோருடன் இணைப்பை ஏற்படுத்தும். மேலும் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள் நன்றாக இரவில் தூங்குவர். குழந்தைகள் நல்ல தூக்கத்தின் முக்கியத்துவத்தை கற்றுக் கொள்ளும்போது இந்தப் பழக்கத்தை அவர்களது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

- தொடர்ச்சி அடுத்த இதழில்