Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கியம் காக்க உதவும் உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் நலத்திற்கும் வாழ்க்கைக்கும் உணவே மருந்து என்பார்கள். எனவே, நாம் சாப்பிடும் உணவை சரியாக சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். அவற்றை தெரிந்துகொள்வோம்.

இன்று உணவுப் பழக்கம் மாறிவிட்டது. அதற்குக் காரணங்கள் பல உள்ளன. அதிலும் இன்று கணவன் மனைவி இருவருமே வேலைக்கும் போக வேண்டிய பொருளாதார நிர்ப்பந்தம். இதனால் வீட்டில் பொறுமையாக சமைத்திட நேரமற்ற சூழ்நிலை. அதனால் பெரும்பாலும் உணவகங்களில் சென்று சாப்பிடுவது அல்லது பார்சலாக வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிடுவது போன்ற பழக்கங்களினால் உடல் நலம் பாதிக்கிறது.

உதாரணமாக இட்லியை எடுத்துக் கொள்வோம். வீட்டில் நாம் அரிசியையும், உளுந்தையும் நன்கு ஊறவைத்து அதை அரைத்து சரியாகப் புளிக்க வைத்து பிறகு இட்லியாக சாப்பிடுகிறோம். வீட்டில் சுட்ட இட்லி அளவில் சிறியதாக இருக்கும். அதில் சுமார் 30 அல்லது நாற்பது கலோரிகள்தான். ஆனால் உணவகங்களில் இட்லி பெரியதாக இருக்கும். மேலும் அவர்கள் உளுந்தை மட்டும் ஊற வைத்து அரைத்து அதில் அரிசி மாவை நேரடியாகக் கலந்து உடனே இட்லியைத் தயாரிக்கிறார்கள். இது சுமார் 100 கலோரிகள் கொண்டதாகி வருகிறது. இதனால் செரிமானக் கோளாறு உண்டாகும். உடல் நலத்திற்கு கேடு தரும். ஆகவே வீட்டு இட்லியே உடலுக்குச் சிறந்தது.

அடுத்து, பால், தயிர், பாலாடைக்கட்டி. இவற்றில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. குறிப்பாக கால்சியமும் பாஸ்பரஸும் சரிசமமாக உள்ளன. எலும்புகளுக்கும் பல்லுக்கும் ரத்த ஓட்டத்திற்கும் பால் மற்றும் தயிர் இவைகளில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் மேலும் பாஸ்பரஸ் வலுவைத் தருகிறது. எனவே வீட்டிலேயே பாலைக் காய்ச்சி உறை ஊற்றி தயிராக்கி சாப்பிடுவதே நல்லது. இதில் 3000 நல்ல நுண்ணுயிரிகள் உள்ளன.

மதிய உணவை கூட்டு, பொரியல், சூப், பச்சடி, சிறுதானியங்கள் மற்றும் மீன் முட்டை, சிக்கன் என ஐந்து வகையாக சாப்பிட வேண்டும். சாப்பாட்டுத் தட்டில் பாதியளவு காய்கறிகள். இதில் பொரியல், கூட்டு, பச்சடி மற்றும் அவியல், இவற்றுடன் கால் பகுதி அளவு சிறுதானிய வகையிலான உணவுகள், அசைவ உணவாளர்கள் மீன், முட்டை, இறைச்சி என கால் பகுதியை இதில் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

வத்தல், வறுவல் வேண்டாம்

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 15 மில்லிகிராம் எண்ணெயே போதும், அதாவது மூன்று மேசைக்கரண்டி அதில் நல்லெண்ணெய், ஒரு மேசைக்கரண்டி நெய், ஒரு மேசைக்கரண்டி சூரியகாந்தி அல்லது அரிசி தவிட்டு எண்ணெய் என மூன்று எண்ணெய்களில் தனியாக சமைத்து சாப்பிட வேண்டும். அளவாக எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். புரதம் மற்றும் மாவுச்சத்து, மேலும் நார்ச்சத்துள்ள உணவுகளை சமைத்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். உடல் பருமன், இதயநோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதுடன் தினமும் இனிய இசை கேட்பது போன்ற நல்ல பழக்கங்கள் வாழ்க்கையின் அங்கமாக மாறினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக அமையும்.

இன்றைய நாளில் உணவுப்பழக்கம் அடியோடு மாறிவிட்டது. அதுவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு ஒரு காரணம்.காரில் அமர்ந்தும், மேசையில் இருந்தும், நடந்து கொண்டும், நின்று கொண்டும் சாப்பிடுவது, விரைவு உணவகங்களில் சாப்பிடுவது என்றாகிவிட்டது. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவது போன்றவற்றால் ஆரோக்கியம் கெடுகிறது.

கம்பு மற்றும் சம்பா ரவை போன்றவற்றில் உப்புமா மற்றும் கஞ்சி தயாரித்து சாப்பிட வேண்டும். இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. ஆனால் அதைப் பொறுமையாக வீட்டில் சமைக்க முடியாததால் ரெடிமேட் உணவுகள் வாங்கி அதில் சமைத்துச் சாப்பிடுகிறோம்.ரவா உப்புமா, மைதா தோசை, சேமியா கிச்சடி போன்ற உணவுகளை அதிக எண்ணெய் சேர்த்து சமைப்பதும், சாப்பிடுவதும் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

நம்மோடு வாழும் 90 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரையும் ரத்த அழுத்தமும் இல்லை. இன்று சுமார் 40 வயதுள்ளவர்களுக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அதிகம். குறிப்பாக இரண்டு மூன்று தலைமுறையாகத்தான் இப்படி ஆனது. ஏனென்றால் முறையான உணவுப் பழக்கம் இல்லை. மொத்தத்தில் ஐந்து வகையான உணவுகள், வகை வகையாகச் சாப்பிட வேண்டும்.தானியங்கள், நார்ச்சத்துள்ள புரதம் அடங்கிய பருப்பு, சென்னா போன்றவை.காய்கறிகள், உயர்ந்த வகையான காய்கள் நம்மிடம் உள்ளன.

கீரைகள் மற்றும் பழ வகைகள், சீசன் பழங்களான தர்பூசணி, மாம்பழம் போன்றவை. கொய்யா, மாதுளை போன்றவை எப்போதும் கிடைப்பவை.சிறுதானிய வகைகள் கம்பு, கேழ்வரகு போன்றவை.அசைவ உணவாளர்கள் என்றால் மீன், முட்டை, இறைச்சி ஆகியன. ஆனால் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட வேண்டும். மேலும், கனிம சத்து, புரதம், நார்ச்சத்து போன்றவை அடங்கிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தொகுப்பு: தவநிதி