நன்றி குங்குமம் டாக்டர்
*வாதம் சம்பந்தமான நோய்களை அவரைக்காய் போக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பிஞ்சு அவரைக்காயை சமைத்து உண்ணலாம். ரத்த கொதிப்பைக் குறைக்கும் திறன் இதற்கு உண்டு.
*சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மார்புச்சளி, கபத்தை போக்குவதோடு, வயிற்றுப் பூச்சிகளையும் கொல்லும்.
*சிறுபசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டுவர மலத்தை இளக்கி, வெளியேற்றும். உடல் சூடு தணியும்.
*வாயுத் தொல்லையில் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி குடிக்க, வாயுத்தொல்லை நின்றுவிடும். மன இறுக்கம், படபடப்பு குறையும்.
*ஓமம், மிளகு, உப்பு இவற்றை பொடித்து வைத்துக்கொண்டு காலை வேளைகளில் சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
*ஊறவைத்த அத்திப்பழம் பசி எடுக்காத குழந்தைகளுக்கும் பசி எடுக்க வைக்கும். மாதவிடாய் பிரச்னையை நீக்கும் சக்தி இதற்கு உண்டு.
*நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட, விக்கல் நிற்கும்.
*முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட, இருமல் நிற்கும்.
*மிளகு மூன்று அல்லது நான்கு எடுத்து கொஞ்சம் வெல்லத்துடன் சேர்த்து மென்று சாப்பிட இருமல், நீர்க்கோர்வை குணமாகும்.
*அறுகம்புல்லை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி கற்கண்டு சேர்த்து அருந்தி வர மூச்சிரைப்பு குணமாகும்.
*இதயம் பலம் பெற, மார்பு வலி தீர 200 மிலி தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று செம்பருத்திப் பூவை போட்டு கொதிக்கவைத்து குளிர்ந்ததும் வடிகட்டி அதனுடன் சிறிதளவு தேன் கலந்து காலை, மாலை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
*வில்வ இலையை காய்ச்சி குடிக்க, காய்ச்சல் குணமாகும்.
*உணவில் வாழைத்தண்டை அடிக்கடி சேர்த்துக் கொள்ள குடல் இயக்கம் மேம்படும். ரத்தக் கொதிப்பு மட்டுப்படும்.
*ஓமம், பனங்கற்கண்டு மிளகு இவற்றை காய்ச்சியப் பாலுடன் சேர்த்து குடிக்க, சளி குறையும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகும்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்


