Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவுப் பொருளுக்கும் ஆயுள் உண்டு!

நன்றி குங்குமம் டாக்டர்

Shelf life அறிவோம்!

செல்ஃப் லைஃப் என்பது ஓர் உணவுப் பொருளைப் பயன்படுத்தத் தகுதியான காலம் எவ்வளவு என்பதைக் குறிப்பதாகும். இந்தக் காலம் என்பது சில பொருட்களுக்கு நுகர்வதற்கான கால எல்லையாக இருக்கலாம். சில பொருட்களுக்கு விற்பனை செய்வதற்கான கால எல்லையாகவும் இருக்கலாம். பொதுவாக, ஒரு பொருளை மார்க்கெட்டின் செல்ஃப்பில் அடுக்கி வைக்கத் தகுதியான கால எல்லையை இது குறிப்பதால், செல்ஃப் லைஃப் எனப்படுகிறது.

எனவே, விற்பனை செய்வதற்கான காலம் முடிவடைந்த ஒரு பொருள் நுகர்வதற்கான காலம் முடிவடைந்தது என்று பொருள் அல்ல. உணவுப்பொருட்கள், பலவகைப்பட்ட பானங்கள், காஸ்மெட்டிக்ஸ், மருந்துகள், ஊசிகள், மருத்துவப் பொருட்கள், வேதிப்பொருட்கள், ரப்பர்கள், பாட்டில்கள் போன்ற பலவகையான பொருட்களுக்கும் இப்படி செல்ஃப் லைஃப் உள்ளது. சிலவகைப் பொருட்களின் செல்ஃப் லைஃப் முடிந்தது என்றால் அவை பயன்படுத்தத் தகுதி இல்லாதவை என்று பொருள் இல்லை.

அவற்றின் வீரியம் அல்லது பலன் சற்று குறைவாகக்கூடும். ஆனால், சிலவகை பொருட்களின் செல்ஃப் லைஃப் முடிந்தபிறகு அவற்றைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, செல்ஃப் லைஃப் என்று சொன்னாலும் அதைப் பொதுவான கலைச்செல்லாகப் பாவிக்க முடியாது.ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மூலக்கூறுப் பண்புக்கு ஏற்ப அழுகிப்போகும், மட்கிப்போகும், சிதைந்துபோகும் காலம் ஒன்று உண்டு. வெயில், சூடு, ஈரப்பதம், வாயுக்களின் மாறுபாடு, நுண்ணுயிர்களின் பெருக்கம் மற்றும் அழிவு ஆகிய பல காரணங்களைக் கொண்டே ஒரு பொருளின் செல்ஃப் லைஃப் உருவாகிறது.

கேன் உணவுகள்

தற்போது, தயிர் முதல் கோலா பானங்கள் வரை பல்வேறு பொருட்கள் கேன் வடிவில்வருகின்றன. கேன் உணவுகளை உறைந்துபோகும் வெப்பநிலையில் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அதேபோல அதிகபட்சமாக 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வைக்க வேண்டும். கேன்கள் நசுங்காமல், அடிபடாமல் இருந்தால் அவை பயன்படுத்த ஏற்றவை. கேன்கள் அடிபட்டு நசுங்கியிருக்கும்போது அவற்றில் காற்று உட்புகுந்து வேதிமாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும். உயர் அமிலங்கள் நிறைந்த தக்காளி, பழங்களால் தயாரிக்கப்பட்ட கேன் உணவுப்பொருட்கள் 12 முதல் 18 மாதங்கள் வரை தரமானதாக இருக்கும். குறைந்த அமிலங்கள் நிறைந்த உணவுப்பொருட்களான மாமிசங்கள், காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட கேன் உணவுகள் சுமார் இரண்டு முதல் ஐந்து வரைகூட தாக்குப்பிடிக்கும். இதை 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

நுண்ணுயிர் மாற்றங்கள்

சில சமயங்களில் உணவுப் பொருட்களில் வசிக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் அந்தப் பொருளின் செல்ஃப் லைஃப்பைத் தீர்மானிப்பவையாக உள்ளன. பாக்டீரியா போன்ற கிருமிகள் தாக்குதலுக்கு உள்ளான உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதே நல்லது. இல்லை எனில், ஃபுட் பாய்சன் எனப்படும் உணவே நஞ்சாய் மாறும் ஆபத்து ஏற்படும். உதாரணமாக, பாஸ்டுரைஸ்டு பாலை முறையாகப் பதப்படுத்தி வைத்திருந்தால் அதன் விற்பனைத் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் வரை தாங்கும். ஆனால், பதப்படுத்தும் முறையில் பிரச்சனை இருந்தால் அது விற்பனைத் தேதிக்கு முன்பே பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறிவிடும்.

மருந்து மாத்திரைகளின் ஆயுள்

மருந்து, மாத்திரைகளில் எக்ஸ்பயரி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக, பல மருந்து, மாத்திரைகள் எக்ஸ்பயரி தேதிக்குப் பிறகும் பயன்படுத்த ஏற்றவையே. எதற்கு ரிஸ்க் என்று வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காகச் சற்று முன்பாகவே அந்தத் தேதியை அச்சிட்டிருப்பார்கள். மருந்து, மாத்திரைகளின் எக்ஸ்பயரி தேதிக்குப் பிறகு அவற்றைப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது.

ஆனால், அந்த மாத்திரை சுத்தமாக தன் வீரியத்தை இழந்திருக்கக்கூடும். அரிதாகச் சிலருக்கு சிறுநீரகப் பிரச்சனைகள், செரிமானப் பிரச்சனைகள், குடல்புண் போன்றவை ஏற்படலாம். எனவே, மருந்து மாத்திரை விஷயங்களில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்துப் பராமரிக்க வேண்டிய மருந்துகளை பதப்படுத்திப் பயன்படுத்துவதே நல்லது. சிறிது சந்தேகம் இருந்தாலும் மருத்துவரிடம் கேட்டுவிட்டுப் பயன்படுத்தலாம்.

தேதிக்கு என்ன பொருள்?

செல்ஃப் லைஃப் என்பது பொது சொல். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் அதன் பயன்பாட்டுக்கான காலத்தை வேறு வேறு சொற்களால் குறித்திருப்பார்கள். அதைப் பற்றிப் பார்ப்போம்.

Best before or Best by date

உறைபனிநிலையில் குளிரூட்டப்பட்ட பொருட்கள், உலர்ந்த பொருட்கள், டின் பொருட்கள் போன்றவற்றில் இப்படி அச்சிட்டிருப்பார்கள். இந்தப் பொருட்களை இதில் குறிப்பிட்டிருக்கும் காலத்துக்குள் பயன்படுத்தினால் இதன் தரம் சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருள். இந்தத் தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால் பிரச்னை ஏதும் இருக்காது. உலர்ந்த பொருட்கள் என்றால் நமத்துப்போயிருக்கக்கூடும்; டின் பானங்கள் என்றால் சுவை குறைந்துப் போயிருக்கக்கூடும். சில சமயங்களில் கோழி முட்டை அட்டையில் இந்த வாசகத்தை அச்சடித்திருப்பார்கள். கோழி முட்டைகளில் சால்மோனெல்லா எனும் உடலுக்கு தீங்கு செய்யும் பாக்டீரியா பரவக்கூடும் என்பதால் அதை மட்டும் குறித்த தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும்.

Use by date

யூஸ் பை என்று குறித்திருந்தால் அந்த உணவுப் பொருட்களை அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும். அதைக் கடந்து பயன்படுத்தினால், ஃபுட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேபோல யூஸ் பை என்று குறிப்பிட்டிருக்கும் பொருட்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்பான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். பால், நெய் போன்ற உணவுப் பொருட்கள் இந்தப் பிரிவில் அடங்கும். அதுபோலவே சில உணவுப் பொருட்களின் குறித்த தேதிக்கு முன்பாக என்றும் அச்சிட்டிருப்பார்கள்.

Open dating

ஒரு பொருள் எப்போது இருந்து சந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர் அறிந்துகொள்வதற்காக இந்த ஓப்பன் டேட் முறை அச்சிடப்படுகிறது. நீங்கள் பார்க்கும் போது ஒரு பொருளின் ஓப்பன் டேட் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தால் கடந்த இருமாதங்களாக அது விற்பனைத் தயாராக இருக்கிறது என்று பொருள். இதற்கும் யூஸ் பை தேதிக்கும் தொடர்பு இருக்காது. ஒருவேளை தொடர்பு இருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

Sell by (or) Display until

சூப்பர் மார்க்கெட்களில் முதலில் எக்ஸ்பயரி ஆகும் பொருட்கள் முன் வரிசையிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அதன் பின்புறமும் அடுக்கப்பட்டிருக்கும். புதிதாக உற்பத்தியாகி கடைக்கு வந்த பொருட்களை முன் வரிசையில் அடுக்கினால் பின் வரிசையில் உள்ள பொருட்கள் காலாவதியாகி வீணாகிவிடும் என்பதற்காக இப்படி அடுக்குவார்கள். செல் பை அல்லது டிஸ்ப்ளே அண்ட்டில் அச்சிடப்படுவது விற்பனையாளர்களின் வசதிக்காகத்தான். சரக்குகளை தேதிவாரியாகப் பயன்படுத்தவே இவை அச்சிடப்படுகின்றன. செல்பை தேதிக்குப் பிறகும் ஒரு பொருளில் யூஸ் பை தேதி இருந்தால் குழம்ப வேண்டாம். தாராளமாக அந்தப் பொருளைப் பயன்படுத்தலாம். ஆனால், நடைமுறையில் பெரிய சூப்பர் மார்க்கெட்களில் செல் பை முடிந்த பொருட்களை வைத்திருக்கமாட்டார்கள்.

தொகுப்பு: இளங்கோ