Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உடற்பயிற்சிகளும்... மூடநம்பிக்கைகளும்!

நன்றி குங்குமம் தோழி

தினசரி குறைவில்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியர்களாகிய நாம் வளர்ந்து கொண்டு வருகிறோம். அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சிக்கல்களும் இருக்கிறது. அப்படி உடற்பயிற்சியில் பல வளர்ச்சிகள் இருந்தாலும், நமக்கு எது நல்லது, எது செய்ய வேண்டும், எது வேண்டாம் என போதுமான விழிப்புணர்வு என்பது இல்லை. மேலும், அது சார்ந்த மூட நம்பிக்கைகள் நிறையவே இருக்கிறது. இதனாலேயே நம்மில் பெரும்பாலானோர் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருக்கிறோம் என்பதால், இந்த மூடநம்பிக்கைகளை ஒழித்து உடற்பயிற்சிகள் பற்றி சரியான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மூட நம்பிக்கைகள்...

1. உடற்பயிற்சிகள் பாடி பில்டிங் செய்யும் நபர்களுக்கு மட்டும்தான் என சிலர் நினைப்பர். ஆனால், பல் துலக்குவது எப்படி அனைவருக்குமானதோ அப்படித்தான் உடற்பயிற்சியும்.

2. உடற்பயிற்சிகளை ஏதேனும் உடல் உபத்திரம் வந்தால்தான் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும் என நினைப்பர். அப்படி இல்லை, வலி

வராமல் இருக்கவும் முன்பிருந்தே செய்ய ஆரம்பிக்கலாம்.

3.குழந்தைகளுக்கு என்ன உடற்பயிற்சிகள் இருக்கப் போகிறது என நினைப்போம். ஆனால், குழந்தைகளுக்கேயான பிரத்யேக உடற்

பயிற்சிகள் அவர்களுக்கான பாணியில் இருக்கிறது. இதற்கான உடலியல் பலனும் உள்ளது.

4.தினசரி டம்பெல் போன்ற அதிக எடைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்தால் பெண்கள் ஆண் தன்மைக்கு மாறிவிடுவார்கள் என சிலர்

நினைப்பர். இது முற்றிலும் மூடநம்பிக்கை.

5.ஒல்லியாக இருக்கும் நபர்கள் உடற்பயிற்சி செய்தால் இன்னும் எடை குறைந்துவிடும் என்பதால், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பர். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு நபருக்கும் அவரின் உடல் எடை, உடல் தேவை, தசை திறன் என அனைத்தையும் கருத்தில் கொண்டு உடற்பயிற்சிகளும், அவற்றின் வகைகளும் மாறுபடும் என்பதால், அவர்களுக்கும் ஆரோக்கியமாய் இருக்க பயிற்சிகள் உள்ளது.

6.‘மாதவிடாய் நேரத்தில் போய் உடற்பயிற்சிகள் செய்வதா?’ என நம் வீட்டில் சினம் கொள்வார்கள். இதில் உண்மை என்னவெனில், முதல் இரு நாட்கள் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இல்லை உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் லேசான உடற்பயிற்சிகள் செய்து கொள்ளலாம்.

7. கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் குதித்து, அதிக எடை தூக்கி உடற்பயிற்சி செய்தால் கரு கலைந்துவிடும் என்று சிலர் நினைப்பர். ஆனால், அப்படி இல்லை. கரு பத்திரமாய் பாதுகாப்பாய் இருக்கும். மேலும், உடற்பயிற்சிக்குத் தேவையான உணவு, தண்ணீர், தூக்கம் என மற்றவற்றையும் நாம் கவனித்துக் கொள்ளுதல் கட்டாயம் அவசியம்.

8. சமீபத்தில் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்யும் போது ஒருவர் மரணித்தார் என்ற செய்தியை பார்த்த பலருக்கு தோன்றிய அச்சம் என்னவென்றால், அதிகப்படியான மூச்சு வாங்கும் பயிற்சிகள், டிரட்மில் போன்ற பயிற்சிகள்தான் இதற்குக் காரணம்.

ஆனால், ஒருவரின் தனிப்பட்ட உடல் நிலைதான் மரணிப்பதற்கான காரணம். உடலில் ரத்தக் கொழுப்பு அளவு, ரத்த அழுத்த அளவு என அனைத்தும் சரி பார்த்தே உடற்பயிற்சிகள் தொடங்க வேண்டும். நாமாக இயன்முறை மருத்துவர், உடலியல் மருத்துவர் சொல்லும் நேரம் தாண்டி பயிற்சி செய்வதே ஆபத்தில் முடியும். மேலும், பாடி பில்டிங் பயிற்சி எடுக்கும் நபர்கள் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் உட்கொள்வார்கள் என்பதால், இதை எல்லாம் பொருத்தே மரணம் நிகழலாம் என்பதால் பயம் கொள்ளத் தேவையில்லை.

9.உடற்பயிற்சி செய்தால் தினமும் நிறைய முட்டைகள், அசைவம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். திரைப்படங்களில் கூட பார்த்திருப்போம். ஆனால், நம்மை போன்று உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் பயிற்சிகள் செய்வோருக்கு இவ்வாறு உண்ண அவசியமில்லை. எனவே, தானாகவே தவறாகப் புரிந்துகொண்டு இவ்வாறு உண்டால் உடலில் பாதிப்புதான் தோன்றும்.

10.உடற்பயிற்சி செய்தாலே போதும் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று உடற்பயிற்சிக்கூடத்தில் மாய்ந்து மாய்ந்து பயிற்சிகள் செய்வோரை நாம் பார்த்திருக்கிறோம். பயிற்சிகள் வெறும் 50 சதவிகிதம்தான். உணவுப்பழக்கம், தூக்கம், வாழ்க்கை முறை என மீதம் உள்ள விஷயங்களும் முக்கியப் பங்கு என்பதால், அதீத உடற்பயிற்சிகள் செய்து உடலை வற்புறுத்திக்கொள்ள வேண்டாம்.

11. வயிற்றுப் பகுதியை சுற்றியிருக்கும் கொழுப்பை வயிற்று தசை பயிற்சிகள் செய்தால் குறைத்துவிடலாம் என நினைத்து நிறைய ஆண்களும் பெண்களும் அதற்கான பயிற்சிகளை மட்டும் சிரத்தையாக தினமும் செய்வர். ஆனால், வயிற்றை குறைக்க முடியாது. ஏனெனில் உடலில் எந்தப் பகுதியில் இருந்து கொழுப்பை குறைக்க வேண்டும் என மூளைதான் முடிவு செய்யும். மேலும், வருடக்கணக்கில் பயிற்சிகள், உணவுப்பழக்கம், வாழ்வியல் மாற்றம் என்று எல்லாம் செய்து வந்தால்தான் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு இலகுவாக கரைய ஆரம்பிக்கும்.

12. அறுபது வயதிற்கு மேல் உடற்பயிற்சி எதற்கு..? நடைப்பயிற்சி மட்டும் போதும் என சிலர் நினைப்பர். ஆனால், அறுபது வயதை கடந்த பின் மெதுவாக உடலில் உள்ள தசைகளின் அடர்த்தி குறைந்து வர ஆரம்பிக்கும். எனவே, அறுபது வயதிற்கு மேல்தான் உடற்பயிற்சிகள் கட்டாயம் அவசியம். பயிற்சிகளை செய்ய முடியுமோ, முடியாதோ என அச்சம் வேண்டாம். அவரவருக்கு உரிய பயிற்சிகளை இயன்முறை மருத்துவர் பரிந்துரைப்பார்கள்.

13.வார இறுதி வீரர்கள் (Weekend Warriors) வெறும் ‘வார்ம்அப்’ மட்டும் போதும் என நினைத்து அதனை மட்டும் செய்துவிட்டு விளையாடுவர். ஆனால், விளையாடி முடித்த பின் செய்ய வேண்டிய ‘கூல் டவுன்’, தசை வலிமை பயிற்சிகள் என நிறைய இருப்பதை உணராமல் விளையாடுவதால் தசை காயம் ஏற்படுவதை இயல்பாய் பார்க்கிறோம். எனவே, வார இறுதியில் மட்டும் விளையாடினாலும் கூட முறையான பயிற்சிகள் அவசியம் என்பதை உணர வேண்டும்.

14. உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை பார்க்கும் ஐ.டி ஊழியர்களுக்கு மட்டும் தான் உடற்பயிற்சி என்பது இல்லை. அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் உடற்பயிற்சிகள் அவசியம் என்பதால், எந்தத் தொழில் செய்தாலும் அதில் தசை பாதிப்பு வரலாம். அதனால் முன்னரே இயன்முறை மருத்துவரை அணுகி உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்வது அவசியம்.

15. உடற்பயிற்சிக்கூடத்தில் மட்டும்தான் பயிற்சிகள் செய்ய முடியும், அங்கு இருக்கும் பெரிய மிஷின்கள் வைத்துதான் செய்ய முடியும் என்பது இல்லை. வீட்டில் இருந்தே செய்யலாம். அதற்கு சில சிறு பொருட்களே போதுமானது. மேலும், ஆன்லைன் மூலமாகவும் செய்யலாம் என்பதால், இப்போது உடற்பயிற்சிகள் செய்வது மிகச்

சுலபம்.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்...

* உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வருவதால் தொற்றாத நோய்களான நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம், பி.சி.ஓ.டி, இன்சுலின் எதிர்ப்பு தன்மை என பல நோய்களை நாம் தடுக்க முடியும்.

* எலும்புகள், தசைகள், ஜவ்வுகள் என அனைத்தும் பலம் பெறுவதால் வயதான பின் வரும் உடல் மூட்டு வலிகளை தடுக்கலாம்.

* தொற்று நோய்களுக்கான எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

* மனச்சோர்வு, படபடப்பு, சோம்பல் என மனம் சார்ந்த சிறு சிறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

* தினசரி பிரச்னைகளான மலச்சிக்கல், பசியின்மை, தூக்கமின்மை, அளவுக்கு அதிகமாக உண்பது, தலைவலி, உடல் வலி போன்றவற்றிற்கும் தீர்வுகள் காணலாம்.

இயன்முறை மருத்துவம்...

உடற்பயிற்சிகள் பற்றிய முழு விளக்கங்களும் இயன்முறை மருத்துவரை அணுகி தெரிந்துகொள்ளுதல் அவசியம். நம் முழு உடல், தசை திறன், நமக்கான தேவை என்ன என்பது அனைத்தையும் பரிசோதனை செய்து அவரவருக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றும் கொடுப்பார்.

அருகில் உள்ள இயன்முறை மருத்துவ மையம், ஆன்லைனில் இயன்முறை மருத்துவர் மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள இயன்முறை மருத்துவர் என்று நம் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பயிற்சி செய்யலாம்.

எனவே, எந்தத் தொழிலில், எந்த ஊரில் இருந்தாலும் உடற்பயிற்சிகள் என்பது வாழ்வின் அவசியத் தேவைகளில் ஒன்று என்பதை உணர்ந்து, மூடநம்பிக்கைகள் இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்திடுவோம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்