Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்காதீர்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனித உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தண்ணீரும் அவசியமானது. ஆனால், சில நேரங்களில் உடலில் ஏற்படும் மாற்றத்தால் நீர்ச்சத்து சம நிலையை இழக்கிறது. அதுதான் டீ ஹைட்ரேஷன் எனப்படும் உடல் வறட்சி ஆகும். குளிர்காலங்களில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம், தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, தலைவலி ஏற்படுவது, வியர்ப்பது, குழப்பமான மனநிலை போன்றவை உடல்வறட்சி ஏற்படுவதற்கான காரணங்களாகும்.

பொதுவாக குளிர்காலங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்று பலரும் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுகின்றனர். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. அதுபோன்று, உடலில் ஏற்படும் சில நோய்களும் நீர்ச்சத்து குறைவதற்கான காரணியாக இருக்கும். உதாரணமாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, தீக்காயங்கள், உடல் சூடு, காய்ச்சல், அதிக வியர்வை, சர்க்கரை நோய் போன்றவைகளாகும்.

இந்த நீர்ச்சத்து குறைபாடு அதிகரித்தால், உடலில் பல்வேறு நோய்களை உருவாக்குகிறது. இது, சிறுநீரக செயலிழப்பு, உணர்விழந்த மயக்க நிலை, அதிர்ச்சி நிலை, அதீத காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, அவ்வப்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கக் கூடாது.

நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்க்கும் வழிகள்

தாகம் எடுக்காத நிலையிலும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கக் கூடாது. அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் அருந்துவதைப் போல தண்ணீர் அருந்துவதையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்து குறையும்போது, சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அருந்த வேண்டும். இது உடலின் சோர்வை உடனடியாக நீக்கி தெம்பு அளிக்கும்.

சிலர், குளிர்காலத்தில் நீர்க் காய்கறிகளான பீர்க்கங்காய், புடலங்காய், போன்றவற்றை சமைக்கமாட்டார்கள். அது தவறானது. கோடைகாலம் போன்றே குளிர்காலத்திலும் நீர்ச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கும். எனவே நீர்க் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்.

உடல் வறட்சி என்பது இயல்பாக ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றுதான். என்றாலும் கூட கவனிக்கப்படாத பட்சத்தில், அது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதனால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தொகுப்பு: தவநிதி