Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூண்டை பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம்!

நன்றி குங்குமம் தோழி

பூண்டு நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் இன்றைய காலத்தில் பூண்டின் விலையை கேட்டாலே நமக்கு அலர்ஜிதான் ஏற்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது அதன் விலை. இப்படி உச்சத்தில் இருக்கும் பூண்டை நாம் வீட்டில் எப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டும் மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சரியான முறையில், உலர் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும் பூண்டுகள், 3-6 மாத காலம் வரையில் நன்றாக இருக்கும். பூண்டை அரைத்து நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்வது இப்போது பலரின் வழக்கமாகிவிட்டது. ஆனால், நறுக்கிய பூண்டு ஓரிரு நாட்கள் மட்டுமே நன்றாக இருக்கும். உரித்தபிறகு கருப்பு அல்லது பழுப்பு நிறம் மாறும் நிலையில். அதிலிருக்கும் நன்மை செய்யும் நுண்பொருட் களும் குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், சரியான முறையில் அதனை பாதுகாக்காமல் வைத்திருந்தால், அது கருப்பு நிறமாகி கெட்டுவிடும்.

பூண்டுகளில் உள்நுழையும் பாக்டீரியாக்களும், அதன் வித்துக்களும் (spores) boutulism என்னும் நோயைக் கொடுக்கிறது. இத்தொற்று ஏற்பட்டால், முகம், கண்கள், கழுத்து, வாய் போன்ற உறுப்புகளைக் கட்டுப்படுத்தும் தசைகள் இறுக்கமாகி, அவ்விடங்களில் வீக்கம் ஏற்படுகிறது. பூண்டு அல்லது இஞ்சி, பூண்டு விழுது ரெடிமேட் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படும் நிலையில், வீட்டு உபயோகத்திற்கும் பரவலாகப் பயன்படுத்தும் நிலையில், உணவகங்களில் அதிகளவு பூண்டு உபயோகப்படுத்தப்படுகிறது.

கடைகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு அல்லது பூண்டு விழுதில், தரமற்ற பூண்டுகளைப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்லாமல், இந்த ரெடிமேட் பூண்டு விழுதில், சோடியம் மெட்டா பை சல்பேட், சிட்ரிக் அமிலம், சோடியம் பென்சோயேட் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுதான் பயன்பாட்டுக்கு வருகின்றன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, எப்போதும், பூண்டை அளவாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், சரியான முறையில் பாதுகாத்துப் பயன்படுத்துவது, உடலுக்கு நன்மையளிக்கும்.

பூண்டு மட்டுமல்ல நம் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள் எல்லாமே பாதுகாப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவுதான் நம்

ஆரோக்கியத்தின் அடித்தளம் என்பதை நாம் உணர்ந்தாலே போதும் வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மீது நமக்கு அக்கறை தன்னால் வரும்.

தொகுப்பு: பா.பரத், சிதம்பரம்.