Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இதயத் துடிப்பில் மாறுபாடா? அலட்சியம் காட்டாதீர்!

நன்றி குங்குமம் டாக்டர்

மூத்த இதயநோய் டாக்டர் குரு பிரசாத் சோகுனுரு

உலக இதய தினம் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம். இந்த ஆண்டு உலக இதய தினம் “துடிப்பைத் தவறவிடாதீர்கள்”, என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறது.

இது, இதய ஆரோக்கியத்தில் தொடர்ச்சியான விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு தனிநபர்கள் முன்கூட்டியே செயல்படவும், எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் இருக்கவும், வழக்கமான பரிசோதனைகளை திட்டமிடவும், ஆரோக்கியமான பழக்கங்களைப் பராமரிக்கவும், இதய நோயால் ஏற்படும் அகால மரணங்களைத் தடுக்க சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறவும் ஊக்குவிக்கிறது.

இந்த நிலையில் உலக இதய தினத்தையொட்டி கிளெனீகல்ஸ் மருத்துவமனை மூத்த நுண்துளையிட்டு இதயநோய் நிபுணர் பேராசிரியர் டாக்டர் குரு பிரசாத் சோகுனுரு கூறியிருப்பதாவது:-

இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

அந்த ‘இனிமையான இதயம்’, ஏட்ரியா என்னும் இதயத்திற்கு ரத்தத்தை பெறும் இரண்டு மேல் அறைகள் மற்றும் வென்ட்ரிக்கிள் என்னும் இதயத்தில் இருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் இரண்டு இதயக்கீழறைகள் என நான்கு அறைகளைக் கொண்ட ஒரு அழகான வீட்டைப் போல் உள்ளது. நாம் எப்படி நமது வீட்டிற்கு தேவையான தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவது போல, நமது இதயமும் கரோனரி தமனிகள் (வலது மற்றும் இடது) வழியாகவும், இதயத்தின் ‘கடத்தும் அமைப்பு’ எனப்படும் மின் வயரிங் அமைப்பு மூலமாக உடல் முழுவதற்கும் ரத்த வினியோகத்தைக் வழங்கி வருகிறது.

உடல் முழுவதும் ரத்த வினியோகம் சீராக இருக்கும் நிலையில் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், பொதுவாக அது ‘மாரடைப்பு’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், இதயத்தின் வயரிங் அமைப்பில் ஏற்படும் எந்தவொரு சேதமும் மிகவும் மெதுவான நாடித்துடிப்பு விகிதத்தை ஏற்படுத்தும் அல்லது சில நேரங்களில் ‘டச்சி-அரித்மியாஸ்’ எனப்படும் அசாதாரண வேகமான இதயத் துடிப்பை அதாவது படபடப்பை ஏற்படுத்தும்.

இதயத்திற்குள் இதுபோன்ற அசாதாரண ஷார்ட்-சர்க்யூட்டுகள் உருவாகும்போது, ​​அவை சில நேரங்களில் ஆபத்தானவை, ஏனெனில் அவை தலைச்சுற்றல் மற்றும் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இந்த ஷார்ட்-சர்க்யூட்டுகள் பிறப்பிலிருந்து அல்லது வயது காரணமாக அல்லது மாரடைப்புக்குப் பிறகு ஏற்படலாம். மருத்துவ ரீதியாக இந்த அசாதாரண வேகமான இதயத் துடிப்புகளை நாம் சூப்பர்-வென்ட்ரிகுலர் / வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியாக்கள் என்று அழைக்கிறோம்.

பெரும்பாலான நேரங்களில், இதை இசிஜி அல்லது எலக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனை மூலம் அவற்றைக் கண்டறிய முடியும். இந்த படபடப்பு காரணமாக தலைச்சுற்றல், பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். உங்கள் வீட்டில் மின்சார பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை சரிசெய்ய ஒரு நல்ல எலக்ட்ரீஷியனை அழைக்கிறீர்கள், இல்லையா? அதேபோல், இந்த அசாதாரண மின் இணைப்புகள் மற்றும் சுற்றுகளை சரி செய்ய நீங்கள் அனுபவமிக்க இதய நோய் நிபுணரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அவர் நோயாளி மற்றும் இசிஜி-களை பரிசோதித்த பிறகு, அதற்கான ஆன்டி-ஆர்ரித்மிக் மருந்துகளை பரிந்துரை செய்வார்.

அதை நோயாளி முறையாக எடுத்துக்கொள்ளும்போது இதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா அல்லது குணப்படுத்த முடியுமா என்பதை டாக்டர் முடிவு செய்வார். நோயாளிக்கு மருந்து சரியாக பலன் அளிக்கவில்லை என்றால், ‘எலக்ட்ரோபிசியாலஜிக்கல் ஆய்வு மற்றும் ரேடியோ-ப்ரீக்வென்சி அபிலேஷன்’ எனப்படும் ஒரு செயல்முறை மூலம் அதை குணப்படுத்த முயற்சிப்பார்கள்.

ஒரு எலக்ட்ரீஷியன் எப்படி வீட்டில் மின்சார கம்பிகளைச் சரிபார்த்து ஷார்ட் சர்க்யூட் எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது போல, எலக்ட்ரோபிசியாலஜிஸ்டுகளாகிய நாங்கள் உங்கள் இதயத்தின் மின்னோட்டம் எவ்வாறு பாய்கிறது என்பதையும், இந்த வேகமான இதயத் துடிப்பை ஏற்படுத்தும் ஷார்ட் சர்க்யூட் கம்பிகளை துல்லியமாகக் கண்டறிய, உங்கள் இதயத்திற்குள் சில சிறிய ‘ரோபோ’ வடிகுழாய் கம்பிகளை (தொடை வழியாக உள்ளூர் மயக்க மருந்தின் கீழ், வழக்கமான ஆஞ்சியோகிராம்கள் செய்வது போல) செலுத்தி அறிந்து கொள்கிறோம்.

சில நேரங்களில் அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதால், அதை கண்டறிய 3D உடற்கூறியல் மேப்பிங் என்னும் சிறப்பு ‘தேடல் கேமராக்கள்’ பயன்படுத்தப்படுகின்றன. அவை இதயத்தின் கண்ணுக்குத் தெரியாத மின்சாரங்களை, சாதாரண கம்பிகள் மற்றும் அசாதாரண ஷார்ட்-சர்க்யூட்கள் இரண்டையும் காண உதவுகின்றன. மேலும், அதிகப்படியான கதிர்வீச்சைத் தவிர்த்து, ப்ளோரோஸ்கோபி இல்லாமல் கூட இந்த ரோபோ வடிகுழாய்களை நாம் பயன்படுத்தலாம்.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மிகத் துல்லியமாக இருப்பதால், இதயத்தின் பிற பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்ய முடியும். பணயக்கைதிகளைக் காப்பாற்ற மீட்பு படை எப்படி பயங்கரவாதியை எப்படி வேட்டையாடுகிறதோ அது போன்று நீங்கள் கற்பனை செய்யலாம். மீட்பு படை, குற்றவாளியின் சரியான இடத்தைக் கண்டுபிடித்து, அவனை துரத்திச் சென்று, இறுதியாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அழிக்க வேண்டும். எங்கள் இதய எலக்ட்ரோபிசியாலஜி ஆய்வகத்தில் இந்த இதய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நாம் செய்வதும் இதுதான்.

உலகின் நவீன மின் இயற்பியல் இயந்திரங்களுடன் கூடிய 3D உடற்கூறியல் மேப்பிங் அமைப்புகளுடன் அதிநவீன கேத்லாப்பில் எலக்ட்ரோபிசியாலஜி மற்றும் கதிரியக்க அதிர்வெண் நீக்க சிகிச்சைகளை நாங்கள் எங்கள் கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.