நன்றி குங்குமம் தோழி
கங்கா குளியலுக்குப் பின்புதான் தீபாவளி பண்டிகை துவங்கும். அன்று எந்த உணவையும் சாப்பிடுவதற்கு முன்பாக தீபாவளி மருந்து என்று சொல்லப்படும் தீபாவளி லேகியத்தை சாப்பிட வேண்டும். மற்ற விழாக்களைவிட தீபாவளி அன்று மட்டும் இந்த லேகியம் சாப்பிட முக்கிய காரணம், தீபாவளியன்றுதான் பல வகையான இனிப்புகள், முறுக்கு, மிக்ஸர் மற்றும் அசைவ உணவு என அனைத்து வகையான உணவுகளை மற்ற நாட்களை விட அன்று அதிகளவில் சாப்பிடுவது வழக்கம். நம் வீட்டில் தயாரிக்கப்படும் பலகாரங்கள் மட்டுமில்லாமல், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அவர்கள் வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள் உடன் பகிர்ந்து கொள்வார்கள்.
அதனால் வயிற்று வலி மற்றும் செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதனை இந்த தீபாவளி மருந்து முற்றிலும் அகற்றி விடும். இந்த மருந்தை சுக்கு, சீரகம், ஓமம், பூண்டு, பனங்கற்கண்டு, வெல்லம் அல்லது கருப்பட்டி, சிறிது நெய் சேர்த்து தயாரிப்பார்கள். சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டு போன்றவற்றை நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் பனங்கற்கண்டு அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டியை பொடித்துப் போட்டு மெதுவாக கிளற வேண்டும்.
அந்தக் கரைசல் சர்க்கரைப் பாகு போன்ற நிலைக்கு வந்ததும் அதில் இடித்து வைத்திருக்கும் சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டுக் கலவையை போட்டு கிளற வேண்டும். கலவை இறுகி வந்ததும் அதில் சிறிது நெய் விட்டு லேசாக கிளறி இறக்கிவிட வேண்டும். இதுதான் தீபாவளி மருந்து. அன்று வீட்டில் அம்மாக்கள் செய்வார்கள். இன்று நேரமின்மை காரணமாக இந்த தீபாவளி லேகியம் கடைகளில் கிடைக்கிறது. இந்த தீபாவளி மருந்தை வீட்டிலிருக்கும் அனைவரும் மறக்காமல் தீபாவளி அன்று சாப்பிட வேண்டும். செல்வ வளத்தின் தெய்வமாகத் திகழும் மகாலட்சுமியின் பிறந்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. லட்சுமி அமாவாசையான புதிய நிலவு நாளில் தோன்றியதால் அன்று தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.