நன்றி குங்குமம் டாக்டர்
கவனம் ப்ளீஸ்!
சோடா (கரியமிலவாயு ஏற்றப்பட்ட மென்பானம்), பெரும்பாலும் அநேகரால் தீங்கற்றதாகவே கருதப்படுகிறது. உணவோடு சேர்த்து அல்லது உணவிற்கு பிறகு தாகத்தை தீர்க்கும் பானமாக அல்லது மாலை வேளையில் இதமான குளிர்ச்சியோடு உற்சாகம் தரும் இனிப்பான பானமாகவே இதை பலரும் பார்க்கின்றனர்.
ஒரு நாளில் ஒருமுறை சோடா அல்லது அதே போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட மென் பானத்தை அருந்துவது கல்லீரலை கடுமையாக பாதிக்கும், புற்றுநோய் வரும் வாய்ப்பை அதிகமாக்கும் மற்றும் வாழ்நாள் கால அளவைக் குறைக்கும் என்று சமீபத்தில் செய்யப்பட்ட புதிய ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. இரைப்பை குடலியல் சிகிச்சை நிபுணராக, பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என்கிறார் மூத்த இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர், டாக்டர் தினேஷ் ராமஸ்வாமி.
அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: நம் நாட்டில் வகை 2 நீரிழிவு, உடற்பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற கோளாறுகள் அதிகரித்து வருவதற்கான காரணங்களுள் ஒன்றாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் இருப்பதை சமீபத்திய தேசிய அளவிலான மற்றும் உலக அளவிலான தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்தியா உட்பட உலகளவில் வகை 2 நீரிழிவால் 2.2 மில்லியன் புதிய நபர்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் அதற்கு சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகின்ற சோடா மற்றும் மென்பானங்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எந்த வழிமுறைகளில் சோடா மற்றும் மென்பானம் கல்லீரலில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துகிறது?
கூடுதலாக சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் அதிக பழச்சீனி - சோடாவிலும் மென்பானத்திலும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் அதிகளவில் இருக்கின்றன. கல்லீரலால் அதிகமாக வளர்சிதை மாற்றத்திற்கு ஆளாக்குகிற முக்கிய சர்க்கரைகளுள் ஒன்றாக பிரக்டோஸ் (பழச்சீனி) இருக்கிறது. அதிகரித்த அளவில் சர்க்கரை மற்றும் பிரக்டோஸை உட்கொள்வதற்கும், கல்லீரலில் கொழுப்பு அதிகரித்த அளவில் சேர்வதற்கும் தொடர்பு இருக்கிறது. இதன் பின்விளைவாக கல்லீரல் அழற்சியும், இழைம நார்ப்பெருக்கமும் ஏற்படுவதோடு காலப்போக்கில் கல்லீரல் இழைநார் வளர்ச்சியும் மற்றும் கல்லீரல் அரிப்பும் உருவாகக்கூடும்.
வளர்சிதை மாற்ற அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத்திறன்: தினசரி அருந்துவதால் படிப்படியாக சேரும் சர்க்கரை அளவுகள் உடற்பருமனுக்கும், இன்சுலின் எதிர்ப்புத்திறனுக்கும் மற்றும் அழற்சிக்கும் இட்டுச் செல்லும். இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கல்லீரல் காயத்திற்கும், செயலிழப்புக்கும் காரணமாக இருக்கின்றன.
புற்றுநோய் வருவதற்கான நீண்ட கால இடர்வாய்ப்பு: கடுமையான கல்லீரல் காயம், அழற்சி மற்றும் வீக்கம் போன்றவை மற்றும் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் அழுத்தம் ஆகிய அனைத்தும் சேர்ந்து, கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன.
பொது சுகாதாரத்திற்கு பாதிப்புகள்
ஒரு நாளில் ஒருமுறை சோடா அல்லது மென்பானம் அருந்துவதால் என்ன பாதிப்பு வந்து விடும் என்று அலட்சியப்படுத்தாதீர்கள்; உடல்நலப் பாதிப்புகளை அதிகரிப்பதற்கு இது போதுமானது.
சில மரபணு சார்ந்த அம்சங்கள் அல்லது தவிர்க்க முடியாத வெளிப்படுதல்கள் போன்றவை போலல்லாமல், சர்க்கரையால் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள், நம்மால் மாற்றிக் கொள்ளக்கூடிய காரணியாகவே இருக்கின்றன.
குறிப்பாக, இந்த ஆபத்துகள் பெண்களிடம் அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது; அதுவும் குறிப்பாக மெனோபாஸ்க்கு (மாதவிடாய் நின்று விடுவதற்கு) பிந்தைய காலத்தில் இந்த ஆபத்துகள் அதிகமாக இருக்கக்கூடும். இருப்பினும் பெண்கள் மட்டும் அல்லாது மற்றவர்களுக்கும் இதே வளர்சிதைமாற்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் என்ன செய்யலாம்: சோடா அல்லது மென்பானம் அருந்துவதை குறைப்பது அல்லது நிறுத்துவது: அதற்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறுகள், பானங்கள், தண்ணீர், மூலிகை தேநீர், காய்கறி சூப் போன்ற ஆரோக்கியமான மாற்றுப் பொருட்களை அருந்தலாம்.
பேக்கேஜிங் லேபிள்களை கவனமாக வாசிக்கவும்: நீங்கள் அருந்தும் பானத்தில் மறைந்திருக்கும் சர்க்கரை அளவையும் மற்றும் பரிமாறல் அளவையும் கவனமாக வாசிக்கவும்.
வாழ்க்கைமுறையில் மாற்றங்களை செய்வது: வளர்சிதைமாற்ற சுமையைக் குறைப்பதற்கு சமச்சீரான உணவை உட்கொள்வதோடு தினசரி உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா அல்லது மென்பானத்தை ஒரு முறை அருந்துவது ஒரு பெரிய பிரச்சனையாக தோன்றாமல் இருக்கலாம்; ஆனால் உங்களது கல்லீரலை சேதப்படுத்தி, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து உங்கள்ஆயுள் காலத்தை குறைக்கிற எதிர்மறை நிகழ்வுகளை இது தூண்டிவிடும் என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே ஒரு மருத்துவ நிபுணராக, எனது ஆலோசனை என்னவென்றால், நீங்கள் அருந்தும் பானம் குறித்து தெரிந்து கொண்டு ஒருமுடிவை நீங்கள் எடுக்க வேண்டும்; கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு இது தொடர்பான விழிப்புணர்வை நீங்கள் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது என்பதை உணர்வதில்தான் நோய்கள் வராமல் தடுப்பதற்கான நமது முயற்சி தொடங்குகிறது. அதனால் அனைவரும் உணவு விஷயத்தில் விழிப்புடன் இருப்போம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
