நன்றி குங்குமம் தோழி
இயற்கை 360°
மூளை போன்ற வடிவம். அதைக் காக்கும் மண்டை ஓடு வடிவ கடின மேல் ஓடு... மண்டை ஓட்டையும் மூளையையும் இணைக்கும் ஜவ்வு போன்ற சுருக்கங்கள் நிறைந்த மேற்புறத் தோலென, மனித மூளையை பிரதிபலிப்பதுதான் வால்நட். தமிழில் இதன் பெயர் வாதுமைக் கொட்டை. மூளை போன்றே தோற்றம் கொண்ட வால்நட் மூளைக்கு வலு சேர்க்குமா? தெரிந்துகொள்ள வால்நட்டுடன் பயணிப்போம் வாருங்கள்..!
தொல்பொருள் ஆராய்ச்சிகளின் படி, ஆதிமனிதனின் உணவில் முதன்மையானவற்றில் ஒன்றாகச் சொல்லப்படும் வால்நட், உடலுக்கு ஆரோக்கியமும், வாழ்க்கைக்கு வளமும் சேர்ப்பதால், ஒவ்வொரு ஆண்டும் மே 17, உலக வால்நட் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.வால்நட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வாதுமைக் கொட்டையின் தாவரப்பெயர் Juglans regia. தோன்றிய இடம் மத்திய ஆசியாவில் பெர்ஷியா. லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட Juglans regia என்கிற தாவரப்பெயருக்கு, ராஜ மரியாதை கொண்ட கொட்டை மற்றும் கடவுளர்களின் கடவுளான ஜூப்பிடரின் விதை எனப் பொருளாம்.
மரத்தில் காய்க்கும் தாவர வகையான வால்நட்டில், பெர்ஷியன் வகை தவிர, பிரித்தானிய வால்நட் மற்றும் கருப்பு நிற கலிஃபோர்னியா வால்நட் வகைகளும் இருக்கிறது. பழுப்புநிற ஓட்டிற்குள் ஒளிந்திருக்கும் வெண்நிறக் கொட்டைகள் கசப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவையோடு, பிரத்யேக கொழுப்பு சுவையும் நிறைந்தவை. கருப்பு நிற கலிஃபோர்னிய வால்நட்கள் சுவை சற்று கூடுதலானவை.
ஆரம்பத்தில் வணிகச்சாலைகள் வழியே பெர்ஷியாவிலிருந்து பயணித்த வால்நட், பெர்ஷியன் நட் என்றே அழைக்கப்பட்டுள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான வால்நட் வெளிதேசத்திலிருந்து வந்த கொட்டை எனப் பொருள்படும். வால்நட்டின் பழம், இலை, மரப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றாலும், அதிக நன்மை பயப்பது வாதுமைக் கொட்டைகள்தான். Brain nut எனப்படும் இவை, மூளைக்கு மட்டுமன்றி மற்ற உறுப்புகளுக்கும் பலன் தருபவை.
அதிக கலோரி, அதிக புரதச்சத்து, அதிக அமினோ அமிலங்கள், அதிக நார்ச்சத்து, அதிக அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், அதைவிட கூடுதல் கொழுப்புத்தன்மை என அனைத்தும் நிறைந்த வால்நட்டில், A, E, K, B வைட்டமின்கள், பயோடின், நியாசின், பைரிடாக்சின் பி வகை வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், செலீனியம், மாங்கனீஸ், பாஸ்ஃபரஸ், துத்தநாகம், போரான் கனிமங்களும் உள்ளதால் ‘ஆரோக்கியத்தின் சுரங்கம்’ என அழைக்கப்படுகிறது. Poly Unsaturated Fatty Acid எனும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக ஓலீக், ஆல்ஃபா லினோலீக், லினோ லெனிக் அமிலம் உள்ளிட்ட ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அமிலங்களை அதிகம் கொண்டவை.
நமது ஒருநாளின் ஏ.எல்.ஏ தேவையை எளிதாய் பூர்த்தி செய்யும் இந்த வாதுமைக் கொட்டைகள், உடலின் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியத்தைக் கூட்டுவதால், கொட்டை வகைகளில் வால்நட் முதலிடம் பெறுகிறது. இதன் பாலிஃபீனாலிக் சேர்க்கை, எலாஜிக் அமிலம், ஃபைடிக் அமிலம், கேட்டச்சின், மெலட்டோனின் போன்ற தாவரச்சத்துகள் அக்ரூட்டின் நலனுக்கு காரணமாக இருக்கின்றன. LDL, Cholesterol உள்ளிட்ட கொழுப்பை எளிதில் கரைப்பதுடன், HDL என்கிற நல்ல கொழுப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன.
வால்நட்டின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், பெடுங்குளஜின், மூளையின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தின் வேதியியல் மாற்றங்களைத் தூண்டுகிறது. வால்நட்டில் உள்ள மெலட்டோனின் மற்றும் மெக்னீசியம் போன்றவை தூக்கமின்மையைக் குறைத்து, ஞாபகத்திறனை அதிகரிப்பதால், இளைஞர்களின் மன அழுத்தம், கோபம், சோர்வு, பதட்டநிலை, குழப்ப மனநிலையிலிருந்து பாதுகாத்து, மகிழ்ச்சி மற்றும் சுறுசுறுப்பைக் கூட்டுவதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. நாளொன்றில் ஏழு அல்லது எட்டு வால்நட்கள் வாழ்நாளை நீட்டிக்க போதுமானது என்கிறது இந்த ஆய்வு.
இதிலுள்ள அதிக கலோரி குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல பலன்களை அளிப்பதோடு, இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடென்ட், கனிமச் சத்து போன்றவை மனத் தளர்ச்சி, மறதி, முதுமை, வயோதிகத்தில் ஏற்படும் எலும்பு புரை, மூட்டு நோய், தசைசார் வீக்கம் இவற்றின் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன.நோயெதிர்ப்பு சக்தியையும், புத்துணர்ச்சியையும் கூட்டி, அதிகப் பசியைக் கட்டுக்குள் வைத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், உடல் பருமன், இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற வாழ்க்கை முறை நோய்களையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதைத்தான், ‘Handful of Walnuts keeps the Heart Diseases away...’ என பரிந்துரைக்கிறது அமெரிக்க நாட்டின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.
வால்நட்டின் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், விந்தணுக்களை கூட்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கவும், பெண்களின் கருவுறுதல் விகிதத்தைக் கூட்டவும் உதவுகிறது. நாட்பட்ட நுரையீரல் நோய், பால்வினை நோய்கள், காச நோய் போன்றவற்றிற்கும் வால்நட் மருந்தாகிறது. வால்நட்டிலிருந்து பெறப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், சொறி, படை, சிரங்கு மற்றும் தோல் அழற்சிகளைப் போக்கவும், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தரவல்லது. இதன் இலை மற்றும் பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிராய் செயல்படும் எனப் பரிந்துரைக்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.
வால்நட்டின் மெக்னீசியம், பாஸ்ஃபரஸ் மற்றும் கால்சியம் வலுவான எலும்புகளுக்கு முன்னிற்கிறது என்றால், இதன் அதிகளவு பயோடின் முடி வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது. அனைத்திற்கும் மேலாய் மார்பகப் புற்றுநோய், பிராஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றின் வளர்ச்சி வீரியத்தைக் குறைக்க வால்நட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அலோபதியில், ‘வால்நட் அலர்ஜி’ தனி நோயாகவே கருதப்படுவதுடன், இதிலுள்ள தாதுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, மூச்சுத்திணறல், உயிருக்கு ஆபத்தான நிலை எனக் கொண்டு செல்லும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு எண்ணெய், எடையைக் கூட்டி, செரிமானத்தை குறைப்பதால், இதன் ஃபைடிக் அமிலம் மற்ற கனிமங்களின் உறிஞ்சுதலையும் குறைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வால்நட்டில் இருக்கும் டானின் மற்றும் ஃபைடிக் அமிலம் குறைய, 10 முதல் 12 மணி நேரம் வரை நீரில் ஊறவைத்து பிறகு உட்கொள்ளலாம்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காய்ப்புக்கு வரும் இவற்றின் முற்றிய கனிகளைப் பறித்துக் காயவைத்து, ஓட்டில் இருந்து பிரித்த பிறகே, பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது. வால்நட் மரங்கள் சீனா, எகிப்து, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் நேபாள நாடுகளிலும், இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், சிக்கிம், மணிப்பூர் உள்ளிட்ட ஹிமாலயப் பகுதிகளிலும் விளைகின்றன.50 முதல் 70 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய வாதுமை மரங்கள், காய்ப்புக்கு வர 15 முதல் 20 வருடங்கள் ஆகும் என்றாலும், 250 வருடங்கள் வரை காய்க்கவும் செய்யும். கொழுப்பு எண்ணெய் அதிகம் உள்ள காரணத்தால் சிக்கு நாற்றமும், சிதைவடைதலும் விரைவில் ஏற்படும். எனவே குளிர்சாதனப் பெட்டி அல்லது ஏர்-டைட் கண்டெய்னர்களில் சேமித்து 8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
வால்நட் சூப், ஸ்ட்யூ, சாஸ், சாலட், கேண்டி, கேக், ஐஸ்கிரீம், ஃபட்ஜ் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் வால்நட், விருந்தோம்பல்களில் இடம் பிடிக்கும் ராஜ வம்ச உணவாகக் கருதப்படுகிறது. அக்ரூட் அல்வா, வாதுமை லட்டு நம்மிடையே பிரபலம் என்பது போல, பக்லாவா (Baklava), மத்திய கிழக்கு நாடுகளின் பிரபல இனிப்புப் பண்டமாகும். இத்தாலியர்களின் பெஸ்ட்டோ தயாரிப்புக்கும், பெர்ஷியர்களின் ஃபெஸன்ஜென் தயாரிப்புக்கும் வால்நட்கள் பயன்படுத்தப்படுகிறது.கடினமான வெளிப்புறத்துடன், மென்மையான உட்புறமும் இணைந்து... மனித மூளையை மட்டுமல்ல, மனிதர்களின் வாழ்வியலோடும் பொருந்தி போகிற ஒன்று இந்த வால்நட் என்பதே நிதர்சனம்.
(இயற்கைப் பயணம் நீளும்..!)
டாக்டர் சசித்ரா தாமோதரன்
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்