Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாத்திரம் கழுவ உதவும் நாரும் நோயை உண்டாக்கலாம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சமையலறைகளில் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு நமக்கு கட்டாயமாக ஸ்பாஞ்ச் அவசியம். பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்கு போன்றவை நீக்க இதை பயன்படுத்துகிறோம். ஆனால் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, இதில் பாக்டீரியா கிருமிகள் உருவாகி நமது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதை பலரும் அறிவதில்லை. உதாரணமாக, ஒரு சென்டிமீட்டர் ஸ்பான்ச்சில் கிட்டத்தட்ட 54 பில்லியன் பாக்டீரியாக்கள் உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற பாக்டீரியாக்கள் நுண்ணுயிர் வளர்ச்சிக்கு அதன் ஈரப்பதமே இருப்பிடமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

நாம் பயன்படுத்தக்கூடிய கிச்சன் ஸ்பாஞ்ச் நம் கிச்சனில் உள்ள மற்ற பகுதிகளிலும் பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்த ஸ்பாஞ்சிலிருந்து பாத்திரங்கள், அருகில் உள்ள இடங்கள், உணவுகள் போன்ற எல்லா இடங்களுக்கும் பரவி உணவை விஷமாக்கும் அபாயமும் உண்டு. அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பழைய ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதால் சருமத்தில் அலர்ஜி, ஒவ்வாமைகள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மூளைக் காய்ச்சல், நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். குறிப்பாக மிகவும் உணர்திறன் மிக்க சருமம் கொண்டவர்கள் அடிக்கடி ஸ்பாஞ்சை மாற்றி பயன்படுத்த வேண்டியது அவசியம்.

நாள்கணக்கில் ஸ்பாஞ்ச் பயன்படுத்தகூடாது. சிலர் அவை கிழியும் வரை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். எவ்வளவுதான் நைந்து போனாலும் அதை மாற்றுவதற்கு பதிலாக அதையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இதுபோன்று ஸ்பாஞ்சை பயன்படுத்துவதால் பாத்திரங்களும் நன்றாக சுத்தமாகாது. இதனால் அவை எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தலாம். பாத்திரங்களில் இருந்து கெட்ட வாசனை வருவதற்கு இதுவும் ஒரு காரணம். பாத்திரங்கள் தேய்த்த பிறகும் ஒருவித வாடை வந்தால் உங்கள் ஸ்பாஞ்ச் மீது கவனம் செலுத்துங்கள்.

ஸ்பாஞ்சை சுத்தமாக வைப்பது எப்படிஸ்பாஞ்ச் தரம் பொறுத்து நீங்கள் வாரம் ஒருமுறையோ, இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என மாற்றி கொள்ளலாம். அதே நேரம் ஸ்பாஞ்சில் கெட்ட துர்நாற்றம் வீசும் போது அதனை மாற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது.

பாத்திரங்களை கழுவி முடித்தவுடன் ஸ்பாஞ்சை சுத்தமாகக் கழுவி ஈரம் இல்லாத இடத்தில் உலர்வாக வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை வெந்நீரை கொதிக்க வைத்து அதன் மேல் ஊற்றினாலும் கிருமிகள் அழியும்.குறிப்பாக ஸ்பாஞ்ச் ஈரமாக வைத்திருப்பது பாக்டீரியா அதிகமாக பரவுவதற்கு வழி வகுக்கிறது. எனவே, பாத்திரங்களை கழுவி முடித்தவுடன் ஸ்பாஞ்ச் ஈரம் படாதவாறு ஓரத்தில் வைத்துவிட வேண்டும்.

தொகுப்பு: தவநிதி