Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓபிசிடியால் உருவாகும் நோய்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய சூழலில் உணவு பழக்கவழக்கங்களாலும், வாழ்க்கை முறை மாற்றங்களாலும் பலரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்னை தொப்பை. தொப்பையை கண்டுகொள்ளாமலோ, குறைக்கவோ முயற்சி செய்யாமல் இருந்தால், அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புகளினால், உடலில் பலவித நோய்கள் தோன்ற 90 சதவீத காரணமாக தொப்பை அமைகிறது.

நாளடைவில் தொப்பை உயிருக்கே ஆபத்தாகவும் அமைகிறது.

பொதுவாக, ஆண்கள் 40 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும், பெண்கள் 35 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும் கொண்டிருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அந்தவகையில், வயிற்றில் தேங்கும் கொழுப்புகளால் ஏற்படக் கூடிய சில முக்கியமான நோய்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

நுரையீரல் அடைப்பு

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருப்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும், நாள்பட்ட நுரையீரல் அடைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். இதனால் அவர்களால் சீராக மூச்சு விட முடியாது. நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்களுக்கு தொப்பை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போதிய உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இல்லாமல் இருப்பதுதான் என்று தெரிவிக்கின்றது ஆய்வு முடிவுகள்.

புற்றுநோய்

புற்றுநோய் ஆய்வுகளில், 20 சதவீத புற்றுநோயாளிகளுக்கு அந்நோய் வருவதற்கு அதிகப்படியான உடல் பருமனும் ஒரு காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே தொப்பை இருந்தால் புற்றுநோய் வருவதற்கான தாக்கம் அதிகம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொப்பையை ஆரம்பகட்டத்திலேயே சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

தூக்க குறைபாடு

நாள்பட்ட தூக்க குறைபாடு உள்ளவர்கள், இரவில் தூங்கும்போது பலத்த சப்தத்துடன் குறட்டை விடுவதோடு, அவர்களால் நிம்மதியான தூக்கத்தையும் பெற முடியாமல் தவிப்பார்கள். மேலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னையும் இருக்கும்.

சர்க்கரை நோய்

40 வயதை நெருங்குபவர்கள் பலரையும் அதிகம் தாக்கும் ஒரு பொதுவான பிரச்னைதான் சர்க்கரைநோய். இந்த சர்க்கரை நோயை சந்திப்பதற்கு தொப்பையும் ஒரு முக்கிய காரணமாக

இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

பித்தக் கற்கள் உருவாக்கம்

ஒருவர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரித்து வந்தாலும், ஒருவரின் இடுப்பளவு அதிகமாக இருந்தால், அதனால் பித்தக்கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் வயிற்றில் கொழுப்புகள் தேக்கம் அதிகரிப்பதால், பித்த நீர் சரியாக வெளியேற முடியாமல், பித்தப்பையில் கற்களாக உருவாக ஆரம்பிக்கும். எனவே தொப்பை ஆரம்பத்திலேயே கட்டுக்குள் கொண்டுவர முயல வேண்டும்.

கண்புரை

வயதான காலத்தில் தொப்பையுடன், உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அவருக்கு கண்புரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கணைய அழற்சி

அடிவயிற்றில் தேங்கும் கொழுப்பிற்கும் கடுமையான கணைய அழற்சிக்கும் இடையே முக்கிய தொடர்பு இருப்பதாக சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கணைய அழற்சி கொண்ட நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.இடுப்பைச் சுற்றி தேங்கும் கொழுப்புக்கள் பித்தப்பை, கணையம் மற்றும் கண்கள் போன்றவற்றை மட்டும் தாக்காமல், மூளையையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் பக்கவாதம் வரும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது. மேலும் மூளைக்கு தேவையான அளவு ரத்தம் செல்லாமல் மூளை செல்கள் இறப்பை சந்தித்து, அதனால் பக்கவாதத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கின்றது.

கல்லீரல் கொழுப்பு நோய்

வயிறு மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குவதால் ஏற்படும் ஓர் பொதுவான நோயாகும். இதனை அப்படியே விட்டுவிட்டால், மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

இதய நோய்

அடிவயிற்று கொழுப்புக்களின் தேக்கத்தால், இதய நோய்கள் மிகவும் வேகமாக ஒருவரைத் தாக்கும் அபாயம் உண்டு. ஆகவே, இதய நோய்கள் வராமல் இருக்க வேண்டுமெனில், உடல் எடையுடன் தொப்பையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தொப்பை சிறிதாக ஏற்பட தொடங்கும் போதே, உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் சரி செய்து பெரும்பாலான நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ரிஷி