Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டோவினோ தாமஸ் ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

2012 -ல் வெளியான பிரபுவின்டே மக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். தற்போது, மாலிவுட்டின் திறமையான நடிகர்களில் இவரும் ஒருவராக வலம் வருகிறார். இவருக்கு மாடல், திரைப்பட தயாரிப்பாளர் என்ற மற்றொரு முகமும் உண்டு. இவரது திரைப்படங்களில் மாயநதி, மின்னல் முரளி, கோதா, என்னும் நின்னுட்ட மொய்தீன், குப்பி போன்றவை சிறந்த படங்களாகும். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் பணி புரிந்து வந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவாக இருந்தாலும், கல்லூரி படிப்பை தமிழ்நாட்டில் முடித்துள்ளார். இம்மாத இறுதியில் இவர் நடித்துள்ள ஃபாரன்சிக் -2 திரைப்படம் வெளிவர உள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்த மாதத்தில் அவரன், மரணமாஸ், நரிவேட்டா, ஐடன்ட்டி. எல்.2 - எம்புரான் ஆகிய திரைப்படங்கள் வெளிவர உள்ளன.

ஒர்க்கவுட்ஸ்

நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு மாடலாக இருந்தவன் என்பதால் அப்போதிருந்தே என்னை எப்பவும் ஃபிட்டா வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். அதற்காக, டயட், சார்ட்னு தினமும் பல மணிநேரம் ஜிம்லயே கிடப்பேன். அதுபோன்று, ஒரே டைப்ல எக்சர்சைஸ் பண்ணிட்டே இருந்தா, போரா இருக்கும். அதனால அவ்வப்போது சில எக்சர்சைஸ் பயிற்சிகளை மாற்றிக் கொள்வேன். அந்தவகையில், நடைபயிற்சிகள் தொடங்கி கார்டியோ, ஸ்ட்ரெச்சஸ், புஷ் அப்ஸ், புல்லப்ஸ் என எல்லா பயிற்சிகளும் செய்வேன். அதுபோல ஒவ்வொரு படத்துக்கும் அந்த கேரக்டரின் தேவைக்கேற்றபடி பயிற்சிகளை மாற்றிக் கொள்வேன். உணவு முறையும் அதற்கேற்றபடி அமைத்துக் கொள்வேன்.

எனது உடற்பயிற்சிகளில் இண்டென்ஸ் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதன் மூலம் உடற்கட்டை ஏற்றவோ இறக்கவோ என்னால் எளிதில் மேற்கொள்ள முடிகிறது. மற்றும் தசை வளர்ச்சியும் வேகமாக அதிகரிக்கும். முக்கியமாக ஃபிட்னஸ் மிக உறுதியாக இருக்கும்.இண்டென்ஸ் பயிற்சிகள் என்பது சாதாரணமாக வெறுமென புஷ் அப்ஸ், சிட் அவுட்ஸ், வெயிட் தூக்குவது என அல்லாமல், ஓரிரு பயிற்சிகளை சேர்த்து ஒன்றாக செய்வது போன்றது ஆகும். அதுபோன்று நான் பழங்காலத்து கலைகளில் ஒன்றான களறி பயிற்சியும் பெற்றுள்ளேன். அதையும் தினசரி தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். இது தவிர, எனது தினசரி பயிற்சிகளில் யோகாவுக்கும் தனி இடம் உண்டு.

டயட்

டயட்டை பொருத்தவரை ஆரம்பத்தில் அவ்வளவாக நான் உணவில் கவனம் செலுத்தியதில்லை. கொரோனா லாக்டவுனுக்கு பிறகே ஆரோக்கிய உணவின் அவசியத்தை உணர்ந்தேன். அது முதல் ஊட்டச்சத்துமிக்க உணவுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். காலை எழுந்ததும் 3-4 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்திவிட்டுதான் என்னுடைய தினசரி வேலைகளை தொடங்குவேன். இது எளிய முறையாக இருந்தாலும், நாள் முழுக்க எனது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

அதன்பிறகு, காலை உணவாக, தானியங்கள் மற்றும் ஓட்ஸ் செய்த உணவுகளை தான் உண்கிறேன். அதன்பிறகு, மதிய சாப்பாட்டுக்கு முன்பு 11 மணியளவில் வேக வைத்த முட்டைகள் மற்றும் ஒரு கிண்ணம் பழங்கள் எடுத்துக் கொள்வேன். பிறகு மதிய உணவில், கிரில் செய்யப்பட்ட காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறியில் செய்யப்பட்ட சாலட் வகைகள் போன்றவற்றை கட்டாயமாக எடுத்துக் கொள்கிறேன். இது தவிர, எனக்கு பிடித்த உணவுகள் என்றால், அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடுவேன். அதிலும், சாதத்துடன் சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடுவது மிகவும் பிடித்தமானது.

அதுபோன்று, எனக்கு சமையல் செய்வதிலும் ஆர்வம் அதிகம். இதனால், நேரம் கிடைக்கும்போது வீட்டில் நானே ஆம்லெட்டுகள், வெண்ணெய் அல்லது சீஸ் சேர்த்த பிரெட் டோஸ்ட் போன்ற எளிதான உணவுகளை நானே தயாரித்து சாப்பிடுவேன். நமது பாரம்பரிய இந்திய உணவுகள் முதல் மேற்கத்திய உணவு வகைகள் வரை பலவகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். இவையெல்லாம் சூட்டிங் இல்லாத நாட்களில்தான். அதேசமயம் ஒரு படம் கமிட் ஆகும்போது, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றவாறு எனது டயட்டை மாற்றி அமைத்துக் கொள்வேன்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்