Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அருண்விஜய் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ்த்திரை உலகில், வாரிசு நடிகர்கள் வரிசையில் வந்தாலும் தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் அருண்விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஷன் சேப்ஃடர் 1 திரைப்படம் அருண்விஜய்க்கு நல்ல வரவேற்பை கொடுக்க, அடுத்து மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் பாலா இயக்கத்தில் வணங்கான் என இரு படங்கள் விரைவில் வெளிவர உள்ளது. அதைத் தொடர்ந்து, பாக்ஸர், வா டீல், பார்டர், அக்னி சிறகுகள், ரெட்ட தல என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. அருண்விஜய்யின் ஃபிட்னெஸ் மற்றும் டயட் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஒர்க்கவுட்ஸ்: நான் கொஞ்சம் ஹெல்த் கான்சியஸோட இருக்குறவன். பிசிக்கல்ல அதிக கவனம் செலுத்துவேன். அதற்காக சில விஷயங்கள்ல ஒதுங்கியே நிப்பேன். அதுபோல, டயட், சார்ட்னு தினமும் பல மணிநேரம் ஜிம்லயே கிடப்பேன். திரைத்துறையை பொருத்தவரை, எம்.ஜி.ஆர் சாரை சூப்பர் பிசிக்னு சொல்வாங்க. பிட்னஸை பொருத்தவரை அவர்தான் எனது இன்ஸ்பிரஷனுக்கூட சொல்லலாம். அதுபோல, என் அப்பா விஜயக்குமாரும் நல்ல பிசிக் வெச்சு இருந்ததால எனக்கு சிறுவயது முதலே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஈர்ப்பு இருந்தது. ஜிம்மானஸ்டிக் எல்லாம் கற்றுக் கொண்டேன். தமிழ், இண்டஸ்ட்ரியில முதல்ல சிக்ஸ்பேக் வெச்சது நான்தான்.

‘ஜனனம்’ படத்துல சிக்ஸ்பேக் பண்ணேன். ‘தடையறத் தாக்க’ படத்துக்காக சிக்ஸ்பேக்ல ரெடியானேன். ஆனால் அது படத்திற்கு தேவைப்படாமல் போனதால், படத்தில் காண்பிக்க முடியாமல் போனது. அதுக்காக அவ்ளோ வொர்க் அவுட் பண்ணியிருக்கேன்.அதுபோன்று, ஒரே டைப்ல எக்சர்சைஸ் பண்ணிட்டே இருந்தா, போரா இருக்கும். அதனால அவ்வபோது சில எக்சர்சைஸ் பயிற்சிகளை மாற்றிக்கொள்வேன். அந்தவகையில், நடைபயிற்சிகள் தொடங்கி கார்டியோ, ஸ்ட்ரெச்சஸ், புஷ் அப்ஸ், புல்லப்ஸ் என எல்லா பயிற்சிகளும் செய்வேன். பொதுவாக காலைநேரத்தில் உடற்பயிற்சிகள் செய்வதுதான் சரியானது என்பார்கள்.

ஆனால், நான் இரவு நேரங்களில் ஓர்க்கவுட் செய்வதையே அதிகம் விரும்புவேன். ஏனென்றால், இரவு நேரங்களில் அவ்வளவாக யாரும் இருக்க மாட்டார்கள் ஒரு பிரைவசி கிடைக்கும். அதனால், நானும் என் டிரைனரும் 10-11 மணி போல கிளம்பி போனால் இரவு 1 - 1.30 மணி வரை கூட பயிற்சிகளை செய்துவிட்டு வருவோம். இது சூட்டிங் இருக்கும் நேரத்தை பொருத்து அமைத்துக் கொள்வேன்.

அதுபோல ஒவ்வொரு படத்துக்கும் அந்த கேரக்டரின் தேவைக்கேற்றபடி பயிற்சிகளை மாற்றிக் கொள்வேன். உணவு முறையும் அதற்கேற்றபடி அமைத்துக் கொள்வேன். அதுபோல, பிசிக்கலா நான் ஃபிட்டாக இருப்பதால ஏதாவது அட்வன்ச்சரா செய்ய வேண்டும் என்று தோன்றும். புது விஷயங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நினைப்பேன். அந்தவகையில், ஸ்கூபா டைவிங், குதிரை ஏற்றம், பைக் டைவிங், பாஸ்ட் கார் டிரைவிங், கார் ஸ்டண்ட் இப்படி பல விஷயங்களை முறையாகவே கற்றுக் கொண்டுள்ளேன். அதுபோல, ஒருமுறை நியூசிலாந்து போயிருந்தபோது, ஒரு டிரைனரோடு ஸ்கை டைவிங்கும் செய்து உள்ளன். அதற்கு தனி கோர்ஸ் இருக்கு, லைசன்ஸ் இருக்கு என்றெல்லாம் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதுபோன்று ஆண்டுக்கு ஒருமுறை மலையேற்றம் செய்வேன். இமயமலை உட்பட இதுவரை, எட்டு மலைகளில் மலையேற்றம் செய்துள்ளேன்.

டயட்: ஃபிட்னெஸை பொருத்தவரை உடற் பயிற்சி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு உணவுக் கட்டுப்பாடும் தேவை. அதிலும், ஒரு நடிகனாக இருப்பதால், உணவு விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பேன். அதற்கு ஏற்றாற்போல் என் மனைவி டயட்டிஷியனாக அமைந்துவிட்டதால், எனது உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார். அந்தவகையில், காலையில், எழுந்ததும் நெல்லிக்காய் ஜுஸ் சாப்பிடுவேன்.

இது திருமணத்துக்கு முன்பிருந்தே அம்மா ஏற்படுத்திய பழக்கம். பின்னர், காலை உணவில் முட்டையின் வெள்ளைக் கரு கட்டாயம் சேர்த்துக் கொள்வேன். பொதுவாக அசைவ உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுவேன். சிக்கன் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாட்டுக் கோழி அதிகம் எடுத்துக் கொள்வேன். மட்டன் அதிகம் வெயிட் போடும் என்பதால், எப்போதாவது சாப்பிடுவேன்.

அதுபோல கடல் உணவுகளும் அதிகம் விரும்பி சாப்பிடுவேன். பாலைத் தவிர்த்துவிட்டு, கிரீன் டீ அதிகம் எடுத்துக் கொள்வேன். என்னுடைய பேவரைட் ஃபுட் என்றால் அது சவுத் இந்தியன் ஃபுட்தான். அது ஹெல்தியானதும் கூட. ஆனால், நான் டயட் மெயின்டன் செய்வதால், சப்பாத்தி, தால், சப்ஜி போன்ற நார்த் இந்தியன் உணவுகளைத்தான் பெரும்பாலும் இரவில் எடுத்துக்கொள்வேன். அதுபோன்று வியாழக்கிழமையில், அசைவம் சாப்பிட மாட்டேன்.

அன்று ஒருநாள் முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். இவைதான் நான் பெரும்பாலும் கடைப்பிடிக்கும் டயட். ஃபிட்னெஸை பொருத்தவரை, எப்படி நாம் தினசரி சாப்பிடுகிறோமோ அதுபோல, உடற்பயிற்சிகளும் தினசரி கடமையாக நினைக்க வேண்டும். ஏனென்றால், இப்போது இருக்கிற பரபரப்பான வாழ்க்கையில், ஃபிட்னெஸ் மிகவும் முக்கியமானது. அதுதான் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

தொகுப்பு: தவநிதி