Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளிடம் அதிகரிக்கும் சர்க்கரை நோய்...

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தை நல மருத்துவர் சத்யமானசா காயத்ரி வினய்

கவனம் ப்ளீஸ்!

முன்பெல்லாம், குழந்தைகள் மைதானத்தில் விளையாடி, சைக்கிள் ஓட்டி, கவலையின்றி உற்சாகமானவர்களாக சுற்றி வந்தார்கள். ஆனால் இப்போது, பல குழந்தைகள் சின்ன வயதிலேயே குளுக்கோஸ் மீட்டர்கள், உணவுமுறை அட்டவணைகள் மற்றும் மருத்துவருடன் கலந்தாலோசனை சந்திப்புகள் என்ற நிலைக்கு வந்துவிட்டதை நாம் காண்கிறோம்.

குழந்தைகளுக்கான சர்க்கரை நோய் முக்கியமாக இரண்டு வகைப்படும்: வகை 1 சர்க்கரை நோய் மற்றும் வகை 2 சர்க்கரை நோய். வகை 1 சர்க்கரை நோய், முக்கியமாக இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை அழிப்பதால் (தன்னுடல் தாக்குநோய்) ஏற்படுகிறது. வகை 2 சர்க்கரை நோய், முக்கியமாக இன்சுலின் எதிர்ப்புத் தன்மை காரணமாக உருவாகிறது.

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சர்க்கரை நோய் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பிற உடல்நலப் பிரச்னைகள், குழந்தைகளின் வாழ்க்கை முறைகளும், சூழல்களும் எந்த அளவிற்கு மாறி வருகின்றன என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக வாழ்க்கைமுறை மாற்றங்களால் குழந்தைப் பருவத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கவலையளிக்கும் இந்த மாற்றத்திற்கான காரணங்களையும், தங்கள் குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்த பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகும் என்கிறார் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எஸ். சத்யமானசா காயத்ரி வினய். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

குழந்தைகளிடையே சர்க்கரை நோய் ஏன் அதிகரித்து வருகிறது?

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடையே சர்க்கரை நோய் அதிகரித்து காணப்படுவதற்கு மிக முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றமே. குறைந்திருக்கும் உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடு, அதிகரித்த திரை நேரம், துரித உணவுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உடல் எடை அல்லது அதிக மன அழுத்தம் ஆகியவை ரத்தசர்க்கரை பிரச்னைகள் உருவாவதற்கும், அதிகரிப்பதற்கும் பங்களிக்கின்றன.

போதுமான தூக்கமின்மை, தாமதமாக உணவு உட்கொள்வது, சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் அருந்துவது போன்றவையும் குழந்தைப் பருவ நீரிழிவிற்கு காரணமாக இருக்கின்றன. இவை, உடலின் இயல்பான செயல்பாட்டைக் குறைத்து, இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கின்றன. மாறாக, சமச்சீரான உணவுகளையும், பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தினசரி உணவாக குழந்தைகள் கொண்டிருப்பதை பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் எவ்வாறு உருவாகிறது?

குழந்தைகளின் உடலுக்கு குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்த இன்சுலின் தேவை. உடல் இன்சுலினுக்கு சரியாக பதில்வினையாற்றாதபோது அல்லது போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாதபோது, குளுக்கோஸ் உடலால் பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. நீரிழிவு உள்ள குழந்தைகள், புதிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் (கேழ்வரகு, சோளம், பழுப்பு அரிசி), புரதம் நிறைந்த உணவுகள் (முட்டை, பன்னீர், பருப்பு வகைகள், முளை கட்டிய பயறுகள்), மோர், தயிர், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள் மற்றும் விதைகள், போதுமான தண்ணீர் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவை உட்கொள்ள வேண்டும்.

வகை 1 சர்க்கரை நோய்

குழந்தைகளிடம் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. இது, ஒரு தன்னுடல் தாக்கு நிலையாகும்; உடலானது தவறுதலாக இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. இது வாழ்க்கை முறை, துரித உணவுகள் அல்லது அதிக எடையால் ஏற்படுவதில்லை.

வகை 2 சர்க்கரை நோய்

ஒரு காலத்தில் முதியவர்களிடம் மட்டுமே காணப்பட்டது; இப்போது அதிக எடை கொண்ட அல்லது உடல் செயல்பாடு குறைவாக உள்ள குழந்தைகளிடமும் அதிகமாக கண்டறியப்படுகிறது. உடல்பருமன், உடற்பயிற்சியின்மை மற்றும் மோசமான உணவுப்பழக்கம் ஆகியவற்றால் இது தூண்டப்படுகிறது.

குழந்தைகளிடம் சர்க்கரை நோய் எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்?

குறித்த காலஅளவுகளில் ரத்தசர்க்கரை பரிசோதனைகள், மருத்துவர் பரிந்துரைத்த மருந்து அல்லது இன்சுலின், வயதுக்கு ஏற்ற உடல் செயல்பாடு, சமச்சீரான உணவு, மற்றும் குழந்தைகளுக்கான நாளமில்லாச் சுரப்பி நிபுணரிடம் தவறாமல் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது ஆகியவை அவசியம். இதில் குடும்பங்களின் ஈடுபாடு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர், குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, ஆதரவாகவும், அன்பாகவும் பேசி ஆலோசனை வழங்கும்போது குழந்தைகள் நீரிழிவு மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

இதற்கு சிகிச்சை உள்ளதா? குழந்தைகளுக்கு எத்தகைய கூடுதல் கவனிப்பு அவசியம்?

வகை 1 சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கு இதுவரை முழுமையான சிகிச்சை கண்டறியப்படவில்லை. ஆனால் இன்சுலின் மற்றும் வாழ்க்கை முறை சமநிலை மூலம் அதை திறம்பட நிர்வகிக்க முடியும். குழந்தைகளிடையே ஏற்படும் வகை 2 சர்க்கரை நோயை எடை மேலாண்மை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் மாற்றியமைக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக நீரிழிவு நிலை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால். அக்குழந்தைகளுக்கு, சரியான நேரத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிகள், தவறாமல் உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற விளையாட்டு, குறைந்த அல்லது அதிக சர்க்கரை அளவைக் கண்காணித்தல், உணர்வு ரீதியான ஆதரவு, போதுமான நீர் மற்றும் திரவ பானங்களை அருந்துதல் மற்றும் தூக்கம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை அல்லது குறைக்க வேண்டியவை சர்க்கரை பானங்கள், பழச்சாறுகள், குளிர்பானங்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் (சிப்ஸ், பிஸ்கட், எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள்), அதிகப்படியான இனிப்புகள், பேக்கரி தயாரிப்புகள், வறுத்த மற்றும் துரித உணவுகள்.குறைந்தபட்சம் 1 மணிநேரத்திற்கு வெளிப்புற விளையாட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்குவதற்கான அட்டவணை, திரை (மொபைல்) பயன்பாடு இல்லாத உணவு நேரங்கள், மன அழுத்தமில்லாத படிப்பு முறை ஆகியவை தினசரி பழக்கவழக்கங்களில் இடம்பெற வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ள குழந்தைகள் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாமா?

அவர்கள் மிதமாகவும் வழிகாட்டுதலுடனும் எப்போதாவது இனிப்புகள் அல்லது தின்பண்டங்களை சாப்பிடலாம்; ஆனால் தொடர்ந்து சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது. திருவிழாக்கள் மற்றும் பிறந்தநாட்களின் போது நீரிழிவு நோய்க்கு உகந்த உணவுகளை தேர்வு செய்து உண்பதும், உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதும் நல்லது.

நீரிழிவு உள்ள குழந்தைகள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியுமா?

ஆம், நிச்சயமாக. முறையான கவனிப்புடன், இயல்பான வாழ்க்கையை சர்க்கரை நோய் உள்ள குழந்தைகளால் வாழ முடியும். இதற்கு விழிப்புணர்வு, சமநிலையான பழக்கவழக்கங்கள், உணர்வு ரீதியான ஆதரவு மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேலாண்மை ஆகியவை முக்கியம். குழந்தைப் பருவ சர்க்கரை நோய் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக வளர்ந்து வருகிறது. ஆனால் கவனிப்பு, சமச்சீரான வாழ்க்கை முறை மற்றும் பெற்றோரின் ஆதரவான வளர்ப்பின் மூலம், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் வளரமுடியும். அவர்கள் மற்ற குழந்தைகளைப் போலவே விளையாட, கற்றுக்கொள்ள, சிரிக்க மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்; ஆனாலும் சற்று கூடுதல் விழிப்புணர்வுடனும் கவனிப்புடனும் இருக்க நாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

சர்க்கரை நோய் ஒரு குழந்தையின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி சுதந்திரமற்றதாக, சுவாரஸ்யமற்றதாக ஆக்கவேண்டிய அவசியமில்லை. பெற்றோர், பள்ளிகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, சர்க்கரை நோய் பாதிப்புள்ள குழந்தைகளும் மற்ற குழந்தைகளைப் போலவே ஆற்றல் மிகுந்தவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் வளரும் உலகை நம்மால் உருவாக்க முடியும்.

- ஸ்ரீ தேவி குமரேசன்