நன்றி குங்குமம் டாக்டர்
அகமெனும் அட்சயப் பாத்திரம்
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
சரி. ஆராய்ச்சி செய்து சரியான முடிவினை எடுத்து விட்டோம். அது போதுமா? வெற்றி வந்து வாசல் கதவைத் தட்டி வணக்கம் சொல்லி நம்மை இறுகப்பற்றிக்கொள்ளுமா என்றால் நிச்சயம் இல்லை. இனிமேல்தான் main picture என்பதுபோல் நம் முடிவுகள் எதிர்பார்க்கும் வெற்றிபலனைக்கொண்டு வந்து கொடுக்க சில வரையறைகளை கடைபிடிக்கவேண்டும்.
இப்போதே கண்ணைக் கட்டுகிறதே.. இவ்வளவு யோசிக்க வேண்டுமா அப்படி ஜெயிக்கத்தான் வேண்டுமா என்று தோன்றுகிறதா? கை கொடுங்கள் நீங்கள் யதார்த்தவாதி. சாதனையாளர் ஆகும் எண்ண விதை உங்கள் இயல்பிலேயே இல்லை என்று புரிந்து கொண்டு உங்கள் வழக்கமான நடைமுறைகளையே பின்பற்றலாம். உண்டு, உறங்கி, கூட்டத்தில் ஒருவராக எல்லாவற்றையும் சாதாரணமாகச் செய்து அடையாளம் இல்லாமல் யாரோவாகவே இருந்து மறைந்து போகலாம். யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.
எனவே, சாதனை எண்ணம் இருக்கிறதா? எனக்கு வெற்றிக்கனி வேண்டுமா? என்பதைத் தெளிவாக யோசித்த பிறகு களத்தில் இறங்குங்கள். சாதனை புரிந்தவர்கள் எல்லாம் நல்லவர்கள், யதார்த்தவாதிகள் எல்லாம் கெட்டவர்கள் என்றெல்லாம் எந்த விதியும் இல்லை. ஆனால், சாதனையாளர்களைப் பார்த்து பொறாமை கொள்வது, எரிச்சலடைவது இவற்றை தவிர்க்க வேண்டும். அதுபோலவே, ஒரு சாதனையை, வெற்றியை அடைந்து விட்டோம் என்றால் உடனே மற்றவர்கள் எல்லாம் வீண் என்று தாழ்வாகப் பார்ப்பதும் தவறு. இந்த இரண்டு மனநிலைகளும் நிம்மதியைக் குலைத்து விடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது வாருங்கள்.. ப்ப்பூ இவ்வளவுதானா.. இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்.. என்ன புகழ், வெற்றி இதிலெல்லாம் ஆசையில்லை.. இந்தப்பழம் புளிக்கும் அதனால் உண்ணவில்லை என்று நாம் உதறும் எட்டாக்கனிகளைப் பறிக்கும் செயலாற்றலின் அடிப்படைக் காரணிகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
1. சமயோஜிதம் (Presence Of mind): சமயோசிதம் என்போம் இல்லையா? சில நேரங்களில் அந்தந்த சூழ்நிலை சார்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். எல்லா நேரத்திலும் எல்லாமும் வகுத்த வண்ணமே செல்லும் என்று நாம் உறுதியாகக் கூறமுடியாது. புறச்சூழல்கள் காரணமாக நிலைமை மாறும்பொழுது அதற்குத் தகுந்தபடி உடனடியாக முடிவு எடுப்பதே சமயோசிதத் திறன்.
2. பொறுப்பு (Responsibility): கல்வியோ, வேலையோ, திருமணமோ, வணிகமோ எதுவாயினும் நாம் எடுக்கின்ற முடிவின் விளைவுகளுக்கு நாமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.இந்த உறுதியான நிலைப்பாட்டினை மனதில் பதிய வைத்துக் கொண்டால் நிச்சயம் எடுக்கும் முடிவுகளில் கவனத்துடன் இருப்போம். கூரான அறிவாற்றலை சரியான நேரத்தில் பயன்படுத்துவோம். பொறுப்பற்ற தன்மையாளர்களே பக்குவம் அடையாமல் தன் தோல்விகளுக்கு அடுத்தவரைக் குறை கூறுவார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
3. தொடர்ச்சி (Consistancy) : சிறுவயதில் புதையல் கதையை கேட்டிருப்போம். ஒருவன் பத்தடி தோண்டியபின் சலித்து சென்று விட்டான். ஒருவன் 20 அடி, ஒருவன் 30 அடி மற்றொருவன் 40, கடைசியில் ஒருவன் 50 அடி என்று பலரும் தோண்டிவிட்டு நகர்ந்து சென்று விட்டார்கள். ஆனால், 52 ஆவது அடியில் அவனுக்கு புதையல் காத்திருந்தது. இன்னும் இரண்டு அடி மனம் தளராமல் முயற்சி செய்து இருந்தால் புதையல் கிடைத்திருக்கும்.
இப்படித்தான் நம் சலிப்பு அடுத்தவருக்கு வெற்றி எனும் புதையலை விட்டுக் கொடுத்து விடும். நாளை முதல் உடற்பயிற்சி செய்கிறேன், அடுத்த வாரத்தில் இருந்து படிக்கிறேன், இனிமேல் இத்தனை பணம் மாதம் சேமிக்கிறேன் என்று ஏதாவது ஒரு நல்ல இலக்கை முடிவெடுத்து ஆரம்பிப்போம். ஆனால் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுவோம்.
வேறு சிலரைப் பார்ப்போம் போன வாரம் ஒரு பிசினஸ் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருப்பார். இப்போது கேட்டால் வேறொரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வார். மற்றொரு நாளை புதிய பார்ட்னர் புது இலக்கு என்று அடிக்கடி இடம் மாறிக் கொண்டே இருப்பார். இங்கே Multi-Tasking என்பது வேறு Inconsistancy வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு செயலைத் தொடர்ந்து முறையாகச் செய்வதில் அவர்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும். அல்லது உளவியல் தடைகள்கூட இருக்கலாம். அவற்றை இனம் கண்டு, சீரான செயலாக்கத் திறனான Conssitancy - யை வசப்படுத்தினால் வாழ்க்கை நிச்சயம் புதுப் பொலிவோடு மின்னத் துவங்கும்.
4. சிறப்பான செயல்பாடு (Excellence): இது போதுமென்ற மனநிலை வெற்றிபாதைக்கு ஒத்து வராது. ஒன்றை அடைந்து விட்டோமா.. இதுவே சிறந்தது என்று எண்ணாமல் மேலும் சிறந்ததைத் தொடர்ந்து தேடுவது சாதனையாளர்களின் குணம்.கூடுதல் உற்சாகத்தோடு புதிய அதி அற்புதமானவற்றை புதிய இலக்குகளாக்கிக் கொண்டு இயங்குவது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். இந்த சிறந்த தேடல் தகுதியான உயரிய இடத்தில் நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.
5.கவனம் (Mindfullness): நாம் வேலை செய்வது துன்பம், தூங்குவதுதான் சுகம் என்று முடிவு செய்து இருக்கிறோம். ஆனால், முதலாளியைப் பாருங்கள் என் கம்பெனி என்று ஆசையோடு ஆர்வம் பொங்க அலுவலம் வருவார். ஏனோ தானோ என்று எதைச் செய்தாலும் அது முழுமையான பலனளிக்காது.மகிழ்ச்சியையும் தராது என்றுணர்ந்து ஒவ்வொரு செயலையும் விரும்பி அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட வேண்டும்.
6. தனித்துவம் (Uniqueness): மற்றவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று எண்ணாமல், உங்களுடைய திறமை, வாழ்க்கைச் சூழல் சார்ந்து இலக்குகளையும் வெற்றிக்கான பாதைகளையும் அமைத்துக் கொள்வது அறிவானது. வெற்றியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் தவறில்லை. அது Inspiration ஆகும். ஆனால் பொறாமை கொண்டு அப்படியே பிறரைப் பிரதியெடுத்தது போல் செயலாற்றுவது மதிப்பைக் குறைத்து விடும். தனித்துவம் எதிலும் அவசியம்.
7. அறம் (Virtue): மனிதனின் அடிப்படை நற்குணம்தான் Virtue. சுயபலன் தரும் என்றாலும் தீய சமூக விரோதச் செயல்களைச் செய்யக் கூடாது. எந்தச் சாதனை புரிந்தாலும் இச்சமூகத்தில் கடைசியில் நிற்கப்போவது பிறருக்குப் பயன் தரும் வகையில் வாழும் நற்குணமே என்பதை மனதில் நிறுத்துவோம்.வெற்றிப் பாதையின் மிதப்பான ஓட்டத்தில் நல்ல மனிதர்களை ஒருபோதும் புறக்கணித்து விடக்கூடாது.
8. நிர்ணயம் (Manifeststion): நல்ல எதிர்காலத்தைக் மனக்காட்சிப்படுத்துதல் பெரும்நம்பிக்கையை உள்ளே உருவாக்கும். மனவலிமையையும், ஆக்கபூர்வமான செயல்களில் நாட்டமும் தானாக கண்முன் விரியும். தான் செய்ய வேண்டியது என்ற தெளிவும் பிறக்கும்.
9. வழிகாட்டி (Guidance) : ஒரு ரயிலைக் கோட்டை விட்டதால் வாழ்க்கையே மாறிவிட்டதாக கதைகளைக் கேட்டிருக்கிறோம். ஒரு நொடி தாமதத்தால் உயிர் போய் விட்டது என்று கேட்டு வருந்துகிறோம். 12B எனும் தமிழ்த் திரைப்படத்தில், நாயகன் பேருந்தை உரிய நேரத்தில் பிடித்து வேலையில் சேர்வதால் வாழ்க்கை எப்படிப் போகிறது? அதே பேருந்து தவறவிட்டு, நேர்முகம் செல்ல முடியாது போனால் அவன் வாழ்க்கை எப்படித் திசை மாறுகிறது? என்று இரு வேறு கோணங்களைக் காட்டியிருப்பார்கள்..
இதுபோல, நாம் தவறவிடும் சந்தர்ப்பங்கள், கைக்கொள்ளும் தவறான முடிவுகள் ஒவ்வொன்றுமே அதற்குரிய சாதக, பாதகப் பலன்களை கொண்டிருக்கும் என்ற விழிப்புணர்வு வேண்டும். விழிப்புணர்வு ஒரு ஆயுதம் என்றால் நம்முடனே இருக்கும் அனுபவசாலிகள் நமக்குக் கேடயம் போல என்று புரிந்து கொள்வது அவசியம். மிகப்பழமையான காரணி என்றாலும், அனுபவமிக்கவர்களின் அறிவுரைகளை ஏற்பது வெற்றிக்கான எளிய வழிகளில் இனிமையானதும் ஆகும்.
10. தகுதிப்படுத்தல் (Updation): காலத்திற்கேற்ப தம்மை update செய்து கொள்வது என்ற இந்த தகுதியில் மட்டும் நாம் யாரும் யாருக்கும் அறிவுரைகள் கூறத் தேவையேயில்லை. புதிதாக எது வந்தாலும் ஓடிப்போய் வாங்கி புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு நானும் Gen-Z என்று மார்தட்டுவதில் நம்மவர்கள் கில்லாடிகள்தான். ஆனால் காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும்போது உங்கள் இலக்குகளுக்கு அவை எவ்வளவு துணை புரியும் என்று கொஞ்சம் யோசித்துப் பின் தேர்ந்தெடுங்கள். இந்த நவீன Digital உலகம் வெறுமனே நம் நேரத்தை விழுங்கி புதைகுழிக்குள் தள்ளிவிடும் அபாயம் நிறைந்தது என்பதை அடிக்கடி சொல்லிக்கொள்வோம்.
உலகப் புகழ் பெற்ற அறிஞர் பிளாட்டோ, ‘‘உங்களிடம் இருக்கும் வெற்றி அல்லது செல்வம் ஒரு கலையின் தூண்டுதல் போன்றது. கல்லில் காந்தம் செயல்படுவதைப் போல உங்களின் மேன்மை பிறரையும் காந்தம் போல் சக்தியுள்ளதாக மாற்றும். காந்தக்கல் இரும்பை மட்டும் கவருவதில்லை நெருங்கிவரும் அடுத்தடுத்த இரும்பு வளையங்களை சக்தியேற்றும். இது ஒரு தொடர் சங்கிலி விளைவாக மாறும். அப்படியான நற்சக்தியின் அளவை பன்மடங்காக்கும் தூண்டு சக்தியாக நீங்கள் முதல் காந்தம் ஆகுங்கள்” என்கிறார். எவ்வளவு ஈர்ப்புமிக்க பொருள்மிக்க வாசகங்கள் இவை இல்லையா? நினைவில் நிறுத்துவோம்.
காலம் சிலரை மட்டுமே தன் பக்கத்தில் நிரந்தரமாகப் பதிய வைக்கிறது. உங்கள் ஒருவரின் வாழ்க்கை மாற்றம் இன்னொருவருக்கு உந்துசக்தியாகும் என்ற கம்பீரமான நம்பிக்கை உணர்வோடு இனி நல்ல முடிவுகளை எடுங்கள். அதனையொட்டிச் செயலாற்றுங்கள்.தன்னிறைவு பெற்றவனது வாழ்வே சமூகத்திற்குப் பயனுள்ளதாக மாறும் வலிமையைக் கொண்டிருக்கும். எனவே, மகிழ்ச்சியோடு பயன் வாழ்வை நோக்கி மெல்ல அடியெடுத்து வைப்போம்.