Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முடிவெடுக்கும் திறனும் வெற்றிப்பாதையும்!

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

நேர மேலாண்மையைச் சிறப்பாகத் திட்டமிடுவதோடு, இலக்கு நோக்கிப் பயணிப்பதில் மிக முக்கியமான காரணி முடிவுவெடுக்கும் ஆற்றல். எடுத்த முடிவுகளில் எதில் உறுதியாக இருக்க வேண்டும், எதை எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சூட்சமத்தில்தான் வெற்றியின் திறவுகோல் ஒளிந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

சிலரைப் பார்த்து இருப்பீர்கள் தினசரி உணவில் “இது இருந்தால் சாப்பிட மாட்டேன்”, “அப்படி வேக வைத்தால் சாப்பிட மாட்டேன்”, “இப்படி வறுத்தால் தொடக்கூட முடியாது “, “சோறு இந்தப் பதத்தில்...குழம்பு இப்படி”, இந்தக் காய்கறிகள் கிட்ட வரவே கூடாது”, “கூட்டுக்கு தேங்காய் இவ்வளவு போட வேண்டும்”, அதேபோல், “எனக்கு இந்த நிறம்தான் பிடிக்கும்.” இப்படித்தான் அணிவேன். ஒரு சென்டிமீட்டர் மாறக்கூடாது”, இந்தப் பொருள் இங்கே தான் இருக்க வேண்டும்”, “இப்படி மாற்றினால் என் உயிரே போச்சு” என்பதாக ஒன்றுமே இல்லாத அன்றாட வாழ்வின் சிறு சிறு விஷயங்களில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இது அவரவர் தனித்துவம். சுதந்திரமான தெரிவு என்றாலும் இதற்கு அளவு வேண்டும் இல்லையா?

‘இப்படித்தான்’ என்று சில அவசியமற்ற வரையறைகளை வகுத்துக் கொண்டு இவர்கள் தங்களின் நேரத்தையும், மனநிம்மதியையும் தொலைப்பதோடு, சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருப்பார்கள். சிறு முடிவுகளில் இவ்வளவு உறுதியாக இருக்கும் இத்தகையோர் பெரிய பெரிய முடிவுகள் எடுப்பதில், வாழ்க்கைத் திட்டமிடுதல்களில் கோட்டை விடுவதையும் நாம் பார்க்க நேரிடுகிறது.

எனவே முக்கியத்துவம் இல்லாத அன்றாட வேலைகளில் சில எளிய சமரசங்களை செய்து கொள்வது மிகவும் நல்லது. வெற்றியாளராக வேண்டுமெனில், நீண்டகாலப் பலன் தரக்கூடிய இலக்கு, கல்வி, வேலை, சுய அடையாளம் சார்ந்த திட்டமிடுதல் போன்றவற்றில் “அதை நான் அடைந்தே தீருவேன் “, “அதற்காக என்னிடத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வேன்” “அதை நோக்கி தொடர்ந்து உழைப்பேன்” என்று முடிவெடுத்து அவற்றில்தான் உறுதியாக இருக்க வேண்டும். இந்த அடிப்படைக் குழப்பத்தை நாம் சரி செய்து விட்டாலே இலக்கு நோக்கிய பயணம் சுலபமாகிவிடும்.

ஒரு திருமண மெஹந்தி விழாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கான டிசைன்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். இந்த டிசைன்தான் வேண்டும், இப்படி பூ, இலை, இங்கே அரபிக் டிசைன், நடுவே ‘மண்டேலா’ பேட்டர்னில் வர வேண்டும் என்றெல்லாம் நுட்பமாகக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்காக மெஹந்தி கலைஞர்கள் மீண்டும் மீண்டும் அலைபேசியில் அவர் கேட்ட டிசைனைத் தேடி, நாலைந்து டிசைன்களைக் காட்டி, ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு வடிவக் கோலங்களை, வளைவுகளைத் தேடியெடுத்து அவற்றைப் பொருத்தி அந்தப் பெண்ணுக்கு திருப்தி தரும் வகையில் இரண்டு கைகளிலும் மெஹந்தி போடுவதற்குள் மூச்சு திணறிவிட்டது.

அவருக்கு மட்டுமே நேரம் அதிகம் எடுத்தது. அது மட்டுமா, மெஹந்தி போடும் பொழுது, கொஞ்சம் விலகினாலோ, சற்று அடர்த்தியாகவோ மெல்லிசாகவோ போட்டுவிட்டால் “இல்லை இதை மாற்றி மீண்டும் நேர்த்தியாகப் போடுங்கள்” என்று துடைத்துக் கொண்டும் இருந்தார். இப்படி ஒரு மெஹந்தியில் இவ்வளவு கூர்மையாக இருக்கும் அந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன். அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று நான் கேட்க, தயக்கமின்றி “தெரியாது முடிவு எடுக்கவில்லை.. ஏதோ பாத்துக்கலாம் ’’ என்றார்.

பாருங்கள் பயனற்ற செயல் மீது இவ்வளவு பிடிவாதமாக தீர்மானமாக இப்படித்தான் வேண்டும் என்று உறுதியாக இருப்பவர் அவசியமானவற்றில் முடிவு எடுக்காமல் இருக்கிறார். வாழ்க்கையில் தான் என்னவாகப் போகிறோம் என்ற சிந்தனை கொஞ்சமும் இல்லை.இப்படித்தான் சிறுசிறு விஷயங்களில் செலுத்தும் அதிக கவனம், தேவையற்ற பிடிவாதம் வாழ்க்கையை பொருளற்றதாக ஆக்கிவிடும்.

நேர மேலாண்மையும், முடிவெடுக்கும் சமயோசிதமும் சிறப்பாக இருந்தால் போதுமா? அதற்கு ஒத்துழைக்க நம் உடல்நலத்தை கவனமாகப் பேணுவது தேவைதானே? உடற்கூறைப் பொருத்தவரை ஒவ்வொருவரும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இரவில்தான் இசையமைப்பார் என்று அறிந்திருக்கிறோம்.

நமது வீடுகளில் யாரேனும் இரவு நேரத்தில் விழித்து ஏதேனும் புதுமையாக செய்தால் கண்டிப்போம். ஆனால் தன் உடலியக்கக் கடிகாரம் (Biological clock) சொல்வதைக் கேட்டு, தான் எந்த நேரத்தில் அதிக புத்தாக்க ஆற்றலோடு (Creative power) இருக்கிறோம் என்பதை உணர்ந்து அவர் அவ்வாறு தன் வேலை நேரத்தை முடிவு செய்ததே வெற்றியின் ரகசியம் என்பதை மறந்து விடுகிறோம்.

எனவே, அதிகாலையில் எழுவதுதான் நல்லது. இரவில் விழித்திருப்பது தவறு என்ற பழமையான நேர மேலாண்மை எல்லாம் இக்காலத்திற்கு ஒத்து வராது என்பதை புரிந்து கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், தற்காலத்தில் இரவு நேரங்களில்தான் பலர் இணைய வழியாக வேலை செய்கிறார்கள். பலரும் ஷிப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். வெவ்வேறு நாடுகளுகளோடு வணிக, வர்த்தகங்கள் செய்பவர்கள் அந்தந்த நாடுகளின் நேரத்தையொட்டி, விழித்திருந்து வேலை செய்கிறார்கள்.

இத்தகைய சூழல்களில் இரவு விழிப்பை ஏற்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் அதிகாலையிலோ, மதிய நேரத்திலோ கட்டாயம் உறங்கி உடலுக்கும், மூளைக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். அவரவர் தொழில் சார்ந்தும், உடல் இயக்கத்தின் தன்மை சார்ந்தும் பணி செய்யும் நேரங்களை முடிவு செய்து கொண்டால் மேம்பட்ட மாற்றங்கள் ஏற்படும். சாதாரண மனிதனுக்கு குறைந்தது 6-7 மணி நேரம் தூக்கம் மிக அவசியம் என்பதை மட்டும் மறக்காமல் கடைபிடிப்பது நலம்.

உளவியலின் Conflict கோட்பாட்டின்படி, மனிதன் எப்போதெல்லாம் முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையில் நிற்கிறானோ அப்போதெல்லாம் தனக்குள் ஒரு மோதலை (Conflict) நிகழ்த்துகிறான். தயக்கம், உறுதியின்மை, பதட்டம் போன்றவற்றைக் கடந்துதான் கவனக்குவிப்பு செய்து ஒரு முடிவினை எடுக்கிறான். பெரும்பாலும், ஏற்கனவே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நுண்ணுணர்வுகள், ஆழ்மனதில் படிந்த உள்நோக்கங்கள், தனது தகுதி, இதுவரை பெற்ற அனுபவங்கள், கல்வி போன்றவற்றைச் சார்ந்தே முடிவெடுக்கிறான். மேலும், உலகெங்குமுள்ள மனிதர்கள் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் முடிவெடுப்பதில் சில வழக்கமான உத்திகளையே தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள் என்றும் உளவியல் எடுத்துக்காட்டுகிறது. அவற்றை இப்போது பார்ப்போம்.

Vigilance: மிகக் கவனமாக, தேவையான தகவல்களைத் தேடி பல்வேறு மாற்று வழிகளையும் ஆலோசித்த பிறகு, வலிமையான பயன் தரக் கூடிய முடிவை எடுக்கும் முறை. இம்முறை உலகெங்கும் பிரபலமானதாகவும், சிறந்ததாகவும் அறியப்படுகிறது.

Hyper Vigilance / Panic: இம்முறை மனதுள் நிலவும் சமச்சீரற்ற உணர்வுகளின் உந்துதல் காரணமாக, பதட்டமாக உடனடியாக ஏதேனும் ஒரு எளிய முடிவினை சட்டென்று எடுத்து விடுவதாகும். இது நேரத்தை மிச்சப்படுத்தும் என்றாலும் சில நேரம் பின்விளைவுகள் எதிர்மறையாக மாறக்கூடும்.

Defensive Avoidance: இந்தப் பிரிவு மனிதர்கள் முடிவெடுத்தலைத் தவிர்ப்பார்கள். இரண்டு, மூன்று முடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் நியாயப்படுத்துவார்கள். எனவே எதை எடுப்பது என்ற குழப்பத்திலே காலம் தள்ளுவார்கள்.

Rationalization: கண்முன் நிற்கும் முடிவுகளின் உண்மைத்தன்மையை உணராமல் மறுக்கும் தன்மை கொண்டது. இந்த வகை மனிதர்கள் அனைத்து முடிவுகளிலும் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகளைப் பற்றியே சிந்தித்து புறக்கணிப்பார்கள். மற்றொரு பக்கம் இவர்கள் முடிவுகளின் நல்ல கூறுகளை மட்டுமே பட்டியலிட்டுக் கொண்டும் இருப்பார்கள்.

Buck Pass: இது நம்மூரில் பலர் கடைப்பிடிக்கும் உத்தி என்று சொல்லலாம். முடிவு எடுக்க வேண்டிய சரியான நேரத்தில் அவர்கள் தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவித்து விலகிக் கொள்வார்கள். முடிவு எடுக்க வேண்டிய அவசியத்தை உணராமல் அலட்சியம் காட்டுவார்கள். அப்போது வேறு வழியின்றி மற்றவர்கள் ஒரு முடிவினைத் தேர்ந்தெடுத்து செயலாற்றி விடுவார்கள். அப்போது மூக்கை நுழைக்கும் இவர்கள் இது தவறான முடிவு, இதை இப்படிச் செய்திருக்கலாமே என்று குறைகளை அடுக்குவார்கள். இது ஒரு தந்திரமான உளவியல் உத்தி.

Procrastination: இது சிறியவர் முதல் பெரியவர் வரை நம் எல்லோருக்கும் பிடித்தமான முடிவெடுக்கும் முறை என்று சொல்லலாம். ஏனெனில், இந்த வகையினர் முடிவை எடுத்து எப்படிச் செயலாற்றுவது என்று எல்லாவற்றையும் வெகுகாலம் சிந்தனை அளவிலேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். இதர செயல்களில் கவனம் செலுத்தி, உரிய முடிவை எடுக்காமல் காலம் தள்ளிக் கொண்டே இருப்பார்கள்.

உளவியல் நிபுணர் Leon Mann அவர்கள் மேற்கண்ட முடிவெடுக்கும் உத்திகளில் நம் மனதை பெரும்பாலும் ஆக்கிரமித்து இருக்கும் உத்தி எது என்று கண்டறியும் மதிப்பீட்டு முறையினை வகுத்துள்ளார். அதன்படி, நீண்ட காலம் எந்த முன்னேற்றமும் இல்லாத தேக்கம், தொடர் தோல்விகள், ஏமாற்றங்கள், தவறான பின்விளைவுகள் என்று ஏற்படும்போது, மனம் சோர்ந்து போகாமல், நமது முடிவெடுக்கும் வழிமுறையில் பிழைகள் இருக்கலாம் என்று உட்புறக் காரணிகளை அலசலாம்.

உரிய மாற்றங்களை நம்மில் ஏற்படுத்திக் கொண்ட சிறந்த பொருத்தமான முடிவுகளை எடுக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். கைக்கருகே கிடைக்கும் இவ்வாறான நவீன உளவியல் உதவிகளை, உந்து சக்திகளைப் பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்ட வேண்டாம்.இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்..