Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

HIV குழந்தைகளின் அன்புள்ள அப்பா!

நன்றி குங்குமம் தோழி

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகெங்கிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக பாலியல் தொடர்பின் மூலம் பரவும் எச்.ஐ.வி (HIV) வைரஸ் தொற்று அதன் தீவிர நிலையில் எய்ட்ஸ் நோயாக உருவெடுக்கிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மற்றொரு நபருக்கு மீண்டும் பயன்படுத்துவதாலும், ரத்தம் மாற்றுதல் போன்றவற்றாலும் பரவலாம். எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கும் வைரசின் பாதிப்பு இருக்கலாம். அவ்வாறு பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு வாழ்க்கை துணையும் அமைத்து, ஆதரவளித்து வருகிறார் சென்னையை சேர்ந்த சாலமன் ராஜ்.

திருமணம் ஆகி நீண்ட வருடங்களாக தங்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், ஒரு குழந்தையை தத்தெடுக்க நினைத்தவர், தற்போது 50க்கும் மேற்பட்ட எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘அப்பா’வாக இருக்கிறார். “திருமணமாகி பல காலங்கள் எங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தோம். பொதுவாக குழந்தையை தத்தெடுக்க முற்படும் போது, நிறைய குழந்தைகளை பார்த்து அதில் ஒரு குழந்தையை தேர்வு செய்யலாம். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை.

அப்போதுதான் ஏன் யாருமே விரும்பாத எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் என்ன என்று தோன்றியது. பலரிடமும் அது குறித்து தெரிவிக்கும்படி சொல்லியிருந்தேன். சில நாள் கழித்து திருநங்கை ஒருவர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று தனது பாதுகாப்பில் இருப்பதாக என்னை தொடர்பு கொண்டார். உடனே அங்கு சென்று அந்தக் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். அவன் பெயர் அற்புதராஜ். நான் அவனை அழைத்து வந்த போது அவனுக்கு 6 வயசு. அவனை நானும் என் மனைவியும் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டோம். அவனுக்கான சிகிச்சைகள், மருந்துகள் எல்லாம் தவறாமல் கொடுத்து பராமரித்தோம். நானும் என் மனைவி இருவரும் வேலைக்கு சென்றாலும், வீட்டில் அவன் தனியாகத்தான் இருப்பான். மதிய இடைவேளையில் நான் வீட்டிற்கு வந்து அவனுக்கு தேவையான உணவு, மருந்துகளை கொடுத்துவிட்டு செல்வேன்.

என்னதான் அவன் வீட்டில் பத்திரமாக இருந்தாலும், அவன் தனியாக இருப்பது எங்க இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் அவனை என்னுடன் அலுவலகம் அழைத்து செல்ல ஆரம்பித்தேன். ஆனால் அவன் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தை என்று தெரிந்ததும் உடன் வேலை செய்பவர்கள் அவனிடமிருந்து விலக ஆரம்பித்தனர். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. மேலும் இதனால் அலுவலகத்தில் பிரச்னை வேண்டாம் என்று எண்ணி அவனை அழைத்து செல்வதை நிறுத்தினேன். அப்போதுதான் அவன் வீட்டில் தனியாக இல்லாமல் ஒரு துணையோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மீண்டும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அந்தக் குழந்தை வந்ததும் அற்புதராஜ் குஷியாகிவிட்டான். அதன்பின்னர் அவன் தனிமையை உணரவேயில்லை.

இருவரும் ஒருவர் மேல் ஒருவர் பாசமாக இருந்தார்கள். அடுத்து அவர்களை வீட்டில் சும்மா வைத்திருக்கக் கூடாது என்று பள்ளியில் சேர்த்தேன். இரண்டு குழந்தைகளுடன் எங்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த நிலையில், ஒரு நாள் காலை முதியவர் ஒருவர் ஆந்திராவில் இருந்து என்னைப் பார்க்க வந்தார். வீட்டிற்கு வந்தவர் என் காலில் விழுந்து விட்டார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சங்கடமாகிப் போனது. விவரம் கேட்ட போது, அவரின் பாதுகாப்பில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களையும் நான் தத்தெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். முதலில் நான் மறுத்துவிட்டேன்.

ஆனால் என் மனதில் அந்த முதியவரும் அவரிடம் இருக்கும் அந்தக் குழந்தைகள் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. இது போன்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது எனக்காக கடவுள் கொடுத்த கடமை என்று புரிந்து கொண்டேன். அந்த இரண்டு குழந்தைகளையும் என் பராமரிப்பில் வளர்க்க முடிவு செய்தேன்’’ என்றவர், ‘ஷெல்டர்’ என்ற அமைப்பினை துவங்கி அதன் மூலம் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.

‘‘குழந்தை இல்லை என்று இருந்த நாங்க இப்போது 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோராக இருக்கிறோம். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மறுபக்கம் இவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். யாரோ செய்த தவறால் இந்தக் குழந்தைகள் எச்.ஐ.வி பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். பல இடங்களில் இவர்களை ஒதுக்கி வைக்கும் நிலைதான் உள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. அதனால் சில உடல் உபாதைகள் ஏற்படும். நமக்கு சளி, இருமல் ஏற்பட்டால் சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இவர்களுக்கு உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்காவிட்டால், நிமோனியா, காசநோய் போன்ற தீவிர நோயாக மாறக்கூடும். தொடர்ந்து அவர்களை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தினமும் இந்த நோயின் பாதிப்புக்காக மருந்துகளை எடுக்க வேண்டும்.

அவர்கள் வளர்ந்த பிறகு எதற்காக மருந்து எடுக்க வேண்டும், அவர்களுக்கு என்ன பிரச்னை என்ற கேள்வி அவர்களுள் எழும். அந்த சமயத்தில் அவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து தெரிவிக்கப்பட்டு கவுன்சிலிங்கும் வழங்குவோம். சிலர் எனக்கு இந்த நோய் ஏன் வந்தது என்ற கேள்வியினை என் முன் வைக்கும் போது, ‘அப்பா... நான் இருக்கேன்’ என்று ஆறுதல் அளிப்பேன்’’ என்றவர், இந்தக் குழந்தைகளுக்கு ஆரோக்கிய வாழ்வு, கல்வி, வேலை என அனைத்தும் அமைத்துக் கொடுத்து வருகிறார்.

“இங்குள்ள குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்கிறார்களா என்று தவறாமல் கண்காணிப்பேன். குழந்தைகளுக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டால், இங்கு 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு உள்ளது. இவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், புரதம் நிறைந்த உணவுகளை அவர்களின் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். என் முதல் குழந்தை அற்புதராஜ் முதுகலைப் பட்டம் முடித்துவிட்டு எனக்கு உதவியாக இருக்கிறான். அவனுக்கு தனியாக ஆதரவு இல்லம் ஒன்று அமைக்க விருப்பம். அதுவரை என்னுடன் களப்பணியில் ஈடுபட்டு வருகிறான். அவனைப்போல் மற்ற குழந்தைகளும் கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-மெடிக்கல், நர்சிங் போன்ற படிப்புகளை படித்து அந்தந்த துறையில் வேலை பார்க்கிறார்கள்.

இங்கு நான் அவர்களை 18 வயது வரை பார்த்துக் கொள்கிறேன். அதற்கு பின் அவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர் பாதுகாப்பில் ஒப்படைத்து விடுவேன்.அதன் பிறகும் அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தும் நான் பார்த்துக் கொள்கிறேன். யாரும் இல்லாதவர்களுக்கு ஒரு நல்ல வேலை அமைத்து திருமணமும் செய்து வைக்கிறேன். இதுவரை என் ஆறு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறேன். அவர்களுக்கு குழந்தைப்பேறு ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு வராமல் தடுக்க சிகிச்சைகள் இப்போது உள்ளன. அப்படி பிறந்த என் பேரக்குழந்தைகள் தொற்று இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

திருமணமாகி சென்றாலும் இது அவர்களின் தாய்வீடு என்பதால் சீமந்தம் முதல் குழந்தைக்கு பெயர் சூட்டுதல் என அனைத்தும் இங்கு கொண்டாடுவோம். சமூகத்திற்கு நான் சொல்வது ஒன்றுதான். எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒதுக்காதீர்கள். அவர்களும் நம்மை போன்றவர்களே. அவர்களிடம் பழகுவதால் அந்த நோய் நமக்கு ஒட்டிக் கொள்ளாது. இந்தியா எனது தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள். இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்கிறார் அன்புள்ள ‘அப்பா’வான சாலமன் ராஜ்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்