Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நான் ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கை விரல்களிலும் பாதங்களிலும் தோல் உரிகிறது. அரிக்கிறது. தண்ணீர் பட்டால் எரிச்சல் ஏற்படுகிறது. வேதிப் பொருட்களால் வரும் அலர்ஜியாக இருக்கலாம் என நினைத்துப் பல வைத்தியங்களைச் செய்து பார்த்தேன். எதுவுமே பலன் இல்லை. சமீபத்தில் ஒரு டாக்டரிடம் காண்பித்தபோது, ‘ஜிங்க் சத்துக் குறைபாடு காரணமாக இது வருகிறது’ என்று சொன்னார். ஜிங்க் சத்து என்பது என்ன? குறைபாடு ஏன் வருகிறது? இதற்கு என்ன தீர்வு?

- ஆர். குமாரலிங்கம், ஈரோடு.

நமக்குத் தேவைப்படுகிற பலதரப்பட்ட தாதுச் சத்துகளில் துத்தநாகம் (Zinc) முக்கியமானது. நம் உடல் வளர்ச்சி, மூளை நரம்பு மண்டல வளர்ச்சியை நிர்ணயம் செய்வதில் மற்ற சத்துப்பொருட்களுடன் துத்தநாகத்தின் பங்கு அதிகமுண்டு. இதனால் ‘அறிவுசார்ந்த தாதுச்சத்து’ (Intelligent mineral) என்று இதை அழைப்பதுண்டு.சருமம் இயல்பாக வளர்வதற்கு துத்த நாகம் தேவை. உடலில் காயங்கள், புண்கள் ஏற்படும்போது அவற்றைக் குணப்படுத்த உதவுவதும் துத்தநாகமே. நாக்கில் சுவையை உணர்த்தும் சுவை மொட்டுக்களின் பணிக்கும் சுவை நரம்புகளின் பணிக்கும் இந்தத் தாது தேவை.

உமிழ்நீரில் உள்ள ‘கஸ்டென்’ (Gusten) எனும் புரதம் உற்பத்தியாவதற்கு இது உதவுகிறது. இந்த கஸ்டென் புரதம் சுவையை உணர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, உணவின் சுவையை அறிய வேண்டுமானால் துத்தநாகம் சரியான அளவில் இருக்க வேண்டும். இதுபோல் உணவின் வாசனையை உணர்வதற்கும் இது துணைபுரிகிறது.

தலைமுடி, நகங்களின் வளர்ச்சிக்கு துத்தநாகம் தேவைப் படுகிறது. தலைமுடி உதிராமலும், நகங்கள் உடைந்துவிடாமலும் பாதுகாப்பது துத்தநாகம் செய்யும் முக்கியப் பணிகளில் ஒன்று. இன்சுலின் ஹார்மோன், கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் சுரக்கப்படுவதற்கும் சேமித்து வைக்கப்படுவதற்கும் இது தேவைப்படுகிறது.இத்தனைக்கும் மேலாக துத்தநாகம் செய்யும் மிக முக்கியமான பணி எதுவென்றால், மனித இனவிருத்திக்கு உதவுவதுதான். இது ஆண்களுக்கு விந்தணுக் களைச் சுரக்கின்ற விரைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. துத்தநாகம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே விந்தணுக்களின் எண்ணிக்கையும் சரியாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் தந்தையாக முடியும்.

எவ்வளவு தேவை? எந்த உணவு தேவை?

நமக்குத் தினமும் 10 மில்லி கிராமிலிருந்து அதிகபட்சமாக 20 மில்லி கிராம்வரை துத்தநாகம் தேவை. நாம் உண்ணும் பல்வேறு தானியங்களிலும், காய்கறிகளிலும், கடல் உணவிலும் இது உள்ளது. அரிசி, கம்பு, கோதுமை, சோளம், மக்காச்சோளம், முந்திரிப் பருப்பு, வாதாம்பருப்பு, தேங்காய், எண்ணெய் வித்துகள், பால், முட்டை, பாலாடைக் கட்டி, கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மீன், நண்டு, ஈரல் பச்சிலைக் காய்களில் நம் தேவைக்கு இது உள்ளது.

இன்னும் குறிப்பாகக் கூறினால், பசலைக் கீரை, வெங்காயம், சோயாபீன்ஸ், அவரை, துவரை, கொத்தமல்லி, வேர்க்கடலை, கொத்துக்கடலை, பூசணி, காளான் போன்ற வற்றில் இது மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்று மாற்றி ஒன்றைத் தினசரி உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டால், இது நம் தேவைக்குக் கிடைத்துவிடும்.

குறைந்தால் என்ன செய்யும்?

துத்தநாகம் குறையும்போது சருமம் வறட்சி அடையும். அடிக்கடி சருமத்தில் புண்கள் உண்டாகும். சருமத்தின் கருப்பு நிறம் அடர்த்தியாகும். சருமம் அரிக்கும். பாதங் களில் வெடிப்பு ஏற்படும். உடலில் புண்கள் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் தாமதமாகும்.தலைமுடி அடர்த்தியின்றி வளரும். தலைமுடி உதிரும். இளமையிலேயே வழுக்கை ஏற்படும். பசி குறையும். நாக்கில் உணவின் சுவை தெரியாது. வாசனையை உணர முடியாது. இவர்களுக்கு ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதாலும், ஹீமோகுளோபின் உற்பத்தி குறைவதாலும் ரத்தசோகை ஏற்படுகிறது. அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். செரிமானம் குறையும்.

குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்பட்டவர்களுக்கு உடல் வளர்ச்சியும் உயர வளர்ச்சியும் நின்று போகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலம் இந்தத் தாது பற்றாக்குறையாக இருக்கும் குழந்தைகளுக்குப் புத்திசாலித் தனம் குறைந்துவிடும். படிப்பதில் ஆர்வம் குறைந்துவிடும். நினைவாற்றல் குறையும்.ஆண்களுக்கு இது குறைந்தால், விந்தணுக்கள் உற்பத்தியாவது குறையும். ஆண்மை இழப்பு ஏற்படும். ஆகவே, திருமணத்துக்குப் பிறகு இவர்கள் தந்தை ஆவதில் பிரச்சினை ஏற்படும். இந்தத் தாது குறைவாக உள்ள பெண்கள் கர்ப்பமானால், பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க அதிக சாத்தியம் உண்டு.

இந்தத் தாது மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கு ‘டி’ நிண அணுக்கள் எண்ணிக்கையில் குறைந்து போவதால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படலாம். மனச்சோர்வு உண்டாகலாம். முதியவர்களுக்கு இந்தத் தாது குறைந்தால் ‘அல்சீமர் நோய்’ வருவதற்கு வாய்ப்புண்டு.

எனக்கு வயது 57. வலது கால் முட்டிக்கு மேல் வீக்கம் உள்ளது. நீட்டவும் மடக்கவும் முடியவில்லை. நீர்கோத்து வலிக்கிறது. நீரை ஊசியின் மூலம் எடுத்துவிட்டால், மறுபடியும் நீர்கோக்குமா? என்ன செய்தால் நோய் தீரும்?

- கே.சி.சிதம்பரநாதன், திருநெல்வேலி.

மூட்டு வலி வருவதற்குப் பொதுவான காரணங்கள்: உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவது, தெரிந்தோ, தெரியாமலோ அடிபடுவது, தொற்றுநோய்க் கிருமிகளால், வைரஸ் கிருமி தாக்குவது, நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துகள் குறைவால், அதிக குளிர்ச்சியால், இதயக் கோளாறு, அதிக கொழுப்பு, அதிக ரத்தக் கொதிப்பு, தீவிரச் சர்க்கரை நோய் பாதிப்பு, பரம்பரையாகவும், வயது முதிர்வு, தீராத மலக்கட்டு போன்றவற்றால் எலும்பு மூட்டு தேய்தல், வலி, வீக்கம், நீர்கோத்தல் போன்றவை ஏற்படலாம்.

மூட்டு வலிகளை வீக்கத்துடன்கூடிய மூட்டு வலிகள், வீக்கம் இல்லாத மூட்டு வலிகள், இணைப்புத் தசை மூட்டு வலிகள் என இதை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

வீக்கத்துடன் கூடிய மூட்டு வலிகளுக்கு உதாரணம் ருமாட்டிக் ஆர்த்ரட்டிஸ், ருமட்டாய்டு ஆர்த்ரடிஸ், சைனோவைட்டிஸ், ஆன்கியோலைசிங் ஸ்பான்டைலைடிஸ், கௌட் போன்ற வற்றைக் கூறலாம்.

இணைப்புத் தசை தாபித மூட்டு வலிகளுக்கு லூபஸ் ஸ்கிளிரோசிஸ் (நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவை) காரணமாகக் கூறலாம்.உங்களுக்கு ஏற்பட்டிருப்பது வீக்கத்துடன் கூடிய சைனோவைட்டிஸ் மூட்டு வலி. இதில் நீர்கோத்து வீங்கி வேதனையை உண்டு பண்ணும். இதற்குத் திரிகடுகு சூரணம், அமுக்கரா சூரணம், நிலவேம்பு குடிநீர் சூரணம், ரசம், கந்தகம், காக்தம், இரும்பு, இந்துப்பு, வெங்காரம் சேர்ந்த உலோக, உபரச பாடாண வகை மருந்துகள், எண்ணற்ற பேடண்ட் வகை மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. உள் மருந்து, வெளிப்பூச்சு மருந்து, ஒத்தடம், பற்று போன்ற சிகிச்சைகள் மூலம் இந்நோயைத் தீர்க்கமுடியும்.