Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

என் கணவர் எப்போதுமே மிக அதிகமாகக் கோபப்படுகிறார். கோபத்தில் ரிமோட் கண்ட்ரோல், பாத்திரங்கள், செல்போன் போன்றவற்றை தூக்கிப் போட்டு உடைத்துவிடுகிறார். சிறிய விஷயங்களில் கூட அவருக்கு பதற்றம் அதிகரிக்கிறது. சாலையில் வண்டி ஓட்டும்போது எப்போதும் சக வாகன ஓட்டிகளைத் திட்டிக்கொண்டே ஓட்டுகிறார். ஹோட்டலுக்குப் போனால் சர்வரிடம் எரிந்துவிழுகிறார். சில நேரம் அவருடைய கோபத்தை அவராலேயே கட்டுப்படுத்த முடிவதில்லை. எனக்குக் கவலையாக இருக்கிறது. இதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?

- கே.எஸ்.உஷாராணி, பெங்களூர்.

உங்கள் கணவரின் கோபத்துக்கு காரணம் அவருக்கு ஏற்படும் மன அழுத்தம்தான். இதனை ஆங்கிலத்தில் Stress என்பார்கள். இது ஏற்பட ஒருவருடைய சூழல், ஆளுமை, பிரச்சினைகளைப் பற்றிய அவருடைய கண்ணோட்டம், குடி, சிகரெட் போன்ற பழக்கங்கள் மற்றும் அவருடைய மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வாழ்க்கைமுறை எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

கோபம் ஏற்படுவது, வெளிப்படுத்தும் விதம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கும் மேற்கண்டவையே காரணங்களாக அமைகின்றன. கோபம் என்பது இயல்பான உணர்ச்சிதான் என்றாலும் காரணமே இல்லாமல் கோபப்படுவது, அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவது, கோபத்தைக் கடும் வன்முறையில் வெளிப்படுத்துவது போன்றவை இயல்புக்கு மாறானவை.

அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவதற்கு ஒருவருடைய ஆளுமைக் கோளாறுகூட (personality disorder) காரணமாக இருக்கலாம். இவ்வகை நபர்கள்தான் பல வருடங்களாக எப்பொழுதும் சின்ன விஷயங்களுக்குக்கூட மிகையாகக் கோபப்பட்டு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பார்கள்.

இயல்பாக அமைதியாக இருப்பவர்களுக்குக்கூடப் புறச்சூழல் மற்றும் பணியழுத்தம் போன்ற காரணங்களாலும் அதீதக் கோபம் ஏற்படக் கூடும். திடீரென்று ஒருவர் காரணமில்லாமல் கோபப்பட ஆரம்பிப்பது மனச்சோர்வு மனப்பதற்றம், மன எழுச்சி (Mania) போன்ற மனநோய்களாலோ அல்லது மூளையில் ஏற்படும் பாதிப்புகளாலோ இருக்கக் கூடும். குடி போன்ற போதைப் பழக்கமும் அதீத கோபத்தை ஏற்படுத்தக் கூடியவை.

ஆளுமைக் கோளாறு இருப்பவர்கள் சைக்கோதெரபி போன்ற உளவியல் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறை மாற்றங்கள், யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவையும் பயன் தரும். மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள், உளவியல் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

என் வயது 30. நான்கு வருடங்களாக மலச்சிக்கல் பிரச்சினை உள்ளது. ஆனால் மிக அதிக அளவில் பசி எடுக்கிறது. சாப்பிட சிறிது தாமதமானாலும் தலைவலி, அதிக வாயுத் தொல்லை, வயிற்றில் ஏதாவது சப்தம் ஏற்படுகிறது. மலச்சிக்கலும் வாயுத்தொல்லையும் குணமாக வழி கூறுங்கள்.

- சி.சஞ்சீவி, தாராபுரம்.

மலச்சிக்கலைத் தவிர்க்க கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான். சரியான உணவுமுறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும், மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும். அடுத்து, சாப்பிடும் உணவில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு தானிய உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இது தவிர வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரை போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பால் சார்ந்த பொருட்கள், காபி, தேநீர், மென்பானங்கள் போன்றவற்றைக் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளுக்கு ‘தடா’ போட வேண்டும். இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.

இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. மலம் கழிப்பதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதேநேரத்தில் மலம் வெளியேறிவிடும். உங்களைப் பொறுத்த அளவில் மலச்சிக்கலை சரி செய்தாலே வாயுப் பிரச்சினையும் சரியாகிவிடும்.

எனக்கு வயது 60. தினமும் காலையில் எழுந்ததும் 10 முறை தும்மல் வருகிறது. பெரும்பாலும் அடுக்குத் தும்மல்களாக வருகின்றன. சில மிகவும் பெரிதாக உள்ளன. இதற்கு எளிய முறையில் தீர்வு கிடையாதா?

- வீ.ராம் சந்தோஷ், ஒரத்தநாடு.

வீட்டுத் தூசுதான் தும்மலுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, காகிதம், சிமென்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி, மரம், மாவு, தானியம் போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் தும்மல் தொடங்கிவிடும். இதுபோல் ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, புகையிலைப் புகை, தொழிற்சாலைப் புகை முதலியவையும் மூக்கில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, தும்மலை வரவேற்கும்.

குளிர்ந்த காற்று அல்லது பனி, தும்மலைத் தூண்டும். புல், பூண்டு, மரம், செடிகளின் பூக்களிலிருந்து வரும் மகரந்தம், பார்த்தீனியச் செடியின் முள்ளிழைகள், பூஞ்சைக் காளான்கள் முதலியவையும் தும்மல் நோய்க்கு வழிவிடும்.

படுக்கை விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில் ‘மைட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்ற கண்ணுக்குத் தெரியாத வீட்டுத் தூசுப் பூச்சிகள் குடியிருக்கும். இதனாலும் தும்மல் வரும். உணவு ஒவ்வாமை இருந்தாலும் தும்மல் ஏற்பட வழி இருக்கிறது. மூக்கிலும் சைனஸ்களிலும் நோய்த்தொற்று காணப்பட்டாலும் இந்த நிலைமை உருவாகும்.

உங்களுக்கு எந்தக் காரணத்தால் தும்மல் வருகிறது என்பதை ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன், ‘ஒவ்வாமைத் தோல் பரிசோதனை’ போன்றவற்றின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறியப்பட்ட ஒவ்வாமைப் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றில் தவிர்க்க முடிந்தவற்றைத் தவிர்த்துவிட்டு, மற்றவற்றுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதற்கு ‘இம்யூனோதெரபி’ என்று பெயர்.இந்த நோய்க்கு உடனடி நிவாரணம் பெற விரும்பினால், ‘ஸ்டீராய்டு மருந்து’ கலந்த தெளிப்பானை மூக்கில் போட்டுக்கொண்டால், தும்மல் நின்றுவிடும். இதனுடன் ஒவ்வாமைத் தடுப்பு மாத்திரையையும் பயன்படுத்தலாம்.