Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனது அக்கா மகனுக்கு வயது பதினாறு. அவன் பள்ளியிலிருந்து அடிக்கடி வலிப்பு வருகிறது என்று வீட்டுக்கு வருகிறான். வீட்டிலும் வலிப்பு வந்திருக்கிறது. வாயில் நுரையுடன் கை, கால் இழுத்துக்கொள்ளும். வலிப்பு ஏன் வருகிறது? இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாதா?

- சி.எஸ்.நாச்சியார் அமுது, உடுமலை.

வலிப்பு நோயில் பல வகை உண்டு. அதற்கான காரணங்களும் பலவிதம். இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளையில் வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித்தொற்று, மூளையில் புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கான முக்கியக் காரணங்கள்.

சிலருக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வருகிறது. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே. ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவது, சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களாலும் வலிப்பு வரலாம். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக வலிப்பு வருவதுண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். ஒருமுறை வலிப்பு வந்தவருக்கு மீண்டும் மீண்டும் வலிப்புவருவதற்கு அதிக சாத்தியம் உண்டு.

வலிப்பின் வகைகள்

மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial seizure). நாம் அவ்வப்போது காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு ‘முழுவீச்சு வலிப்பு’Generalized seizure) என்று பெயர்.உங்கள் சகோதரி மகனுக்கு இந்த வகை வலிப்பு உள்ளதாகத் தெரிகிறது. இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்ப சிகிச்சைமுறை மாறுவது மருத்துவ நியதி.

என்ன செய்ய வேண்டும்?

அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள்.சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.

மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால், அதை அகற்றிவிடுங்கள்.வாயில் உமிழ்நீர் வழிந்தால் துடைத்து விடுங்கள்.

வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் ஆபத்து அதிகம். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சையைப் பெற அவருக்கு உதவுங்கள். பின்னர் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள்.

என்ன பரிசோதனை?

வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளுடன், மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் இ.இ.ஜி., ‘வீடியோ இ.இ.ஜி.’, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் (PET) ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் முதலியவற்றை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிகிச்சை என்ன?

அவர் முறையாகப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளாரா, காரணம் தெரிந்து சரியான சிகிச்சை பெறுகிறாரா என்பதைக் கவனியுங்கள்.இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.

2 முதல் 3 சதவீத நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் ‘மைக்ரோ அறுவைசிகிச்சை’ தற்போது உள்ளது. இந்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும். ஆனால், இந்த அறுவைசிகிச்சை வலிப்பு நோயாளிக்குத் தேவையா இல்லையா என்பதை மூளை நரம்பியல் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

என் வயது 35. கடந்த மூன்று வருடங்களாக மலச்சிக்கல் பிரச்சினை உள்ளது. ஆனால் மிக அதிக அளவில் பசி எடுக்கிறது. சாப்பிட சிறிது தாமதமானாலும் தலைவலி, அதிக வாயுத் தொல்லை, வயிற்றில் ஏதாவது சப்தம் ஏற்படுகிறது. மலச்சிக்கலும் வாயுத்தொல்லையும் குணமாக வழி கூறுங்கள்.

- சரவண பூபதி, கோவில்பட்டி.

மலச்சிக்கலைத் தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான். சரியான உணவுமுறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும், மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.

அடுத்து, சாப்பிடும் உணவில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு தானிய உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.இது தவிர வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரை போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களிலும் நார்ச்சத்து அதிகம்.

இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பால் சார்ந்த பொருட்கள், காபி, தேநீர், மென்பானங்கள் போன்றவற்றைக் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.

இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளுக்கு ‘தடா’ போட வேண்டும். இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. மலம் கழிப்பதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதேநேரத்தில் மலம் வெளியேறிவிடும். உங்களைப் பொறுத்த அளவில் மலச்சிக்கலை சரி செய்தாலே வாயுப் பிரச்னையும் சரியாகிவிடும்.