Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

கல்லூரிப் பருவத்தில் எனக்கு அடர்த்தியாக முடி இருந்தது. இப்போது எனக்கு 28 வயதாகிறது. ஆனால், தலையில் முடி கொட்டி வழுக்கைத் தலையாக மாறிவிட்டது. முடி இல்லை என்கிற காரணத்தால் எனக்குத் திருமணமாவதில் தடை ஏற்படுகிறது. இது எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலையில் முடி வளருமா? அதற்கு என்ன மருந்துகள் இருக்கின்றன? நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்!

- ஜி.லூர்து இமானுவேல், கோவை.

பொதுவாக, ஒருவருக்கு வழுக்கை விழுவதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பதுதான் அலோபதி மருத்துவத்தில் வழக்கம்.

வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்… இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சி நியதியின்படி வயதாக ஆக, செல்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால் புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.

வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை மாற்ற முடியாது.கடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும். அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.

சில சிகிச்சைகள்

தலைமுடியில் வேர்க்கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கையைத் தடுக்கலாம்.வழுக்கை தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டுவந்தால் மேன்மேலும் முடி கொட்டாது. ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடிகொட்ட ஆரம்பித்து விடும். எனவே, இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவ ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவிவர வேண்டும்.

அறுவை சிகிச்சை

பெரும்பாலும் பின்னந்தலையில் வழுக்கை விழாது. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சந்தலை வரைக்கும் வழுக்கை விழும். இப்படியானவர்களுக்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) மேற்கொள்ளப்படுகிறது.இது ஒரு அறுவைசிகிச்சைமுறை. நாற்றங்காலிலிருந்து நாற்றைப் பிடுங்கி விளைநிலத்தில் நடுவதைப்போல் சிகிச்சைக்கு வரும் நபரின் பின்னந்தலையிலிருந்து வேருடனும் மேல்தோலுடனும் முடிகளை அகற்றி முன்தலையில் - வழுக்கை உள்ள இடத்தில் - வைத்துத் தைத்து விடுவார்கள். இவ்வாறு இடம் மாற்றப்பட்ட முடி சில தினங்களில் உதிர்ந்துவிடும். பிறகு, சில மாதங்களில் புதிய முடி அங்கு முளைக்கும்.

தலையில் முடி இல்லாமல் இருப்பவர்களுக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி வைத்திருப்பவர்களுக்கும் முடிமாற்று சிகிச்சையை மேற்கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது ‘பி.ஆர்.பி.’ (PRP - Platelet Rich Plasma) சிகிச்சைமுறை.காய்ச்சல் வந்தவருக்கு ஊசி போடுவதைப் போல எளிய முறையில் இது செய்யப்படுகிறது. பயனாளியின் ரத்தத்தில் உள்ள ‘பிளாஸ்மா’ எனும் நிறமற்ற திரவத்திலிருந்து தட்டணுக்களை மட்டும் (Platelets) பிரித்தெடுத்து, அவற்றின் அடர்த்தியை அதிகப்படுத்தித் தோலில் செலுத்தும்போது முடி வளர உதவுகிற பல காரணிகளை அவை ஊக்குவிக்கின்றன என்பதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படைத் தத்துவம்.

உங்களுக்கு என்ன காரணத்தால் வழுக்கை விழுந்திருக்கிறது, எந்த மாதிரி வழுக்கை விழுந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை வழங்க வேண்டும். ஆகவே, தகுதி வாய்ந்த சரும நோய் நிபுணரையோ, தலைமுடி மாற்றுச் சிகிச்சை நிபுணரையோ நேரில் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அதேநேரம் குறைந்த செலவில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், மக்களின் நம்பகத்தன்மையைப் பெறாத மருத்துவரிடம் முன்னெச்சரி்க்கை அவசியம்.

எனக்கு 25 வயது. பல வருடங்களாகவே சொத்தைப்பல் பிரச்னை உள்ளது. இதுவரை எந்த சிகிச்சையையும் நான் எடுக்கவில்லை. இதன் விளைவாக பின்கடைவாயின் இருபுறமும், மேல் கீழாக 4 பற்கள் சொத்தையாகிவிட்டன, ஈறுகளில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை உளவியல் ரீதியாகவும் என்னை பாதித்துள்ளது. வலது மார்பில் அவ்வப்போது வலி தோன்றி மறைகிறது. ‘பற்சொத்தையில் பாக்டீரியா இருக்கும், இவை ரத்த நாளங்கள் வழியாகச் சென்று இதய வால்வுகளைத் தாக்கக்கூடும்’ என்று ஒரு கட்டுரையில் படித்தேன். இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன். இந்த அறிகுறி மேற்சொன்னதன் வெளிப்பாடுதானா? என்னைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். கூடவே மீதமுள்ள பற்கள், ஈறுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளையும் காட்டுங்கள்.

- பி.கே.எஸ்.பக்தவச்சலம், திருச்சி.

பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்டு, ஐஸ்கிரீம், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள், பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியா இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியா வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைப்பிடிப்பது, வெற்றிலைப் பாக்குப் போடுவது போன்றவற்றால் பற்களில் கரை படியும். இதில் பாக்டீரியா குஷியாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழும்.சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி தெரியும். அங்கு குழி விழும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

பல் இடைவெளிகளில் உணவுத் துகள்கள் தங்கினாலும், குச்சி, குண்டூசி போன்றவற்றால் பல் குத்தினாலும், கிருமித் தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கி வலிக்கும். பல் துலக்கும்போது இந்த ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். வாய் நாற்றம் ஏற்படும். பல் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ‘பயோரியா’ என்று இதற்குப் பெயர்.இவற்றுக்கெல்லாம் இப்போது நவீன சிகிச்சைகள் வந்துள்ளன. பல் மருத்துவரை நேரில் அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.

பற்களிலிருந்து பாக்டீரியா இதயத்துக்குப் பரவினால், இதய வால்வில் பிரச்னை வரும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நிலைமை உங்களுக்கு ஏற்படவில்லை. அதனால் வீணான பயமும் தேவையில்லாத உளவியல் சிந்தனைகளும் வேண்டாம்.உங்கள் மார்பில் வரும் வலி மாரடைப்புக்கான அறிகுறி இல்லை. எனவே, மாரடைப்பு குறித்த பயமும் தேவையில்லை. ஒரு பொது மருத்துவரைச் சந்தித்து இந்த வலிக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.