Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நிறைமாத கர்ப்பிணியான எனக்கு இது முதல் பிரசவம். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்... அவற்றை இப்போதே சாப்பிடத் தொடங்க வேண்டுமா... குழந்தை பிறந்த பிறகு சாப்பிட்டால் போதுமா?

- வேலுப்ரியா, நாமக்கல்.

கர்ப்ப காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெற முடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், உணவில் அதிக அளவு இஞ்சி சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். ஓட்ஸ் கஞ்சி, காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிடவேண்டியது அவசியம். ஒவ்வோர் இரண்டு, மூன்று மணி நேர இடைவெளிக்கும் நடுவே உணவு உட்கொள்ளலாம்.

இனிப்பு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது, பால் அருந்துவது நல்லது. சுறா வகை மீன்களைச் சாப்பிடுவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவும். தண்ணீர் தினசரி நான்கு லிட்டர் பருகலாம். புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் நிறைந்த உணவுகள் தாய்ப்பால் சுரப்புக்கு மிகவும் நல்லது. முட்டை, பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் வாய்வுத் தொந்தரவு ஏற்படும்’ என்கிறார்களே... அது உண்மையா?

-கு.வை.பழனிச்சாமி, திண்டுக்கல்.

இவை இரண்டும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் முக்கியமான உணவுகள். அதற்காக இதை ஒரு காரணமாகச் சொல்லி இவற்றைத் தவிர்க்கவேண்டியதில்லை. கீழ்க்காணும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது. வாய்வுத் தொல்லை இருப்பவர்கள், வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் இவற்றைச் சாப்பிடலாம். பெரும்பாலும், வறுத்த கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

சமைக்கும்போதே பூண்டு, பெருங்காயம் சேர்த்துக்கொண்டால், இந்தப் பிரச்னையை 80 சதவிகிதம் தடுத்துவிடலாம். சாப்பிட்டதும் சுடுநீரில் சீரகம் அல்லது சோம்பு சேர்த்துக் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது. இரவு நேரத்தில் செரிமானக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் வாழைக்காய், உருளைக்கிழங்கைச் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனையின்போதும், பற்களுக்கான எக்ஸ்-ரே பரிசோதனையின்போதும் ‘தைராய்டு கார்டை’ (Thyroid Guard) கேட்டுப் பெற்று அணிய வேண்டும்’ என்கிறாள் வெளிநாட்டில் வசிக்கிற என் தோழி. `தைராய்டு கார்டு அணிந்தால், கதிர்வீச்சு அபாயத்திலிருந்து காத்துக்கொள்ளலாம்’ என்கிறாள். `தைராய்டு கார்டு’ என்றால் என்ன, அதன் அவசியம் என்ன?

- சுகச்செல்வி, அரும்பாக்கம்.

`தைராய்டு கார்டு’ (Thyroid Guard) என்பது, கழுத்தில் அணியப்படும் ஒருவகைக் கவசம். ஈயம் மூலம் உருவாக்கப்படும் இதை `லெட் காலர் புரொடெக்‌ஷன்’ (Lead Collar Protection), `தைராய்டு ஷீல்டு’ (Thyroid Shield) என்றும் குறிப்பிடலாம். கதிர்வீச்சுப் பரிசோதனைகளின்போது உடலுக்குள் ஊடுருவும் கதிர்வீச்சுகள், உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இதை அணிந்துகொள்ளப் பரிந்துரைக்கப்படும். ஆனால், இதை அணிவதால் ஏற்படும் நன்மைகள் மிகக் குறைவே. இன்றைய சூழலில் தேவையில்லாத பயம் காரணமாக மட்டுமே இதை அணிந்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

மேமோகிராம் மற்றும் பற்களுக்கான எக்ஸ்-ரே எடுக்கும்போது வெளிப்படும் கதிர்வீச்சுகளுக்கும், புற்றுநோய் பாதிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொண்டால் ஹார்மோன் குறைபாடுகள், ஹார்மோன் மாற்றங்கள், புற்றுநோய் பாதிப்பு என எதுவும் ஏற்படாது. தைராய்டு கார்டை அணியும்போது, உடலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பகுதிக்கு, போதிய அளவு கதிர்வீச்சு கிடைக்காமல் போகும்.

இதனால் பரிசோதனையின் முடிவில், அதன் துல்லியத் தன்மையில் சிக்கல் உண்டாகலாம். எனவே, மீண்டுமொருமுறை பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும். ஆக, தைராய்டு கார்டு அணியாதவர்களைவிட, கார்டு அணிந்தவர்களுக்குக் கூடுதலாக இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகலாம். இதுபோன்ற சூழல் ஏற்படாமலிருக்க, `தைராய்டு கார்டு’ அணிவதைத் தவிர்ப்பதே நல்லது.

என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. அவளுக்கு அடிக்கடி அம்மைநோய் வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?

- தேவேந்திரவேலன், ஆரணி.

சாதாரணமாக நோய்த்தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் மூலம் ஏற்படுகிறது. வைரஸ் கிருமிகள் மூலமாகப் பரவும் நோய்கள் சிலவற்றால் சருமத்தில் சிவந்த தடிப்பு, கொப்பளம் ஏற்படலாம் அல்லது சருமம் சிவப்பு நிறத்தில் மாறலாம். பொதுவாக அம்மை வெயில் காலத்தில்தான் அதிகம் பரவும். வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் கொப்பளங்கள், வேனல் கட்டிகள் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அம்மைநோய்க்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மறுபடியும் அம்மை நோய் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக வெயில் காலத்தில் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் கொப்பளங்கள் வந்தாலே அது அம்மை என முடிவெடுத்துவிடக் கூடாது. சருமப் பிரச்னையின் காரணமாகவும் சிவந்த திட்டுகளும், முகத்தில் கொப்பளங்களும் வரக்கூடும். மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் போதும். அம்மை என்று நினைத்து நீங்களாக சிகிச்சையில் இறங்க வேண்டாம்.

என் மனைவிக்கு 40 வயது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அரசு ஊழியர். அவள் தினமும் இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறாள். கேட்டால், தூக்கம் வரவில்லை என்கிறாள். இதற்குக் காரணம் என்ன?

- ராஜநாராயணன், தேன்கனிக்கோட்டை.

மன அழுத்தத்தால், இப்படியான தூக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். நல்ல உறக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதால், இந்தப் பிரச்னையை தட்டிக் கழிக்க வேண்டாம். தூக்கத்துக்கான வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றச் சொல்லுங்கள். உதாரணமாக தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். தூக்கத்துக்கான நேரத்தை நெறிப்படுத்த வேண்டும். டீ, காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடவேண்டியது அவசியம். இரவு உணவை, படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே முடித்துக்கொள்ளவும். படுக்கையில் மொபைல், லேப்டாப், மூக்குக்கண்ணாடி போன்றவை இல்லாமலிருப்பது நல்லது. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களை தூரமாக வைத்துவிடவும்.

தூங்கும்போது, ஒருபக்கமாகச் சாய்ந்து படுக்காமல், முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி மல்லாக்கப் படுப்பது நல்லது. 40 வயது பெண் என்பதால், அவர் தற்போது மெனோபாஸ் காலத்தில் இருக்கக்கூடும். மெனோபாஸ் காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். முக்கியமாக, இந்தக் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்புகள் குறையத் தொடங்கும்.

உடலுக்குத் தூக்கத்தை கொடுக்கும் அடிப்படை ஹார்மோன்களான இவை குறைவதால்கூட தூக்கமின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.