நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா
என் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவன் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவன் நண்பர்களோடு பழக தயங்குகிறான். சிலர் இவனை கிண்டலும் செய்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர வழி சொல்லுங்கள்.
- அம்மையப்பன், திருநெல்வேலி.
நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள் நிறைந்துள்ளன. ஆண், பெண் இருவருக்கும் பருவ வயதில் (13 முதல் 19 வயதுக்குள்) அதிகம் காணப்படுகிறது. எக்கிரைன் சுரப்பி (Eccrine Glands), அபோகிரைன் சுரப்பி (Apocrine Glands) என இரண்டு வகை சுரப்பிகள் நம் உடலில் அதிவியர்வையை உண்டாக்குகின்றன.
உடலில் தோன்றும் வியர்வை துர்நாற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன:
துரித உணவு வகைகளை அதிகம் உண்பது, உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது. மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் - வெளிப்புற ஆடைகளை அணிவது, நெய், எண்ணெய் வகை தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிடுவது, உடல் பருமன், நாள்பட்ட நோய் நிலைகள், குறிப்பாக நீரிழிவு நோய், தோல் நோய்கள், வெள்ளைப்படுதல் (Lencorrhoea), அக்குள், பிறப்புறுப்புப் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது, இந்த இடங்களில் ரோமங்களை அகற்றாமல் வைத்திருப்பது, அசைவ உணவை அதிகம் உண்பது, உணவுப் பாதையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது, தினசரி மலம் கழிக்காமல் இருப்பது, பல்வேறு ரசாயன வாசனை கிரீம், தைலங்களைப் பயன்படுத்துவது, தலைப் பொடுகு, ஒரு சில மருந்துகளின் பக்க விளைவு, பாக்டீரியா நோய்க் கிருமிகளின் தாக்கம், காற்றோட்டம் இல்லாத, அசுத்தமான இடங்களில் வசிப்பது, தூங்குவது போன்ற பல்வேறு காரணங்கள் உடலில் வியர்வை துர்நாற்றம் ஏற்பட வழிவகுக்கின்றன.
உடலின் வாத, பித்தம், கபமான முக்குற்றங்களை சமன்படுத்தக்கூடிய உணவை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரிக் காலை, மாலை, மலம் கழிப்பது, வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, வருடத்துக்கு இரண்டு முறை வயிற்றுப் பேதிக்குச் சாப்பிடுவது ஆகியவற்றைச் சிறுவயது முதலே பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தினம் இருமுறை குளித்து, இறுக்கமான உள்ளாடைகளைத் தளர்த்தி, முழு பருத்தி ஆடைகளை பயன்படுத்துங்கள். எண்ணெயில் பொரித்த பலகாரங்களைத் தவிர்ப்பது, அசைவ உணவைக் கட்டுப்படுத்திக்கொள்வது, துரித உணவு, குளிர்பானங்கள், கேக் வகைகள், சாக்லேட் வகைகள், தரைக்கடை உணவு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
திரிபலா சூரண மாத்திரை, அமுக்கரா சூரண மாத்திரை, குங்குமப்பூ மாத்திரை ஆகியவற்றைச் சித்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையோடு வயது, குறைபாடு, நோய் நிலைகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டும். தேய்த்துக் குளிக்கத் திரிபலா சூரணம், கார்போக அரிசி, ரோஜாமொக்கு, கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக் கிழங்கு, ஆவாரம்பூ, கருஞ்சீரகம், கசகசா, சந்தனத் தூள், பாசிப் பயறு, வெந்தயம், எலுமிச்சை தோல், மருதாணி ஆகியவை கலந்த குளியல் பொடியைப் பயன்படுத்தலாம்.
எனக்கு வயது 56. உடல் சோர்வாக உள்ளது என்பதற்காக மீன் எண்ணெய் மாத்திரையைத் தினமும் ஒன்று வீதம் தொடர்ந்து பல வருடங்களாகச் சாப்பிட்டு வருகிறேன். எனக்குச் சிறுநீரகத்தில் கல் உள்ளது. இதை அதிகம் சாப்பிட்டால் கல் பெரிதாகும் என்று என் தோழி கூறுகிறாள். இது உண்மையா? நான் அதைச் சாப்பிடுவது தவறா? விளக்கம் தேவை.
- ஜி.பி.செல்வராஜன், திருப்பூர்.
நீங்கள் மட்டுமல்ல, நாட்டில் பெரியவர், சிறியவர் என வித்தியாசம் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனையின்றி, பலரும் எடுத்துக்கொள்ளும் சத்து மாத்திரைகளில் மீன் எண்ணெய் மாத்திரைதான் முன்னிலையில் உள்ளது. இந்தச் சுயமருத்துவப் பழக்கத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு. இது கடைகளில் எளிதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கிறது என்பது ஒரு காரணம். இதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பது தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்று பொதுபுத்தியில் பதிந்து இருப்பது அடுத்த காரணம்.
நம் உடலுக்குத் தேவையான, அதேவேளையில் இயற்கையாக எளிதில் கிடைக்காத, பல வகைச் சத்துகள் சுறா, திமிங்கலம் போன்ற மிகப் பெரிய மீன் வகைகளில் கிடைக்கின்றன. இந்த மீன்களை நம்மால் சமைத்துச் சாப்பிட முடியாது. அதனால் இவற்றின் கல்லீரலில் இருந்து ஒரு வகை எண்ணெயை எடுத்து, பல கட்டச் சுத்திகரிப்புக்குப் பிறகு, சிறிய உருண்டை வடிவக் குழாய்களில் அடைத்துக் கடைகளில் விற்கிறார்கள். ‘காட் லிவர் ஆயில்’ (Cod liver oil) எனும் பெயரில் கடைகளில் கிடைக்கிற மீன் எண்ணெய் மாத்திரைகள் இவை.
வைட்டமின் ஏ, டி ஆகிய ஊட்டச் சத்துகளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் மேலே சொன்ன மிகப் பெரிய மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் நிறைவாக உள்ளன. ஆனால், டுனா, டிரவுட், சால்மன், காட் போன்ற மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் இவை குறைவாகவே உள்ளன. எனவே, எந்த வகை மீனிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அதில் உள்ள சத்துகளின் அளவு அமையும்.
மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துகள் குழந்தைகளுக்கு வருகிற பார்வைக் குறைபாடு போன்ற கண் நோய்களைக் கட்டுப்படுத்தும். முதியோருக்கு ஏற்படுகிற ‘மேக்குலர் டீஜெனரேஷன்’ (Macular degeneration) எனும் பார்வைக் கோளாறைத் தள்ளிப்போடும். மூட்டு வலியைக் குறைக்கும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைத்து இதய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதையும் ஓரளவு கட்டுப்படுத்தும். சருமப் பாதுகாப்பு கிடைக்கும். உடலில் காயங்கள் சீக்கிரம் ஆறும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்னை உள்ளவர்களுக்கும், அல்சைமர் எனும் மறதி நோய்க்கும் இது பலன் அளிப்பதாக அறியப்பட்டுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். மீன் எண்ணெய் மாத்திரை சத்து மாத்திரைதான் என்றாலும் அதையும் தேவையில்லாமல் சாப்பிடக் கூடாது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மீன் எண்ணெய் மாத்திரைகளைச் சாப்பிட்டால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது என்றொரு தவறான கருத்தும் மக்களிடம் பரப்பப்படுகிறது. இந்த எண்ணமும் களையப்பட வேண்டும்.
ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்துத்தான் இந்த மாத்திரையைச் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதைக் கூற முடியும். எனவே, இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கும் முன்பு குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.
பொதுவாக, சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்கள், குழந்தைகள், நீரிழிவு உள்ளவர்கள், இதய நோய்க்கு ஏற்கெனவே மருந்து எடுத்துக்கொண்டு வருபவர்கள் ஆகியோர் அவசியம் மருத்துவரின் பரிந்துரைப்படிதான் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன் உணவுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த மாத்திரைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.