Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருங்குடல் புற்றுநோய் எச்சரிக்கை!

நன்றி குங்குமம் தோழி

உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், கணையம், மண்ணீரல் மற்றும் பித்தப்பை அடங்கியதுதான் உணவு மண்டலம். இதன் முக்கிய உறுப்பான பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு குறித்து விளக்குகிறார் இரைப்பை, குடல், கல்லீரல், லேசர், லேப்ராஸ்கோப்பி மற்றும் குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கண்ணன்.

மரபுவழிக் குறைபாடு, பரம்பரை மற்றும் பெருங்குடலில் உள்ள நீட்சிகள்தான்(Polyps) புற்றுநோயாக மாறக் காரணம்.

பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், 90% குடலில் கட்டிகள் உருவாகி அவை நாளடைவில் புற்றுநோயாக மாறும். இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். அதிகப்படியான கொழுப்பு. குறைந்த நார்ச்சத்துள்ள உணவை உண்பதாலும் புற்றுநோய் பாதிக்கும். புகைப் பிடிக்கும் பழக்கத்தினாலும் ஏற்படும். குடும்பத்தில் அண்ணன், அப்பாவுக்கு பாதிப்பு இருந்தாலும் பரம்பரை காரணமாகவும் ஏற்படும். ஒருவருக்கு வந்தால் மற்றவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். மரபு வழிக் குறைபாட்டினாலும் ஏற்படும்.

அறிகுறிகள்...

வலப்பக்க பெருங்குடலில் புற்றுநோய் பாதித்தால், ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு ஏற்படும். விளைவு ரத்தசோகை. இடது பக்கம் மற்றும் மலக்குடலில் ஏற்பட்டால் மலச்சிக்கல் உண்டாகும். மலத்தில் ரத்தப்போக்கு இருக்கும். பசியின்மை, உடல் எடை குறைதல் மற்றும் வயிற்று வலியும் இருக்கும்.

பரிசோதனை முறைகள்...

*ரத்தப் பரிசோதனை மூலம் ரத்த சோகையை கண்டறியலாம். CT Scan மூலமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி, மற்ற உறுப்பான குறிப்பாக

கல்லீரலில் பரவியுள்ளதா என்பதை அறியலாம்.

*கொலோனோஸ்கோப்பி மூலம், குடலில் எந்தப் பகுதியில் புற்றுநோய் பரவியுள்ளது என்பதையும், குடலில் உள்ள கட்டியில் இருந்து எடுக்கப்படும்

திசுவை பரிசோதித்து அதன் வகையினை கண்டறியலாம்.

சிகிச்சை முறைகள்...

*அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வாகும். லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமும் செய்யலாம்.

*கீமோதெரபி, ரேடியோதெரபியும் மிக முக்கியமான சிகிச்சை முறைகளாகும்.

*பெருங்குடல் புற்றுநோயை நான்கு நிலைகளாக பிரிக்கலாம். அதனைப் பொறுத்தே சிகிச்சையை தீர்மானிக்க முடியும். முதல்நிலை என்றால், அறுவை சிகிச்சை மட்டும் போதுமானது.

இரண்டு அல்லது மூன்றாம் நிலை என்றால் அறுவை சிகிச்சைக்கு முன் பிசியோதெரபி, ரேடியோதெரபி கொடுக்கப்பட்டு பின்பு பாதிக்கப்பட்ட குடல் பகுதியினை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, மீண்டும் இணைக்கப்படும். இதனை ஸ்டாப்லர் முறையில் செய்யலாம்.

*நான்காம் நிலை என்பது கடைசிக்கட்ட நிலை. குடல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். கொலோஸ்டமி செய்யப்பட்டு அதன் பிறகு ரேடியோதெரபி, கீமோதெரபி கொடுக்கப்படும். பிறகு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்படும். இதனை Palliative Surgery என்போம். நோயின் நிலையை ஆரம்பக் கட்டத்திலேயே

கண்டறிந்தால் புற்றுநோய் பாதித்த பகுதியை முழுவதுமாக அகற்றி முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

ஏன் ஏற்படுகிறது?

நம் உடம்பில் கோடிக்கணக்கான அணுக்கள் உள்ளன. இதில் மூளையைத் தவிர மற்ற உறுப்புகளில் அணுக்கள் அழிந்து, புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கும். 120 நாட்களுக்கு ஒருமுறை சிவப்பணுக்களும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நுரையீரலும், 14 நாட்களுக்கு ஒருமுறை சருமமும், ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை எலும்புகளும் புதிய உருமாற்றம் பெருகின்றன. ஆனால் சில காரணங்களால் சில அணுக்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படத் தொடங்கும். அதனால் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும். அவை தீங்கு விளைவிக்கும் அணுக்கள். அதனைதான் புற்றுநோய் என்கிறோம்.

புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்...

*நெடுங்காலமாக ஆறாத புண்

*உடலில் எந்தப் பகுதியிலும் தோன்றும் கட்டி

*நாள்பட்ட இருமல், தொண்டையில் ஏற்படும் வறட்சி

*மலம் கழிக்கும் போது ரத்தம் வெளிப்பாடு

*திடீரென பசியின்மை மற்றும் எடைக்குறைவு

*உணவினை விழுங்க சிரமப்படுவது

*உடலில் தோன்றும் வலியற்ற வீக்கம்

*சளி மற்றும் மூக்கில் ரத்தம்

*நாள்பட்ட கடுமையான மலச்சிக்கல்

*உடம்பில் உள்ள மச்சங்களின் அளவில் மாற்றம்.

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆரம்பத்தில் சரியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக மாறிடும்.

தொகுப்பு: நிஷா