Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கியம் தரும் தேங்காய்ப்பால்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக நாம் தினசரி அருந்தும் பாலைவிட தேங்காய்ப் பால் மிகவும் சுவையானது. முற்றிய தேங்காயிலிருந்து பாலை எடுத்து சிறிது ஏல்ககாய், தேவையான வெல்லம் சேர்த்து சாப்பிட சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் அதிகம். தேங்காய்ப் பாலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றை தெரிந்து கொள்வோம்.

பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உள்ள தேங்காய்ப் பாலில் தாய்ப்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் நிறைந்துள்ளது. லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது என்பதால், சிறுகுழந்தைகளுக்கும் தேங்காய்ப்பால் கொடுக்கலாம். மேலும் இதிலுள்ள எலும்பு அழற்சித் தன்மை வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாக்கும்.

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்: தேங்காய் பாலில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது. இதில் வைட்டமின் சி, இ மற்றும் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. குறிப்பாக உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டை சிறப்பாக்கி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் பங்களிக்கிறது.

ஆரோக்கியக் கொழுப்புகள்: தேங்காய் பாலில் அதிகப்படியான ட்ரைகிளிசராய்டுகள் உள்ளது. இது ஒரு வகையான ஆரோக்கியக் கொழுப்பு. எளிதில் ஜீரணிக்கக் கூடிய இந்த வகை கொழுப்பு, நமக்கு ஆற்றலை வழங்கப் பயன்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினசரி தேங்காய் பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

செரிமான ஆரோக்கியம் மேம்படும்: தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை சரி செய்கிறது. இதன் பைபர் உள்ளடக்கம் செரிமானத்திற்கு உதவி மலச்சிக்கல் பிரச்னையைப் போக்குகிறது.

லாக்டோஸ் இல்லை: மாட்டுப் பாலில் காணப்படும் லாக்டோஸ், தேங்காய்ப் பாலில் இல்லை. எனவே லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறந்த மாற்று பாலாக தேங்காய்ப்பால் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஒரு கிரீமி அமைப்பில் இருப்பதால், பல்வேறு விதமான சமையல்களில் தேங்காய் பாலை பயன்படுத்தலாம்.

நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும்: இதில் நிறைந்து காணப்படும் வைட்டமின் சி, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்திக்கு உதவி உடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

எலும்புகள் வலுவாகும்: தேங்காய்ப் பாலில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க அவசியமானது. போதுமான அளவு கால்சியம் உட்கொள்வதால் எலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் வலுவிழப்பு போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும்.

தொகுப்பு: தவநிதி