Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகள் நலம்!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைப் பருவத்தில் 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் என்பது வளர்ச்சியின் மிக முக்கிய காலகட்டமாகும். இந்தப் பருவத்தில் குழந்தை உட்காரவும், தவழவும் தொடங்கும் நேரமாகும். எனவே, மிக கவனமாக குழந்தையை கண்காணிக்கவும் வழி நடத்தவும் வேண்டிய காலகட்டம் இது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

6 மாதம் முதல் குழந்தை மிகவும் கவனமாக கேட்கவும், கவனிக்கவும் தொடங்கும். இந்த தருணத்தில் பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டியது அவசியமாகும். இது குழந்தையின் மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் காலகட்டமாக இருப்பதால், அவர்களுடன் பேசுவது, விளையாடுவது, கதைகள் சொல்வது, பொம்மைகள் உள்ள புத்தகங்களை படித்துக் காட்டுவது போன்றவற்றை செய்ய வேண்டும். இந்த செயல்களே பின்நாளில் குழந்தைகள் அறிவு கூர்மையுடன் விளங்க ஆரம்ப புள்ளியாக இருக்கும்.

வீட்டில் உள்ள பெரியோர்கள் ஒரு நாளில் குழந்தையுடன் ஒருமணி நேரமாவது பேசி விளையாட வேண்டும் என்பதை கடை பிடித்தால் குழந்தையின் வளர்ச்சி சிறப்பாக அமையும். குழந்தைக்கு குடும்ப உறுப்பினர்களுடன் பிணைப்பு ஏற்படும் தருணமும் இதுதான். எனவே, குடும்ப உறுப்பினர்களின் உறவைச் சொல்லி அறிமுகம் செய்வது. அவர்கள், குழந்தையுடன் பேசி விளையாடுவது போன்றவற்றை செய்யும்போது, குழந்தைக்கு அவர்களுடன் ஒரு எமோஷனல் பாண்டிங் உருவாகும்.

உணவுமுறை

குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறுமாதங்கள் நிறைவானதும் தாய்ப்பாலுடன் ராகி கூழ், அரிசி கூழ், வேக வைத்து மசித்த பழங்கள் சிறிது சிறிதாக கொடுக்கலாம் அல்லது வேக வைத்து மசித்த காய்கறிகள் தண்ணீர் போன்றவற்றை வடிக்கட்டி 2-3 தேக்கரண்டி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்து வரலாம்.

7-8 மாதங்கள்: எழு முதல் எட்டு மாதங்களில் மசித்த உணவுகள் மற்றும் மிகச் சிறிதாக வெட்டப்பட்ட வேக வைத்த காய்கறிகள், குழந்தை கையில் பிடித்து சாப்பிடும்படி நீளமாக வெட்டப்பட்ட காய்கறிகள், சூப் வகைகள், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் ஒரு வேளை வேக வைத்த பயிறு வகைகள் போன்றவற்றை கொடுத்து வரலாம். உணவு கொடுப்பதுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.

பல வகையான உணவுகளை குழந்தைக்கு கொடுத்து பழக்குவதன் மூலம் அனைத்து வகையான சத்துகளும் குழந்தைக்கு கிடைக்கும்.அதுபோன்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தும்போது, குழந்தையை அருகில் அமர வைத்து ஒரு தட்டில் உணவுகளை மசித்து கொடுத்து குழந்தை தானே எடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

தாய்க்கு லேசான உடல் நிலை பாதிப்பு அதாவது லேசான காய்ச்சல், சளி இருக்கும் சமயத்திலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.ஒரு வயது வரை உணவில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் கொடுப்பது சிறந்தது. குழந்தைக்கு புதிய உணவுகளை பழக்கப்படுத்தும்போது, ஒரு சமயத்தில் புதிதாக ஒரு உணவு வகையை மட்டுமே ஆரம்பித்து அந்த உணவு குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா என்பதை கவனித்த பின்னரே வேறு புதிய உணவை பழக்க வேண்டும். குழந்தை சாப்பிட மறுக்கும் உணவை பலமுறை கொடுத்து சாப்பிட பழக்கினால்தான் குழந்தை அந்த உணவை சாப்பிட பழகும்.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

குழந்தைக்கு பொறை ஏற்படுத்தக்கூடிய சிறிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற உணவுகளான பொட்டுக்கடலை, நிலக்கடலை, நட்ஸ் வகைகள் போன்றவற்றை நன்றாக பொடித்தப் பின்னரே உருண்டைகளாக கொடுக்கலாம்.

தூக்கம்

குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி மைல்கற்களை சரியான நேரத்தில் அடைவதற்கு சீரான உணவும், போதுமான அளவு ஆழ்ந்த தூக்கமும் மிகவும் அவசியம்.

6 முதல் 12 மாதங்கள் வரை

பொதுவாக பிறந்தது முதல் குழந்தைகள் 10 முதல் 14 மணி நேரம் தூங்குவார்கள். ஆறு மாதம் தொடங்கியப் பின் பகல் பொழுதில் தூங்குவது குறைந்து அதிக நேரம் இரவில் தூங்க ஆரம்பிப்பார்கள்.

இந்த சமயத்தில் பெற்றோர் தூங்குகிற நேரம் வரை குழந்தையை விளையாட வைத்து நேரம் கழித்து தூங்க வைப்பதை தவிர்த்து, குழந்தையை இரவு 8 மணி அளவில் தூங்க வைத்துவிட வேண்டும். இப்படி செய்யும்போது அவர்களுக்கு தேவையான அளவு தூங்கும் நேரம் அமைய வாய்ப்பாக இருக்கும். அப்படியில்லாமல் பெரியோர்கள் விழித்திருக்கும் நேரம் வரை குழந்தையை விழித்திருக்கச் செய்வது அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடலாம். மெல்லிய இசை இசைக்கவிடலாம், இது குழந்தையை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த உதவும்.

6-12 மாத குழந்தைகளுக்கான விளையாட்டுகள்

தரையில் பொம்மைகளை போட்டு வைத்து குழந்தையை விளையாடச் செய்யலாம்.பல குரல்களை எழுப்பி குழந்தையை உற்சாகப்படுத்தி குழந்தை திரும்ப அதே போல் குரல் எழுப்பச் செய்யலாம்.கண்ணாமூச்சு விளையாட்டுகளை குழந்தைக்கு விளையாடி காண்பிக்கலாம். பலவிதமான ஒலிகளை எழுப்பும் இசைக்கும் பொம்மைகளை விளையாட கொடுக்கலாம்.

உடல் வலிமையை அதிகரிக்க குதிக்க செய்வது, படுத்த நிலையில் இருக்கும்போது உங்கள் கைகளைப் பிடித்து கொண்டு எழுந்து உட்காரச் செய்வது போன்ற விளையாட்டுகளை விளையாட வைக்கலாம்.

பப்புள்ஸ் போன்ற நீர்குமிழ் நுரைகளை உருவாக்கி அதை பிடிக்கச் சொல்லி விளையாட்டுக் காட்டலாம். வெளியே அழைத்து சென்று பறவைகள், விலங்குகள், மரங்கள் போன்றவற்றை காண்பித்து அதன் பெயரை சொல்லிக் கொடுத்து திரும்ப சொல்லச் சொல்லலாம்.உடல் பாகங்களை தலை, கண், மூக்கு, வாய், கை, கால் போன்றவற்றை சொல்லிக் கொடுத்து குழந்தையை தொட்டு காண்பிக்கச் செய்யலாம்.

படங்களுடன் கூடிய கதைப் புத்தகங்களை வைத்து படங்களை காட்டி கதை சொல்லலாம். எந்த ஒரு செயலை குழந்தைக்கு செய்யும்போதும் அதைப்பற்றி குழந்தையிடம் சொல்லிக் கொண்டே செய்வது குழந்தையின் மொழித்திறனை வளர்க்க உதவும்.

அபாய அறிகுறிகள்

* சோர்வாக இருத்தல்

*அதிக நேரம் தூங்குதல்

*வயிறு வீக்கம்

*மூச்சுத்திணறல்

*உடல் நீல நிறமாக மாறுதல்

*கண்களை நோக்கி பார்க்காமல் இருத்தல்

*கூப்பிட்டால் திரும்பாமல் இருத்தல்

*கைகால்கள் இயல்பைவிட தளர்வாகவோ இறுக்கமாகவோ இருத்தல்

*பேசுவதில் தாமதம்

*வளர்ச்சி மைல்கற்கள் தாமதமாதல்

*தடுப்பூசிகள்

*தட்டம்மை, மண்ணாங்கட்டி (மம்ப்ஸ்), ரூபெல்லா

*இன்ப்ளூயின்சா தடுப்பூசி

*டைப்பாய்டு தடுப்பூசி

*ஆகிய தடுப்பூசிகள் இந்த வயதில் போட வேண்டியவை ஆகும்.

*குழந்தையின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதோடு, நோய் தடுப்பு வழிமுறைகளையும் கையாண்டால் குழந்தை ஆரோக்கியமாக நலமுடன் இருக்கும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்