Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளுக்கும் புற்றுநோய்...சிகிச்சை என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

பெரியவர்களுக்கு வருவதைப் போலவே குழந்தைகளுக்கும் புற்றுநோய் வரலாம் என்று சொன்னால் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அது உண்மை. அதே சமயம், குழந்தைகள் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கவனித்துச் சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் அதைக் குணப்படுத்துவது எளிது. ஆனால், அந்த விழிப்புணர்வுதான் சாமானியர்களுக்கு இல்லை.

பலதரப்பட்ட புற்றுநோய்கள் குழந்தைகளைத் தாக்குகின்றன என்றாலும் குறிப்பிட்ட சில புற்றுநோய்களே பெரும்பாலான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த மாதிரியான புற்றுநோய் விவரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.

ரத்தப் புற்றுநோய் வகைகள்

இந்தியாவில் வருடத்துக்கு ஒரு லட்சம் குழந்தைகள் புதிதாக ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர்களில் ரத்தப் புற்றுநோயால் (Leukemia) பாதிக்கப்படுகிறவர்கள்தான் அதிகம். ரத்தப் புற்றுநோயில் இரு வகை உண்டு.

1. திடீர் நிணசெல் லுக்கீமியா (Acute Lymphoblastic Leukaemia - ALL)

2. திடீர் மயலோஜெனிக் லுக்கீமியா (Acute Myolegenous Leukaemia - AML).

1.திடீர் நிணசெல் லுக்கீமியா (Acute Lymphoblastic Leukaemia - ALL)

குழந்தைகள் இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு வரும் புற்றுநோய் இது. 2 - 6 வயது இந்தப் புற்றுநோய் வருவதற்கான முக்கியமான காலகட்டம். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளைத்தான் இது அதிகம் பாதிக்கிறது.

காரணங்கள் என்ன?

மரபணுச் சரடுகளில் (DNA) ஏற்படும் பிழைகளும் பென்சீன் போன்ற வேதிப்பொருள் கலந்த சுற்றுச்சூழல் மாசுகளும் தொடர்ந்து எடுக்கப்படும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளும் இந்தப் புற்றுநோய் தோன்ற வழி அமைக்கின்றன. கர்ப்பிணித் தாய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை தரப்பட்டால் அந்தத் தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த வகைப் புற்றுநோய் வரலாம். பிறந்த குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம் (Down syndrome), ஃபேன்கோனி சின்ட்ரோம் (Fanconi synrme) போன்ற குறைபாடுகள் இருந்தாலும் ரத்தப் புற்றுநோய் வரலாம். சமயங்களில் எப்ஸ்டின் பார் வைரஸ் (Epstein-Barr virus) தொற்றுகூட இந்தப் புற்றுநோய் தோன்றுவதை ஊக்கப்படுத்தக்கூடும்.

அறிகுறிகள் என்ன?.

ஆரம்பத்தில் குழந்தைக்குப் பசி குறையும். சாப்பிட மறுக்கும். சோர்வாக இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரும். அடிக்கடி சளி பிடிப்பது போன்று ஏதாவது ஒரு தொற்று தொடரும். கால் எலும்பு மூட்டுகளில் வலி ஏற்படும். இந்தத் தொல்லைகள் மாதக்கணக்கில் நீடிக்கும். குழந்தையின் உடல் எடை குறையும். சிலருக்கு மூக்கில் ரத்தம் ஒழுகலாம். ரத்தசோகை வந்து உடல் வெளிரலாம்.

2. திடீர் மயலோஜெனிக் லுக்கீமியா (Acute Myolegenous Leukaemia - AML).

இது ரத்த செல்கள் உறுபத்தியாகிற எலும்பு மஜ்ஜையில் தோன்றும் புற்றுநோய். நிணத்திசுக்கள் தவிர தட்டணுக்கள் போன்ற மற்ற வெள்ளணுக்கள் வகைகளில் தோன்றும் புற்றுநோய் என்று இதைச் சொல்லலாம். இது ஏற்படுவதற்கான காரணங்கள் ஏறத்தாழ திடீர் நிணசெல் லுக்கீமியாவுடன் ஒத்துப்போகின்றன. அறிகுறிகளும் அவ்வாறே! ரத்தப் பரிசோதனைகள் மற்றும் பிற நோய்க்கணிப்புப் பரிசோதனைகள் வழியாகவே இந்தப் புற்றுநோயைக் கணிக்க முடியும்.

3. ‘வில்ம் கட்டி’ (Wilms’ Tumor) : ‘நெப்ரோபிளாஸ்டோமா’ (Nephroblastoma) என்று பட்டப் பெயரைக் கொண்ட புற்றுநோய் இது. குழந்தைகளுக்குச் சிறுநீரகத்தில் வரும் புற்றுநோய் வகை இது. மரபணுக்களில் தோன்றும் பிழைகள் காரணமாக இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. பெற்றோர்களுக்கு இந்தக் குறைபாடு இருந்தால் அது அவர்களின் வாரிசுகளுக்கும் கடத்தப்படுகிறது. அதனால் பரம்பரையாக இந்தப் புற்றுநோய் வருகிறது.

பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தப் புற்றுநோய் வருகிறது. முதலில் குழந்தைகளைக் குளிப்பாட்டும்போது வயிற்றுக்குள் கட்டி தோன்றுவது தெரியும். கட்டி சிறுநீரகத்தில் தோன்றுமானால் அது ‘வில்ம் கட்டி’யாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. குழந்தையின் விலாப்பகுதிகளில் வலி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் போவது, பசி குறைவது, வாந்தி வருவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அது ‘வில்ம் கட்டி’யின் அடையாளங்களாக இருக்கலாம். உடனே மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

4.நியோரோபிளாஸ்டோமா (Neuroblastoma):

சிறுநீரகத்தின் மேல் தொப்பிபோல் உள்ள அட்ரீனல் சுரப்பிகளிலும் தண்டுவட நரம்பு முடிச்சுகளிலும் நரம்பு வேர்களிலும் ஏற்படுகிற புற்றுநோய் இது. ‘வில்ம் கட்டி’போலவே இதுவும் வயிற்றுக்குள் ஒரு கட்டி தோன்றுவதுபோல் தெரியும். இதை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், உடலுக்குள் நுரையீரல்கள், எலும்பு, நிணத்திசுக்கள் எனப் பல இடங்களுக்குப் பரவிடும். ஒரு வயதுக் குழந்தைகளுக்கு வரக்கூடிய புற்றுநோய்களுள் இது முக்கியமானது.

ரத்தப் பரிசோதனைகள்

ரத்த செல்களின் முழுமையான எண்ணிக்கை (CBC) : இதில் ரத்த வெள்ளணுக்களில் உள்ள எல்லா அணுக்களின் மொத்த எண்ணிக்கை அளக்கப்படும். அந்த செல்களின் அடிப்படை அமைப்பு கவனிக்கப்படும். பொதுவாக, ரத்தப் புற்றுநோயில் ரத்த செல்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். அவற்றின் கட்டமைப்பு அசாதாரணமாக இருக்கும். திடீர் நிணசெல் லுக்கீமியாக்கு இது பெரிதும் பயன்படும்.

எலும்பு மஜ்ஜை பரிசோதனை (Bone marrow examnation): ரத்தப் புற்றுநோயை உறுதி செய்யவும் எந்த வகைப் புற்றுநோய் என்பதை அறியவும் இந்தப் பரிசோதனை தேவைப்படுகிறது. அதோடு, புற்றுநோய்க்குத் தரப்படும் மருந்து சிகிச்சை பலன் தருகிறதா என்பதையும் இதில் தெரிந்து கொள்ளலாம். நிணத்திசு புற்றுநோய், நியோரோபிளாஸ்டோமா, திடீர் மயலோஜெனிக் லுக்கீமியா ஆகியவற்றுக்கு இது பெரிதும் பயன்படும்.

திசு ஆய்வுப் பரிசோதனை (Biopsy): சிறிய ஊசியைச் செலுத்தியோ, அறுவை சிகிச்சை மூலமோ கட்டியின் சிறு பகுதியை எடுத்துப் பரிசோதித்து புற்றுநோயை உறுதி செய்யலாம். ‘வில்ம் கட்டி’யை உறுதி செய்ய இது பயன்படுகிறது.

மூளைத் தண்டுவடப் பரிசோதனை (CSF Examination): ஓர் ஊசியை முதுகில் சொருகி, மூளைத் தண்டுவடத் திரவத்தை உறுஞ்சி எடுத்து, அதில் புற்றுநோய் செல்கள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்து, நோயை உறுதி செய்யும் முறை இது. நியோரோபிளாஸ்டோமா புற்றுநோயை அறிய இது உதவுகிறது.

ஸ்கேன் பரிசோனைகள்: எக்ஸ்ரே, வயிற்று அல்ட்ரா சவுண்ட், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ‘பெட்’ ஸ்கேன் உள்ளிட்ட பலதரப்பட்ட பரிசோதனைகளும் தேவைப்படும். முக்கியமாக, ரத்தப் புற்றுநோய் உடலுக்குள் பரவி இருக்கிறதா என்பதை அறிய இவை உதவுகின்றன. மேலும், புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது, எந்த மாதிரியான சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும், கொடுக்கப்படும் சிகிச்சை பலன் தருகிறதா என்பன போன்ற பல செய்திகளை இவற்றில் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக, சிறு குழந்தைகளுக்கு உறக்க மருந்து கொடுத்து இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். நியோரோபிளாஸ்டோமா புற்றுநோய்க்கு ‘டியூமர் மார்க்கர்’ (Tumor Marker) பரிசோதனை உள்ளது.

சிகிச்சை என்ன?

ரத்தப் புற்றுநோய் வகையைப் பொறுத்தும் நோய் இருக்கும் நிலையைப் பொறுத்தும், நோயாளியின் வயது, உடல் தகுதியைப் பொறுத்தும் சிகிச்சை அமையும். பொதுவாக, மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, இமுனோதெரபி, டார்கெட்டெட் கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படும். வில்ம் கட்டி உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.

ஸ்டெம் செல் சிகிச்சை

இப்போது ஸ்டெம் செல் சிகிச்சை ரத்தப் புற்றுநோய்க்கு நல்ல பலன் தருகிறது. பிரசவித்த தாயின் தொப்புள்கொடி ரத்தம் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் பெறப்படும் எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து நோயாளிக்குத் தரப்படும் சிகிச்சை முறை இது. புற்றுநோய் செல்கள் உள்ள இடங்களில் ஸ்டெம் செல்கள் உட்கார்ந்துகொள்கின்றன. இவை இயல்பான செல்களாக வளர்ந்துவிடுகின்றன. அதனால், ரத்தப் புற்றுநோய் விரைவில் குணமாகிறது.

சமீப காலமாக, மேல் நாடுகளில் இந்த சிகிச்சைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கு ஆகும் செலவு அதிகம். அடுத்து, ரத்த உறவுகளிடமிருந்து ஸ்டெம் செல்கள் கிடைப்பது மிகவும் கடினம். இவற்றின் காரணமாக நம் நாட்டில் இந்த சிகிச்சை முறை இன்னமும் பிரபலமாகாமல் இருக்கிறது.

தொகுப்பு: கு,கணேசன்