Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பருவ மழைக் கால குழந்தைகள் ஆரோக்கியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

முதுநிலை குழந்தைகள் நல மருத்துவர் நிஷா M.ஜார்ஜ்

குழந்தைகளிடையே மொபைல் மற்றும் கணினி திரையைப் பார்க்கும் நேரம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், குழந்தைகளை மழையில் விளையாடவும், தேங்கியுள்ள நீரில் குதிக்கவும், வெளிப்புற சூழலை அனுபவிக்கவும் ஊக்குவிப்பது நல்லதுதான். இருப்பினும், பருவமழையின் வருகையால் குழந்தைகளுக்கு சில நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் முதுநிலை குழந்தைகள் நல மருத்துவர் நிஷா M. ஜார்ஜ்.

வைரஸ் தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகள்

வைரஸ் தொற்றுகள் எல்லா பருவ காலங்களிலும் வரக்கூடியவையே. வைரஸால் மேல் சுவாசப்பாதை பாதிக்கின்றன; இதனால், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி மற்றும் காய்ச்சலையும் இவைகள் ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ்கள் வெவ்வேறு பெயர்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அடினோவைரஸ், ரைனோவைரஸ், இன்ஃப்ளூயன்ஸா போன்றவை இவற்றுள் சில. ஒவ்வொரு வைரஸ்களும் சற்று மாறுபட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. இப்பாதிப்புகளுக்கு வழங்கப்படும் பெரும்பாலும் அறிகுறிகளை குணப்படுத்த மட்டுமே. வைரஸினால் ஏற்படும் பெரும்பாலான மருந்துகள் மேல் சுவாசக்குழாய் தொற்றுகள், பெரும்பாலும் சிக்கல்கள் இல்லாமலேயே சரியாகிவிடும்.

இந்த குழுவில் தீவிரத்தன்மை கொண்ட வைரஸ்களில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஒன்றாகும். இது, உயர் அளவிலான காய்ச்சலை ஏற்படுத்துகிறது; மேலும், நிமோனியா போன்ற இரண்டாம் நிலை தொற்றுகளை, குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இது ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், இன்ஃப்ளூயன்ஸாவை குணப்படுத்த ஒரு மருந்தும் (ஓசல்டாமிவிர்) மற்றும் இன்ஃபுளூயன்ஸா வராமல் தடுக்க ஒரு தடுப்பூசியும் உள்ளது.

இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கமானது (Indian Association of Pediatrics), 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போடுவதைப் பரிந்துரைக்கிறது. கூடுதலாக, இந்த வயதுக் குழுவில் உள்ள குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா இருப்பதாக ஐயமிருப்பின், ஓசல்டாமிவிர் வைரஸ் எதிர்ப்பு மருந்துடன் அறிகுறி தென்பட்ட உடனேயே ஆரம்பகால சிகிச்சை பயனுள்ளதாகும்.

தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் ஒவ்வாமைகளும் ஏற்படலாம். தூசி, மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமை எதிர்வினைகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்படுவதற்கு அவர்களின் உடல் அமைப்பும் மற்றும் மரபணுக்களும் காரணமாக இருக்கின்றன. வைரஸால் ஏற்படும் மேல் சுவாசப்பாதை தொற்றுக்கும் ஒவ்வாமைக்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலும் காய்ச்சலாகவே இருக்கிறது. காய்ச்சல் இருக்கும் குழந்தைக்கு வைரஸ் தொற்று இருப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

உணவும் பருவமழையும்

பருவமழைக் காலமும், திகட்டாத சுவையுடன் கூடிய மாம்பழ சீசனும் ஏறக்குறைய ஒன்றாகவே வருகிறது. மேலும், இப்போதெல்லாம் குடும்பங்கள் வெளியே சென்று உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து விட்டது.பருவமழையானது, அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் விளைவிப்பது துரதிருஷ்டவசமானது. குறிப்பாக பருவமழைக் காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான நீரைக் குடிப்பது மிகவும் முக்கியம். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுக்கலாம். வெளியில் வாங்கும் பழச்சாறுகள் போன்றவற்றில் மாசுபட்ட நீர் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆபத்தை கவனத்தில் கொள்வது நல்லது.

அசுத்தமான உணவையும், தண்ணீரையும் அருந்துவது வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலுடன் கூடிய தீவிர இரைப்பைக் குடல் அழற்சியை ஏற்படுத்தும். இப்பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சலுக்குப் பாராசிட்டமால், வாந்தியெடுத்தலுக்கு வாந்தி எதிர்ப்பு மருந்து மற்றும் உடல் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க WHO ORS ஆகியவை மூலம் சரியான சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.

வைரல் ஹெபடைடிஸ் மற்றும் டைபாய்டு காய்ச்சல் ஆகிய பாதிப்புகள், அசுத்தமான உணவு மற்றும் நீரிலிருந்து வரும் மற்றொரு தொற்றாகும். இந்த இரண்டையும் தடுப்பூசிகள் மூலம் வராமல் சிறப்பாக தடுக்க முடியும். இது குறித்து உங்களது குழந்தைகள் நல மருத்துவரிடம் நீங்கள் விசாரித்து அறியலாம். வெளி உணவகங்களில் சாப்பிடும்போது பாதுகாப்பான, சுத்தமான மற்றும் சமைத்த உணவை உண்பதும் முக்கியம். சமைக்காத சட்னிகள், சாலடுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை அசுத்தமாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறு குழந்தைகளுக்கு அதிக அளவு மாம்பழங்களை சாப்பிடக் கொடுப்பதும் நல்லதல்ல. அதிகப்படியான மாம்பழங்களை உட்கொள்ளும்போது சிறு குழந்தைகளுக்குக் குடலில் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம்.

வீட்டிற்கு வெளியே விளையாடுவதும் பருவமழையும்

வீட்டிற்கு வெளியில் விளையாடுவது எப்போதுமே ஒரு நல்ல விஷயம்தான். மழைக்குப் பிறகு வீசும் புதிய காற்று சுகமானது; அற்புதமான உணர்வை தரக்கூடியது. எனினும், மின்வினியோக கம்பிகள், டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் மின் அதிர்ச்சி ஏற்படும் அபாயம் இல்லாத பாதுகாப்பான இடங்களில் குழந்தைகள் விளையாடுவது முக்கியம். இதை உறுதிசெய்வது

பெற்றோர்களின் கடமையாகும்.

வெளியில் விளையாடி முடித்ததும், கிருமிகள் மற்றும் புழுக்களால் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவது அவசியம். பருவமழைக்காலம் என்பது உங்கள் அன்புக்குரிய குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக அனுபவித்து ரசிக்கின்ற ஒரு அழகான காலமாகும். எதைக் குறித்தும் கவனமாகவும், முன்னெச்சரிக்கை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்திருந்தால், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பருவ மழைக்காலத்தை நாமும் மற்றும் நமது குழந்தைகளும் அனுபவிக்க முடியும்!