Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குழந்தைகளுக்கும் மூளைக் கட்டி…

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் உதய் கிருஷ்ணா

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு ஏற்படும் மூளைக் கட்டிகள், அதிக சிக்கலான மற்றும் வாழ்க்கையை புரட்டிப்போடும் புற்றுநோயின் வடிவங்களாகும். எனினும், இக்கட்டிகள், உயிரியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இவற்றுக்கான நோய் கண்டறிதலும், சிகிச்சையும் தனித்துவமான சவால்களைக் கொண்டுள்ளன.

2025 நிலவரப்படி, தொடர்ந்து அதிகரித்து வரும் ஆராய்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான நரம்பியல்-புற்றுநோய் பற்றிய மேம்பட்ட புரிதலுடன், நோய்க்கான காரணங்கள் தொடர்பான அறிவை வளர்ப்பதும், உகந்த சிகிச்சையை வழங்குவதும், குழந்தைகளுக்கான மூளைக் கட்டிகளைக் குணப்படுத்துவதற்கான வழியைக் கண்டறிவதும் இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. மூளைக் கட்டி உள்ள ஒரு குழந்தைக்கு, பெரியவர்களுக்கான அதே சிகிச்சை அளவை மட்டும் குறைத்து வழங்குவது போதாது என்கிறார் புற்றுநோய் கதிர்வீச்சியல் முதுநிலை சிகிச்சை நிபுணர், மருத்துவர் உதய் கிருஷ்ணா. அவர் மேலும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

ஒரு மூளைக் கட்டி என்பது, அடிப்படையில் மூளைக்குள்ளேயோ அல்லது அதைச் சுற்றியோ உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியையே குறிக்கிறது. இந்தக் கட்டிகள் தீங்கற்றவையாகவும், மெதுவாக வளரக்கூடியவையாகவும் இருக்கலாம் அல்லது தீங்கு விளைவிக்கும் வீரியம் மிக்கவையாகவும், வேகமாகப் பரவக்கூடியவையாகவும் இருக்கலாம். இவை மூளையின் பல்வேறு திசுக்களான - நரம்பிணைப்பு சார்ந்த உயிரணுக்கள் (Glial Cells), நரம்பு முன்னோடி செல்கள் அல்லது துணை அமைப்புகளிலிருந்தும் உருவாகலாம்.

உடலில் வேறு எங்கோ உருவாகி, பின்னர் மூளைக்குப் பரவும் கட்டிகளும் உண்டு. சில சமயங்களில் சுற்றுச்சூழல் மற்றும் மரபணுக் காரணிகள் இதில் பங்கு வகிக்கக்கூடும் என்றாலும், பல குழந்தைப் பருவ மூளைக் கட்டிகள் ஆரம்பகால வளர்ச்சியின் போது ஏற்படும் தன்னிச்சையான மரபணு மாற்றங்களால் ஏற்படுகின்றன. வயதுவந்த பெரியவர்களைப் போலல்லாமல், குழந்தைகளில் மூளைக் கட்டிகளுக்கான காரணங்கள் பொதுவாக வாழ்க்கைமுறை அல்லது சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடையதாக மிக அரிதாகவே இருக்கின்றன. அதற்குப் பதிலாக, லிஞ்ச் நோய்க்குறி, CMMRD, லி-ஃப்ரூமேனி, டர்காட் மற்றும் நரம்பு நார்க்கட்டி வகை 1 மற்றும் வகை 2 போன்ற மரபணு ரீதியாகப் பெறப்பட்ட நோய்க்குறிகளுடன் தொடர்புள்ளதாகவே அவை இருப்பதை நாம் பார்க்கிறோம்.

அனைத்து வயது குழந்தைகளும் மூளைக் கட்டிகளால் பாதிக்கப்படலாம்; ஆனாலும் முதல் பத்தாண்டுகளில், குறிப்பாக 0 முதல் 9 வயது வரையிலான காலகட்டத்தில், மூளைக் கட்டிகளின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இது மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான காலகட்டம் என்பதால், சரியான நேரத்தில் துல்லியமான சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். ஒரு கட்டி உருவாகி வளரத் தொடங்கியதும், பல வகைகளில் அது வேகமாகப் பரவும் ஆபத்தும் கணிசமாக அதிகரிக்கிறது.

உயிரியல் ரீதியாக, குழந்தைகளின் மூளைக் கட்டிகள் பெரியவர்களின் கட்டிகளிலிருந்து அடிப்படையான பல வழிகளில் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, பெரியவர்களுக்கு மூளைக்கழலைகள் மிக அதிகமாக கண்டறியப்படும் நிலையில், குழந்தைகளுக்கு மெடுல்லோபிளாஸ்டோமாஸ், உயர்தர கிளியோமாஸ், பைலோசைட்டிக் ஆஸ்ட்ரோசைட்டோமாஸ் மற்றும் எபெண்டிமோமாஸ் ஆகிய வகையினக் கட்டிகள் பொதுவாகக் கண்டறியப்படுகின்றன. இக்கட்டிகளின் அமைவிடங்களும் கணிசமாக வேறுபடுகின்றன.

குழந்தைகளின் கட்டிகள் பெரும்பாலும் மூளைத்தண்டு மற்றும் சிறுமூளை அருகில் உள்ள மண்டையறையின் பின்பள்ளப் பகுதியில் உருவாகின்றன. இப்பகுதிகளே சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் அத்தியாவசிய வாழ்க்கைச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. கூடுதலாக, மரபணு பகுப்பாய்வு குழந்தைகளின் கட்டிகளில் தனித்துவமான மூலக்கூறு குறிப்பாண்களை வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக, மென்மையான மூலச்செல்புற்றில் காணப்படும் மூலக்கூறு துணைக்குழுக்கள், H3K27M பிறழ்வுகள் மற்றும் BRAF மரபணு மாற்றங்கள் ஆகியவை வயதுவந்த நபர்களின் கட்டிகளில் காணப்படுவதில்லை அல்லது அரிதாகவே இருக்கின்றன.

குழந்தைகள், சிறிய வயதுவந்த நபர்கள் அல்ல; அவர்களின் கட்டிகளுக்கு தனித்துவமான நோயறிதல் மற்றும் சிகிச்சை உத்திகள் தேவை என்பதை குழந்தைகளுக்கான புற்றுநோயியல் வல்லுநர்கள் நீண்ட காலமாக அறிந்திருப்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் வலுப்படுத்துகின்றன. துரதிருஷ்டவசமாக நோயறிதலில் ஏற்படும் தாமதமே குழந்தைகளுக்கான மூளைக் கட்டிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.

ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் மெதுவாகவே தொடங்குகின்றன. உதாரணமாக, காலை வேளையில் தலைவலி, விட்டுவிட்டு வரும் வாந்தி, தள்ளாடும் நடை, லேசான பார்வைக் குறைபாடுகள் அல்லது பள்ளி செயல்பாடுகளில் லேசான மாற்றங்கள் போன்றவை. சிறு குழந்தைகளின் மூளைக்கு கணிசமான நெகிழ்வுத்தன்மை இருப்பதால், ஆரம்ப கட்டங்களில் சில செயல்பாட்டு இழப்புகளை அதனால் ஈடுசெய்ய முடியும்.

இதனால், அடிப்படையிலுள்ள பிரச்னையின் தீவிரத்தை அது மறைத்துவிடுகிறது. மேலும், அறிகுறிகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியாத மிகச் சிறிய வயதுள்ள குழந்தைகளில், வளர்ச்சி நிலைகளில் பின்னடைவு ஏற்படலாம். இதன் விளைவாக, கட்டிகள் கணிசமாக வளரும் வரை கண்டறியப்படாமல் போகலாம். சில சமயங்களில், ஆரம்பத்திலேயே கண்டறிந்திருந்தால் மிகவும் தீவிரமான சிகிச்சைகள் தேவைப்பட்டிருக்காது.

மூளைக்கட்டி கண்டறியப்பட்டதும், சிகிச்சை முறையானது கட்டியை தீவிரமாகத் தாக்கும் வகையிலும், அதே சமயம் வளரும் மூளையைப் பாதுகாக்கும் வகையிலும் அமைய வேண்டும். அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற பலதரப்பட்ட சிகிச்சை முறைகள், நீண்ட கால நரம்பியல் அறிவாற்றலையும் மற்றும் உடல் ரீதியான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

முழுமையாக வளர்ச்சியடைந்த மூளை இருக்கின்ற பெரியவர்களைப் போலல்லாமல், குழந்தைகளின் மூளை முக்கியமான நரம்புப் பாதைகளை இன்னும் உருவாக்கிக் கொண்டிருக்கும்; இந்த வளர்ச்சியில் ஏற்படும் எந்தவித இடையூறும் மீண்டும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இக்காரணத்திற்காக, பக்கவிளைவுகளைக் குறைக்கும் சிகிச்சைகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். உதாரணமாக, கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில், கதிர்வீச்சு சிகிச்சை பெரும்பாலும் முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது அல்லது முடிந்தவரை தாமதப்படுத்தப்படுகிறது. ஏனெனில், இது ஆழ்ந்த அறிவுசார் மற்றும் ஹார்மோன் தொடர்பான பக்க விளைவுகளுடன் தொடர்புடையது. கீமோதெரபி ஒரு முதன்மை கருவியாகவும், தேவைப்பட்டால் கதிர்வீச்சு சிகிச்சையை பாதுகாப்பாகப் பெறும் அளவுக்கு குழந்தை வளரும் வரை ஒரு இடைப்பட்ட தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், புரோட்டான் பீம் சிகிச்சை போன்ற மேம்பட்ட நுட்பங்கள் மதிப்புமிக்க கருவிகளாகவும், சிகிச்சை உத்திகளாகவும் உருவெடுத்துள்ளன. இவை துல்லியமான இலக்கை நோக்கிய கதிர்வீச்சை வழங்குவதன் மூலம் புற்றுக்கட்டியை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்கின்றன; குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

நவீன புரோட்டான் பீம் சிகிச்சை, வழக்கமான எந்தவொரு போட்டான் சிகிச்சை முறையுடனும் ஒப்பிடும்போது, சாதாரண திசுக்களுக்குக் கணிசமாகக் குறைந்த ஒருங்கிணைந்த மருந்து அளவை வழங்குவதால், இரண்டாம் நிலை வீரியம் மிக்க கட்டிகள் ஏற்படும் விகிதத்தை 2 முதல் 15 மடங்கு வரை கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க நன்மைகள் காரணமாக, ASTRO (யுஎஸ்ஏ), JASTRO & JSHPO (ஜப்பான்), கனடா போன்ற பல முன்னணி புற்றுநோயியல் சங்கங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி கொள்கைகளில், புரோட்டான் பீம் சிகிச்சை தற்போது CSI (முழு மூளை மற்றும் தண்டுவடக் கதிர்வீச்சு சிகிச்சை) க்கான விருப்பமான சிகிச்சை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சை நுட்பங்களும் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடைந்துள்ளன. பல மருத்துவமனைகள், தற்போது அறுவை சிகிச்சையின்போது எம்ஆர்ஐ, நியூரோநேவிகேஷன் மற்றும் செயல்பாட்டு நிலையில் மூளை வரைபடமாக்கல் போன்றவற்றை பயன்படுத்துகின்றன. இவை இயக்க அல்லது அறிவாற்றல் செயல்பாடுகளைப் பாதிக்காமல், புற்றுக்கட்டியை அதிகபட்ச பாதுகாப்புடன் அகற்றுவதை உறுதி செய்கின்றன. மேலும், நரம்பியல் பாதுகாப்பு உத்திகள், கல்விசார் ஆதரவு மற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சைகளை நீண்ட கால பராமரிப்புத் திட்டங்களில் இணைத்திருப்பது, பல குழந்தைகள் உயிர்பிழைத்து வாழ்வதற்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் உயர்தரத்தை அடையவும் உதவுகிறது.

இந்த வகையான முழுமையான, இலக்கை நோக்கிய துல்லியமான சிகிச்சை, குழந்தைகளுக்கான சிறப்பு புற்றுநோய் மருத்துவ மையங்களில் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய சிறப்பு மருத்துவ மையங்களில், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், குழந்தைகளுக்கான புற்றுநோய் நிபுணர்கள், நரம்பியல் உளவியலாளர்கள், மறுவாழ்வு நிபுணர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் வரை, மூளைக் கட்டி உள்ள குழந்தைகளின் சிக்கலான தேவைகளைக் கையாளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களது குழுக்கள் செயல்படுகின்றன.

2024 டிசம்பரில் தி லான்செட் சைல்ட் & அடலசென்ட் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைக் கையாளும், சிறப்பு வாய்ந்த குழந்தைகளுக்கான மையங்களில் சிகிச்சை பெறும் குழந்தைகள், பொது புற்றுநோய் சிகிச்சை அமைப்புகளில் சிகிச்சை பெறுபவர்களை விட கணிசமான அளவு சிறப்பான உயிர்பிழைப்பு மற்றும் இயக்கத்திறன் விளைவுகளைப் பெறுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த மையங்கள், குழந்தைகளுக்கே உரித்தான கட்டி பிறழ்வுகளை இலக்காகக் கொண்ட நவீன மருத்துவ ஆய்வு பரிசோதனைகளுக்கான வசதியையும் வழங்குகின்றன. இந்த முன்னேற்றங்கள், முன்பு குணப்படுத்த முடியாத நிலையிலிருந்த நோய் பாதிப்புகளை சிறப்பாக நிர்வகிக்கக்கூடியவையாக மாற்றி வருகின்றன.

இறுதியாக, குழந்தைகளின் மூளைக் கட்டிகளுக்கு அறிவியல் துல்லியத்துடன், கனிவான, குழந்தைகளை மையமாகக் கொண்ட தனித்துவமான சிகிச்சை அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தக் கட்டிகள் பற்றிய நமது புரிதல் கணிசமாக முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆரம்பகால நிலையிலேயே நோய் கண்டறியப்படுவதும், சிறப்பு சிகிச்சைக்கான அணுகுவசதியும் சிறந்த விளைவுகளை உறுதி செய்வதில் மிக முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. நோய்க்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்ல; குழந்தைப் பருவத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும், நமது இளம் நோயாளிகள் புற்றுநோயில் இருந்து மீண்டு, வளர்ந்து, கற்றுக்கொண்டு, நிறைவான வாழ்க்கையை வாழ உதவுவதும் குழந்தைகளுக்கான புற்றுநோய் நிபுணர்களாகிய எங்களது பொறுப்பாக இருக்கிறது.