Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உடலை உறுதியாக்கும் செலரி கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

இன்றைய உணவு கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத உணவு வகைகளில் ஒன்று கீரை. கீரைகள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதாக திகழ்கிறது. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் அதற்கான தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் கீரைகளில் ஒன்று செலரி கீரை. செலரி கீரை தான் கொண்டுள்ள சுவை, மணம், மருத்துவகுணங்களால் இந்தியாவிலும் தனி இடம் பிடித்துள்ளது.

செலரி கீரை சீனாவை தாயகமாகக் கொண்டது. இதன் அறிவியல் பெயர் - அபியம் கிட்கவியோலன்ஸ். வட இந்தியாவில் செலரி விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது.

இது அபிகேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. செலரி கீரை பார்ப்பதற்கு கொத்துமல்லி கீரையைப்போல் தோற்றமளிப்பதால் சீமை கொத்துமல்லி என்ற புனைப்பெயரிலும் செலரி கீரை அழைக்கப்படுகிறது.

இது குளிர்ச்சியான, ஈரப்பதம் நிறைந்த இடங்களில் நன்கு வளரும் தன்மை உடையது. செலரியின் இலைகள், தண்டுகள் மற்றும் காம்புகள் போன்றவை உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. செலரி கீரை குறைந்த கலோரிகளையும், அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. மேலும் இது உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைத்து, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

செலரி கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி.

தாதுக்கள்: பொட்டாசியம், இரும்பு, கால்சியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்தது. செலரியில் உள்ளன.

தாவர மூலக்கூறுகள்

செலரி கீரையின் மருத்துவ பண்புகளுக்கும் அதன் தனிச்சிறப்பிற்கும் காரணமாக இருப்பது அதில் உள்ளடங்கிய தாவர மூலக்கூறுகள் ஆகும். இதில் அபிஜெனின்லூட்டிலோன் போன்ற பிளேவோனாய்டுகளும், லிமோனின், சிலினின் உள்ளிட்ட டெரிபினாய்டுகளும் உள்ளன. மேலும், ஸ்டிராய்டுகள், சாப்போனின்கள் மோரின்கள், பீனாலின் அமிலங்கள் ஆகியவை செலரியில் அதிகம் காணப்படுகின்றன.

செலரியின் மருத்துவ பண்புகள்

ரத்த அழுத்த கட்டுப்பாடு: செலரியில் உள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களை தளரச் செய்து ஹைப்பர் டென்ஷனை குறைக்கிறது.

சருமப் பொலிவு: ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் அதிகமாக செலரியில் உள்ளதால் தோற்றப் பொலிவினை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

டிடாக்ஸ் பண்பு: உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை நீக்கி சிறுநீரக செயல்பாட்டினை மேம்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க: நார்ச்சத்து நிறைந்துள்ளதினால் செரிமான மண்டல செயல்பாட்டினை தூண்டி, ஊளைச் சதையை குறைக்க உதவுகிறது.

ரத்த சோகையை தடுக்க

*செலரியுடன் எலுமிச்சை சாறினை கலந்து சாலட்டாக சாப்பிடும்போது கீரையில் உள்ள இரும்புச்சத்து நன்கு உறிஞ்சப்பட்டு ரத்தசோகை தடுக்கப்படுகிறது.

*மூட்டுவலி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்னைகளுக்கும் செலரி தீர்வாக அமைகிறது.

*இதய நோயினை தடுக்கவும். சிறுநீரகக் கற்களை கரைக்கவும் பயன்படுகிறது.

*மாரடைப்பினை தடுக்க பயன்படுகிறது.

*கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

*ஆஸ்துமா, தொண்டை அழற்சி போன்றவற்றை தடுக்கிறது.

*உடல் வலிமையை மேம்படுத்துகிறது.

*வயிற்றுப்புண்ணை குணப்படுத்த உதவுகிறது.

மேலும் உடலுக்கு உறுதியை அளிக்கும் முக்கிய அமினோ அமிலங்களான மியுசின், அர்ஜினைன் போன்றவை செலரியில் உள்ளன. இத்தகைய நன்மையளிக்கும் கீரையினை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன அழுத்தம் குறையவும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழவும் உதவும்.

செலரியை உணவில் பயன்படுத்தும் முறை

*சமையலில் பல்வேறு காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தும் பயன்படுத்தலாம்.

*வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்ற பழங்களுடன் சேர்த்து ஸ்மூத்தியாக அருந்தலாம்.

*சிலர் செலரி விதைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

*செலரி தண்டுகள் மற்றும் இலைகளை நறுக்கி, மற்ற காய்கறிகள், சீஸ் போன்றவற்றுடன் சேர்த்து பர்கரில் வைத்தும் பயன்படுத்தலாம்.

*மேலும், மற்ற கீரைகளைப் போல் கூட்டு, பொரியல், துவையல் செய்தும் சாப்பிடலாம்.

*இந்தக் கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம்.

*பிரியாணி, புலாவ் போன்றவற்றில் புதினா சேர்ப்பது போன்று செலரிக் கீரையும் சேர்த்து சமைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.