நன்றி குங்குமம் டாக்டர்
வெப்பம் தணிந்து மழைக்காலம் தொடங்கிவிட்டாலே சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் என படையெடுக்க ஆரம்பித்துவிடும். மழையினால், ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் நோய்களும் அதிகரித்துவிடுகின்றன. இதற்கு குளிர்ச்சியான காலநிலையும் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும் காரணமாக இருக்கிறது. மழைக்காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால். இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன? அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது? போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஐஸ்வர்யா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் மருத்துவர் பவித்ரா தமிழரசன்.
குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இந்த பருவத்தில், பல்வேறு பிரச்னைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பருவக்காலம் தொடங்கியதுமே, இவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், டெங்கு, டைபாய்டு மற்றும் மலேரியா போன்ற மழை கால நோய்களை தடுக்கவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அது குறித்த விவரம் வருமாறு...
வெள்ளம் மற்றும் கடும் மழையின் போது முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளை மழைநீரில் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தமான, சுடு தண்ணீர் அல்லது வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
டைபாய்டு, காலரா மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்ற நீரினால் பரவும் நோய்களுக்கு அசுத்தமான தண்ணீர் முக்கிய காரணமாக உள்ளது. தண்ணீரின் தரம் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை கொதிக்க வைக்கவும் அல்லது தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகளைப் பயன்படுத்திய பின் அதை குடிக்கவும். உங்களை எப்போதும் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது சாப்பிடுவதற்கு முன் அல்லது உங்கள் முகத்தைத் தொடுவதற்கு முன் உங்கள் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் கழுவவும். வெள்ள நீர் பெரும்பாலும் கழிவுநீருடன் கலந்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவுவதை அதிகரிக்கிறது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்.
மேலும் பருவ மழை காலத்தில் மீந்து போன பழைய உணவுகள் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காற்றில் உள்ள ஈரப்பதத்தால் பழைய உணவில் விரைவில் பூஞ்சைகள் உற்பத்தியாக வாய்ப்புகள் அதிகம். அதனால், முடிந்தவரை ஒவ்வொரு வேளைக்கும் புதிதாக சமைத்த உணவை உண்ணுவது என்பது மிகவும் சிறந்ததாகும்.
மழைக்காலத்தில் பச்சையாக தயாரிக்கும் சாலடுகள், நீண்ட நேரம் நறுக்கி வைத்திருக்கும் பழங்கள் மற்றும் தெரு உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக நன்கு வேகவைத்த சூடான, புதிதாக சமைத்த உணவுகளைத் தேர்வுசெய்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பின் உடனடியாக சாப்பிட வேண்டும்.
தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் ஒட்டுண்ணிகள், விலங்குகளின் கழிவுகள் மற்றும் நச்சு ரசாயனங்கள் இருக்கலாம். உடலில் உள்ள சிறிய வெட்டுக்கள் அல்லது காயங்கள் கூட இதன் காரணமாக எளிதில் பாதிக்கப்படலாம். எனவே வெளியே செல்வது தவிர்க்க முடியாதது என்றால், பாதுகாப்பான காலணிகளை அணிந்து செல்ல வேண்டும்.
கொசு மற்றும் பிற பூச்சிகள் கடிக்காமல் இருக்க பாதுகாப்பான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். முழுக்கை சட்டைகள், பேன்ட் மற்றும் சாக்ஸ் ஆகியவை கொசு கடிப்பதைத் தடுக்க உதவுகின்றன, குறிப்பாக கொசுக்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும் விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் இதை அணிந்து கொள்வது என்பது மிகவும் நல்லது. அதுபோன்று தினசரி துவைத்த சுத்தம் செய்த ஆடைகளையே பயன்படுத்த வேண்டும்.
மழைக்காலத்தின் போது ஏற்படும் பொதுவான காய்ச்சல்கள்
டைபாய்டு
அசுத்தமான உணவு அல்லது தண்ணீரால் ஏற்படும் டைபாய்டு, அதிக காய்ச்சல், சோர்வு, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இது வராமல் தடுக்க நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். மேலும் நம்மை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
லெப்டோஸ்பிரோசிஸ் பாக்டீரியா தொற்று:
விலங்குகளின் சிறுநீர் தண்ணீரில் கலந்து இருக்கும் நிலையில் அதில் நாம் நடக்கும்போது இந்த பாக்டீரியா தொற்று பரவுகிறது. இது காய்ச்சல், குளிர் மற்றும் தசை வலியை ஏற்படுத்துகிறது. வெறுங்காலுடன் அல்லது வெள்ளத் தண்ணீர் உள்ள பகுதிகளில் நடப்பதைத் தவிர்க்கவும்.
மலேரியா
தேங்கி நிற்கும் தண்ணீர் மலேரியாவைப் பரப்பும் அனோபிலிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். குளிர் மற்றும் வியர்வையுடன் கூடிய காய்ச்சல் இதன் அறிகுறிகளாகும். கொசு வலைகள் மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்தும்போது மலேரியாவை தடுக்கலாம்.
டெங்கு காய்ச்சல்
மழைக்காலங்களில் ஏற்படும் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையான டெங்கு, தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் சொறி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். கடுமையான பாதிப்புகளில் ரத்தப்போக்கு மற்றும் நீரிழப்பு ஏற்படலாம். இதற்கு உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
வடகிழக்கு பருவமழையின் போது டெங்கு தடுப்பு
மழை அதிகரிக்கும் போது, டெங்கு அபாயமும் அதிகரிக்கிறது. ஏடிஸ் கொசு சுத்தமான, தேங்கி நிற்கும் தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது - வீட்டில் உள்ள சிறிய குழிகள் அல்லது தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களில்கூட இவை இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, எந்த பொருட்களிலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சமைக்கும்போது பாத்திரங்களை சுத்தமாக கழுவிவிட்டு பின்னர் சமைக்க வேண்டும்.
பாதுகாத்துக் கொள்வது எப்படி?
*பூந்தொட்டிகள், வாளிகள் மற்றும் டயர்களில் இருந்து தேங்கி நிற்கும் தண்ணீரை அவ்வப்போது அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
*கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு வலைகளை பயன்படுத்தவும்.
*குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முழு கை ஆடைகளை அணியுங்கள்.
*காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது சொறி, வாந்தி அல்லது கடுமையான உடல் வலியுடன் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
பொதுவாக மழைக்காலங்களில் காய்ச்சல் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொண்டால் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பெரியவர்கள் பலர் காய்ச்சல் அல்லது சோர்வுக்கான ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள், இது மழைக்காலத்தில் பொதுவாக ஏற்பட கூடிய தொற்று என்று கருதுகிறார்கள்.
இதனால் வீட்டிலேயே வைத்தியங்கள் செய்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு செய்யாமல் ஆரம்பகால நோயறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டால் தீவிர நோய் தன்மையை அது மாற்றும். மேலும் சுத்தமான தண்ணீரைக் குடிப்பது, சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் கொசு கடியிலிருந்து பாதுகாப்பது போன்ற எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தாலே கடுமையான நோய்களை தடுக்கும் சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.
மழை காலத்தில் ஆரோக்கியமாக இருங்கள்
மழைக்காலம் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், கூடுதல் எச்சரிக்கை தேவை. சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து, மாசுபட்ட உணவு மற்றும் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பதோடு, கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கொஞ்சம் விழிப்புணர்வு மற்றும் சரியான நடவடிக்கை போன்றவை, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
தொகுப்பு: தவநிதி
