Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரசவத்துக்குப் பின் எடை தூக்கலாமா?

நன்றி குங்குமம் தோழி

பதில் கூறும் இயன்முறை மருத்துவம்!

விஞ்ஞான யுகத்தின் வளர்ச்சிப் படியில் வாழும் இன்றைய பெண்களுக்கு குடம் தூக்குவது, தம் பிடித்துக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பது எல்லாம் இல்லை என்பதால், பெரும்பாலும் எடை தூக்கி வேலை செய்வதே குறைந்துவிட்டது அல்லது இல்லாமல் ஆகிவிட்டது (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) எனலாம். அதனால் அதிகபட்சமாக இன்று நாம் தூக்கும் எடை என்பது துவைத்த துணிகள் இருக்கும் வாளியை தூக்குவதுதான்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் ‘பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் எடை தூக்கலாமா, எப்போது எடை தூக்க ஆரம்பிக்கலாம், எந்த அளவு எடை தூக்க வேண்டும், அதிகமாக எடை தூக்கினால் பாதிப்பு ஏற்படுமா, அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கான அறிவுரைகள் என்ன, மேலும் இதில் இயன்முறை மருத்துவரின் பங்கு யாது?’ என்று பலருக்கும் கேள்விகள் வரிசைகட்டி நிற்பதை பார்க்கலாம்; கேட்கலாம். அவர்களுக்காகவே இந்தக் கட்டுரை.

தசைகளின் முக்கியத்துவம்...

ஒருவர் ஓர் உடல் அசைவினை செய்ய தசைகளின் உதவி தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக எடைகளை தூக்க அதிக தசை வலிமை அவசியம். உதாரணமாக, நாம் கையில் எடை தூக்கிக்கொண்டு நடக்கிறோம் என்றால், நாம் தூக்கும் எடையை தசைகள்தான் சுமக்கிறது. எனவே அது பலவீனமாய் இருந்தால் எடையின் தாக்கம் எலும்புகளுக்கு செல்லும், சுற்றியிருக்கும் ஜவ்வுகளுக்குச் சென்று பாதிப்பு ஏற்படுத்தும்.

மேலும் நம் கை, கால்களில் உள்ள தசைகள் வயிற்று தசைகளை சார்ந்திருக்கும். அதாவது, நாம் கையினால் எடையுள்ள பையினை தூக்கினாலோ அல்லது காலில் எடையுள்ள ஏதாவது ஒரு பொருளை தள்ளினாலோ அதற்கு பலம் கை கால் தசைகளில் மட்டுமல்லாமல் வயிற்று தசைகளில் இருந்தும் வரும் என்பது இயற்கையின் படைப்பு.

எனவே குழந்தையை கருவில் சுமக்கும் போது வயிற்று தசைகள் விரிந்து கொடுத்திருக்கும் என்பதால் பலவீனமாய் இருக்கும். அதனால் நாம் எடை தூக்கும் போது பல பக்க விளைவுகள் நடக்கிறது.

சுகப்பிரசவ தாய்மார்கள்...

குழந்தையை வயிற்றில் பத்து மாதம் சுமக்கும் போது வயிற்றின் முன் இருக்கும் தசைகள் விரிந்து கொடுக்க நேரிடும். இதனால் வலிமை இழந்து காணப்படும். சிக்ஸ் பேக் (Six Pack) என நாம் சொல்லும் இந்த வயிற்று தசைகள் தொப்புள் நேர்க்கோட்டிற்கு இரு பக்கமும் இருக்கும். நேர்க்கோட்டில் கெட்டியான தசை நாணாக (Muscle tendon Sheath)இருக்கும்.

கர்ப்பப்பை விரிய விரிய இந்த நேர்க்கோட்டில் அமைந்துள்ள தசை நாண் மிகவும் விரிந்து காணப்படும். ஒரு சில பெண்களுக்கு இந்த இணைப்பே முற்றிலும் அறுபட்டு கூட இருக்கும். இதனால் கொஞ்ச காலம் எடை தூக்கக்கூடாது என சுகப்பிரசவ தாய்மார்களை சொல்வார்கள்.

அறுவை சிகிச்சை தாய்மார்கள்...

வயிற்றை கிழித்து குழந்தையை எடுப்பதுதான் அறுவை சிகிச்சை என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் அதில் ஏழு அடுக்குகள் உள்ளது என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வெளியே தெரியும் தோல் முதல் ஏழாவதாக கிழிக்கும் பனிக்குடம் வரை உள்ள அடுக்குகளில் நடுவில் மிக முக்கியமான இரண்டு அடுக்குகள் உள்ளன. அவை வயிற்று தசைகள் (Abdominal Muscles), வயிற்றுப்பை (Peritoneum). இந்த தசைகள் முதலே மேலே சொன்னவாறு பலவீனமாய் இருக்கும். மேலும் அறுபடுவதால் நாம் எடை தூக்குவது ஆபத்தாக அமையும்.மேலும், இந்த வயிற்றுப்பை ஒரு பைப் போல நம் குடல், வயிறு, கர்ப்பப்பை என அனைத்தையும் தாங்கி இருக்கும் என்பதால், எடை தூக்கும் போது வயிற்றுப்பையில் போடப்பட்டிருக்கும் தையல் விடும் வாய்ப்பு உள்ளது.

காரணங்கள்...

* வயிற்று தசைகள் பலவீனமாய் இருப்பதால் எடை தூக்கினால் உள்ளே உள்ள உள் உறுப்புகள் வெளியே வரும். இதனையே குடல் இறங்கிவிட்டது என நாம் சொல்கிறோம். இதனை ‘ஹெரன்யா’ (Hernia) என மருத்துவத்தில் சொல்வார்கள்.

* வயிற்று தசைகள் பலவீனமாய் இருப்பது போல முதுகு தசைகள் இறுக்கமாக (Tightness) இருக்கும். இதனால் நாம் குனிந்து நிமிர்ந்தபடி தூக்கும் எடைகள் முதுகில் உள்ள ஜவ்வுகளை பாதிக்கும். இதனால் முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வுகள் பிதுங்க நேரிட்டு முதுகு வலி வரும்.

இயன்முறை மருத்துவம்...

குழந்தை பிறந்த பின் முதல் மூன்று மாதங்களுக்கு நாம் செய்ய வேண்டியது எடைத் தூக்காமல் இருப்பது மட்டுமே. மூன்று மாதம் கழித்து அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் தசை வலிமை பயிற்சிகள், தசை தளர்வு பயிற்சிகள் என பல்வகை பயிற்சிகளை ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப இயன்முறை மருத்துவர் ஆலோசனை செய்து வழங்குவர்.

இதனால் நம் தசைகள் பலம் பெற ஆரம்பிக்கும். இப்படி நாம் ஒரு வருடம் முழுக்க செய்ய வேண்டும். சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை என்றாலும் சரி, நாம் ஓராண்டு வரை எடை தூக்கக் கூடாது. அதன் பிறகு தூக்க ஆரம்பிக்கலாம்.

நாம் இதுவரை செய்த உடற்பயிற்சி

களால் தசைகள் வலிமை பெற்றிருக்கும். அதனால் பயம் இல்லாமல் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். சிலர் இதற்கும் மேல் உடற்பயிற்சி கூடங்களில் பத்து கிலோ, இருபது கிலோ எனத் தூக்குவார்கள் அல்லவா, அதுபோல தூக்குவதற்கு விரும்பினால் இயன்முறை மருத்துவர் அதற்கு ஏற்ப பயிற்சிகள் கொடுப்பார்கள். அதன்படி செய்ய

முடியும்.

உடற்பயிற்சியின் பலன்கள்...

* குழந்தை பிறந்துவிட்டால் நாம் இயல்பாக எடைகளை தூக்க முடியாது என்பது மூட நம்பிக்கை. முறையான உடற்பயிற்சி மூலம் பழைய நிலைக்கு முற்றிலும் திரும்ப முடியும்.

* உடற்பயிற்சி செய்வதனால் எடைகளை தூக்கினாலும் எந்தவித உடல் வலி, முதுகு வலி இல்லாமல் இருக்கலாம்.

* உடற்பயிற்சிகள் செய்வதால் அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு எடை தூக்கினாலும் தையலில் ஏற்படும் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும்.

சாதனைப் பெண்கள்...

ஆண்களைப் போல பெண்களும் அதிக எடைகளை தூக்குவது, பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொள்வது என இருந்தால்தான் சாதனை என்பது கிடையாது. ஆனால், குழந்தை பிறந்த பின் உடல் அளவிலும், மன அளவிலும் முடங்கிவிடும் பெண்களுக்கு மத்தியில் இரு அறுவை சிகிச்சை செய்து குழந்தைகள் பிறந்தாலும் பாடி பில்டிங்கில் கலக்கும் பெண்களும் உண்டு. முறையான உடற்பயிற்சிகள் செய்து இவர்கள் பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொள்வதால், எந்தவித உடல் பிரச்னைகளும் இல்லாமல் இவர்களால் மேடைகளில் திறம்பட செயல்பட முடிகிறது.

மேலும் இவ்வகை பெண்கள் ஏதோ அமெரிக்கா, லண்டனில் இருப்பவர்கள் மட்டுமல்ல. நம் ஊர் பெண்களும் இதற்கு வாழும் உதாரணங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

மொத்தத்தில் குழந்தை பெற்ற பிறகும் நாம் பயம் இல்லாமல் இயன்முறை மருத்துவ உதவியுடன் எடைகளை தூக்க முடியும், இயல்பாய் பழையபடி பலம் கொண்ட பட்டாம்பூச்சிகளாய் வானில் பறக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் மனத்தில் ஆழ பதித்துக் கொள்வோம்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்