Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் தோழி

எது நிஜம், எது பிம்பம்!

இப்பொழுதெல்லாம் நடிப்பதும், போலி பாவனையுடன் வலம் வருவதும், தன்னை உடனிருப்பவர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்ட முனைவதும் எளிதாகிவிட்டது. தன்னியல்புபடி யதார்த்தமாக நடந்து கொள்ளதான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதற்காகவே ஆற்றலை வீணடிக்க வேண்டியுள்ளது- ஆல்பர்ட் காம்யூ.

வலியது பிழைக்கும் என்பது இங்கு கூற்றாக இருக்க, வலியது எது, நிஜம் எது, போலியான பிம்பம் எது என்பது புரியாமலே, யதார்த்தமாய் இருப்பவர்களின் வலிமையான நிலை முற்றிலும் குலைந்து விடுகிறது. தன்னியல்புபடி இருப்பவர்கள், இந்த சமூகத்தின் முன் தோற்றுப் போனவர்களாய் சிந்திக்க வைக்கத் தூண்டப்படுகிறார்கள். இதனால் பதற்றமும், பயமும் இணைய, சூழலை கையாளத் தெரியாத மனிதர்கள், நோயாளிகளாய் மாறும் சூழல் அதிகமாகி வருகிறது.எது உண்மை, எது பிம்பம் என்று அறிந்து கொள்ள பயப்படும் சமூகத்தில் இருக்கின்றோம். இதனால் நல்ல நட்புகளும் முறிந்துவிடும் சூழலில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்னன்.

உலகத்தோடு ஒத்து வாழ் என்பது உண்மைதான். இன்றைய உலகம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனியாக இருக்கிறது என்பதே வருத்தமான விஷயமாக இருக்கிறது. அதனால்தான் தன்னால் செய்ய முடியாததை, நம் உடனிருக்கும் உறவுகளோ நட்புகளோ செய்யும்போது, அது மிகப்பெரும் அழுத்தத்தை, எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்களிடத்தில் திணித்துவிடுகிறது. இதில் குறிப்பிட்ட அந்த நபர்கள் புரிதலுள்ள நண்பர்களிடமிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். அல்லது நெருங்கிய உறவுகள் கொடுக்கும் தனிமையை கையாள முடியாமல் மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். ஒரு சிலர் தனிமையின் தீவிரத்தை தாங்க முடியாமல் நரம்புத் தளர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்.

தற்போதைய கொண்டாட்ட சமூகத்திலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டேயிருக்கும் சமூகத்திலும் ஒட்ட முடியாமல் தவிக்கும் மனிதர்களுக்கும் சேர்ந்ததுதான் இந்த சமூகம் என்பதை நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம். எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல், ஒருசில நிமிடங்களில் பிரபலமாவதும், அதில் கிடைக்கும் அற்ப மகிழ்ச்சியிலும், மனிதர்கள் அவரவர் உறவுகளை அலட்சியமாக நடத்துகிறார்கள் அல்லது நேரம் கிடைக்காத சூழலில் கண்டுகொள்ளாமலும் இருக்கிறார்கள்.

சக மனிதர்களின் அன்பும், அரவணைப்பும், ஆறுதலான உரையாடலுமே மனிதர்களின் மிகப்பெரிய பலமும், வலிமையும் அதிகரிக்க துணையாகிறது. தங்களுக்குப் பிடித்த உறவுகளுக்காக எத்தனை எத்தனையோ கடினமான காலங்களைக் கடந்து, வெற்றி பெற்று, தனது உறவுகளை நிமிர்ந்து நிற்க வைப்பதை காலம் காலமாக மனிதர்களின் இயல்பாகப் பார்க்கிறோம். கதைகளாகவும் கேட்கிறோம்.

இன்றைய உலகமயமாக்கள் சூழலில், மனிதர்கள் முன் கவர்ச்சியான, ஆடம்பரமான, பிரமிப்பான விஷயங்கள் பல இருந்தாலும் அவை அனைத்தும் அவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்தவே செய்கிறது. இங்கு மனிதன் வெற்றி பெறுவதும், கொண்டாடப்படுவதும், தன்னை பெரிய ஆளென நிரூபிக்க முனைவதும், நமக்குப் பிடித்தவர்கள் முன், நாம் இன்னும் இன்னும் பிரமிப்பாய் தெரிய வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே.

இன்றைய சூழலில், சமூக ஊடகம் அல்லது துறை சார்ந்த நெருக்கடிகளால், வீடுகளில் மனம் விட்டு பேசுவது குறைந்து வருகிறது. இதில் உறவுகளுக்குள் இருக்கும் நிறைகுறைகள் பெரிதாகத் தெரியாமல், புரிந்து கொள்ளப் படாமலே இருக்கும் சூழலும் அதிகரிக்கிறது.உதாரணத்திற்கு ஒரு சம்பவம். கணவர் வெளியூரில் இருக்க, நாற்பத்தைந்து வயது பெண் ஒருவர் தன் மகனுடன் தனியாக வசிக்கிறார். குறிப்பிட்ட அந்த பெண்ணிடம் பேசுவதற்கு கணவருக்கும், மகனுக்கும் நேரமில்லை. பெண்ணுக்கோ தனியாக சென்று, தனக்கென நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளத் தெரியவில்லை. வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கு தனியாகக் கடைக்கு செல்வதற்கும் முயல்வதில்லை.

பெண்ணின் கணவரும், மகனுமாக, வீட்டிற்குத் தேவைப்படும் அனைத்தையும் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து, டோர் டெலிவரியாக வாங்கிவிட, குறிப்பிட்ட பெண்ணிற்கு வெளியே செல்ல வேண்டிய தேவை சுத்தமாக எழவில்லை. இதில் குறிப்பிட்ட அப்பெண் தனிமையின் எல்லைக்கே செல்ல, கணவனுக்கும், மகனுக்கும் பெண்ணின் நிலை புரிந்தாலும், எதுவும் செய்ய முடியாத பணிச் சூழல் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

யாரிடமும் பேசாமல், தினந்தோறும் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, பெண்ணிற்கு ஏற்பட்டிருப்பது பக்கவாதம் என்றும், அவருக்கு பழைய நினைவுகள் எதுவும் இல்லை எனவும் மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அந்தப் பெண்ணிடம் பேனாவைக் காண்பித்தால், அதன் பெயர் பேனா என்கிற வார்த்தையைக்கூட அவரால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

ஆரோக்கியமாக இருந்த பெண், தனிமையின் தீவிரம் தாங்க முடியாமல், நோயாளியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாறினார். தங்கள் வீட்டிலுள்ள பெண்ணின் மனதைக்கூடப் புரிந்து கொள்ளாமல், வீட்டிற்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் குவித்த கணவரும், மகனும் என்ன செய்வதெனத் தெரியாமல் கலங்கி நின்றனர்.

ஆடம்பர வாழ்வும், வாங்கிக் குவிக்கும்பொருட்களும் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நமக்கு குதூகலத்தை தரும். அதன்பின், மனிதர்களோடு பேசுவதும், நேரம் செலவழிப்பதும் மட்டுமே பெரிய விருப்பமாக எல்லோருக்குள்ளும் மாறியிருக்கும். அதனால்தான், இன்றைக்கு டிராவல் ஏஜென்டுகளின் சுற்றுலாத் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம், முகம் தெரியாத நபர்களுடன் இணைந்து குழுவாக பயணிக்க மனிதர்கள் தயாராகி விட்டார்கள்.

இவை தவிர்த்து, ஆன்லைன் யோகா வகுப்பு, ஆன்மீக சொற்பொழிவு, குழுவாக இணைந்து கைதொழில் கற்பதெனவும் சிலர் செயல்படுகிறார்கள். அதிகாலை நடைப்பயிற்சி, குழு உரையாடல், புத்தக வாசிப்பு, பறவைகளை பார்வையிடுவது, டர்ட்டில் வாக், காஃபி கிளப் எனவும் ஆண்களும், பெண்களுமாக கூடுகிறார்கள்.

இப்படியெல்லாம் இணையவும், பழகவும் தெரியாத நபர்களே இங்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்காகவும் நாம் ஏதாவது செய்து கொடுக்க வேண்டிய கடமை முக்கியமாக குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கிறது. அதுவே இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக நம்முன் நிற்கிறது.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்