Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க!

நன்றி குங்குமம் டாக்டர்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், வைரஸ் எளிதாக உடலில் புகுந்து, காய்ச்சல், இருமல், சோர்வு, உடல்வலி, தலைவலி, சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி, சளி போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற உபாதை நீண்ட வருடங்களாக இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்புத்தன்மைக் குறைவு என்ற பிரச்னையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் ஆரோக்யம் தமிழக அரசு சிறப்புத்திட்டம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் குறிப்புகள் தங்களுக்கு உதவிடக் கூடும். அதுபற்றிய விவரம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம்

நாட்டு நெல்லிக்காய் - அரைத்துண்டு (50 மி.லி. அளவு சாறு), துளசி - 20 இலைகள் (50 மி.லி. அளவு சாறு), இஞ்சி - கால் துண்டு (சிறியது) 5 மி.லி. சாறு), மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி (1.25 கிராம்), தண்ணீர் - 150 மி.லி. அளவு. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பருகவும். ஒரு நாளில் இருவேளை பருகவும். இதனை பெரியவர்கள் 250 மி.லி. அளவும், சிறியவர்களுக்கு 100 மி.லி. அளவும் பருகலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூடான பானம்

இஞ்சி - சிறிய துண்டு (5 கிராம்), துளசி - 10 இலைகள், மிளகு - கால் தேக்கரண்டி, அதிமதுரம் - அரைத்தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, தண்ணீர் 250 மி.லி. அளவு எடுத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகவும். ஒரு நாளில் இரண்டு வேளை பருகவும். பெரியவர்கள் 50 மி.லி. அளவும், சிறியவர்கள் 20 மி.லி. அளவும் பருகவும்.

தினசரி கடைபிடிக்க வேண்டியவை

தினமும் யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் 30 நிமிடம் செய்ய வேண்டும். (காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் செய்யவும்)சிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால் வாயைக் கொப்பளிக்கவும்.(காலை, மாலை)மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.சூரிய ஒளிக்குளியல் உங்கள் இருப்பிடத்திலேயே 15-20 நிமிடம் சூரிய ஒளியில் நிற்கவும். (காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்குப் பிறகு) தினசரி உணவில் காய்கறி, பழங்கள் சேர்த்துக் கொள்ளவும்.

யோகா பயிற்சிகள்

வஜ்ராசனம், பத்மாசனம், சஷங்காசனம், மூச்சு பயிற்சிகள், அனுலோமா, விலோமா சாதாரணமாக மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிடவும். 10 முறை 3 விநாடி மூச்சை உள்ளே இழுத்து, 3 விநாடி நிறுத்திய பின் வெளியே விடவும்.பிராமரி பிராணாயாமம் (5 முறை) மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுமுன் காதை ஆள்காட்டி விரலால் மூடி தலையை முன்னோக்கி வளைத்து (ம்) என்ற சப்தத்துடன் மூச்சை வெளியே விடவும்.

ஆயுர்வேதம்: வில்வ இலை, துளசி இவற்றில் ஒன்றையோ, இரண்டையுமோ தனித்தனியாக இடித்துப் பிழிந்த சாற்றில் சமஅளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்சி கசண்டு மணல் பாகத்தில் வரும்போது, இறக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளித்து வரவும்.சளியால் ஏற்படும் காதடைப்பிலும், சீழிலும் இளஞ்சூடாக்கிக் காதில் 4-5 சொட்டுகள் விட்டு பஞ்சடைத்துக் கொள்ளலாம். தொண்டைக் கரகரப்பும், டான்ஸில் வீக்கமுள்ளவர் இதையே வாயிலிட்டுக் கொப்பளிக்கவும். அஸன வில்வாதி தைலம் எனும் பெயரில் விற்பனையாகும் மருந்தையும் இதுபோலவே பயன்படுத்தி குணம் பெறலாம்.

காலை உணவாக ஒரு கப் தினைப் பொங்கல் அல்லது கலப்பு பருப்பு அடை, கலப்பு தினை தோசை, கொத்துமல்லி அல்லது புதினா சட்னி, இஞ்சி சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சமைத்துக் கொள்ளவும். மதியம் அரிசி வகை, தினை, சாம்பார், பூண்டு ரசம், நாட்டு காய்கறி கூட்டு, பொரியல், பச்சை காய்கறிகள், மோர் சாப்பிடவும். இரவில் இரண்டு புல்கா, தக்காளி, வெங்காயச்சட்னி, பல தானிய பருப்புகள் சேர்த்து அரைத்த இட்லி என்று சாப்பிடலாம். இரவு படுக்கும் முன் ராஸ்னாதி சூரண மருந்தை உச்சந்தலையில் தேய்த்த பிறகு படுத்துறங்கவும்.இவற்றை எல்லாம் தொடர்ந்து செய்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தொகுப்பு: ரிஷி