Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரத்த சர்க்கரை அளவும்... தெரிந்துகொள்ள வேண்டியவையும்!

நன்றி குங்குமம் தோழி

பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் வியாதி என முன்பெல்லாம் சர்க்கரை நோயை சொல்வதுண்டு. ஆனால், இப்போதோ வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறது. ஏழை, பணக்காரர் என்று பாகுபாடு இல்லாமல் அதிகரித்து வரும் இந்த சர்க்கரை நோயானது வருவதற்கு முன்பாகவே பல அறிகுறிகளை நமக்கு உணர்த்துவது உண்டு. அவ்வாறு உடல் உணர்த்தும் சமிக்கைகளை முன்பே அறிந்து தடுக்க முன்வந்தாலே போதும், சர்க்கரை நோய்க்கு எளிதில் குட்-பை சொல்லிவிடலாம்.

அதில் முக்கியமான அறிகுறியாக ‘குளுக்கோஸ் ஸ்பைக்’ (Glucose Spike) இருப்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அப்படி என்றால் என்ன, அதை எப்படி தடுப்பது, செய்ய வேண்டிய நடவடிக்கைகள் யாது? என்பது பற்றியெல்லாம் இங்கே தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

குளுக்கோஸ்...

நாம் தினசரி உண்ணும் சர்க்கரை சத்தினை ‘கார்போஹைட்ரேட்’ (Carbohydrates) என மருத்துவத்தில் சொல்வோம். இந்த கார்போஹைட்ரேட் உடலில் செரிமானமாகி சர்க்கரை ஆக அதாவது, குளுக்கோஸாக ரத்தத்தில் கலக்கிறது. நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் எரிபொருளாக இருப்பது சர்க்கரைதான். இந்தச் சத்து உடனடியாக உடலுக்கு

ஆற்றலை வழங்குகிறது. அந்த ஆற்றலை வைத்துதான் நாம் இயங்க முடியும்.

குளுக்கோஸ் உணவுகள்...

நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தினை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.குளுக்கோஸ் (Glucose)- இட்லி, தோசை, சோறு, கிழங்கு போன்ற உணவுகள்.

2.ஃப்ரிக்டோஸ் (Fructose)-அனைத்து விதமான பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் இருந்து கிடைக்கும் சர்க்கரை சத்து.

3.சுக்ரோஸ் (Sucrose)-நேரடி சர்க்கரை அதாவது, வெள்ளை சர்க்கரை, வெல்லம் என எந்த வகையான சர்க்கரையாக இருந்தாலும்.

இது இல்லாமல் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் (Complex Carbohydrates) என ஒன்று இருக்கிறது. அதில் நமக்கு குளுக்கோஸ் சத்து மட்டும் இல்லாமல் புரதச்சத்து, நார்ச்சத்து என்று அனைத்தும் கலவையாக இருக்கும். அதற்கு உதாரணம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாலீஷ் செய்யாத அரிசி.

ஏன் குளுக்கோஸ் முக்கியம்..?

உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குவதால் இதனை முதன்மை உணவாக உண்பது என்பது நம் மரபில் இருக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது. உதாரணமாக நாம் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டால் முதலில் கொடுப்பது மிட்டாய் அல்லது பழச்சாறுதான். ஏனென்றால் அந்த மிட்டாயில் உள்ள இனிப்புச் சத்து நம் நாவிலேயே கரைந்து உடனடியாக குடலுக்கு சென்று அதிலிருந்து ரத்தத்தில் கலந்து நமக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆகையால் பத்து நிமிடத்திற்குள் நாம் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம். அதனால்தான் குழந்தைகளுக்கு கூட இட்லி, கிழங்கு வகைகளை அதிகமாக தர வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வாயிலேயே செரிமானம் ஆகக்கூடிய ஒரே உணவு குளுக்கோஸ்தான். நாம் வாயில் உணவை வைத்து மெல்லும்போதே வாயில் எச்சில் வரும். அந்த எச்சிலில் சில வேதிப்பொருட்கள் குளுக்கோஸை செரிமானம் செய்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் சுரக்கும்போது முதன்மையாக வரும் பாலினை ‘ஃபோர் மில்க்’ (Four Milk) என சொல்வார்கள். அது முழுக்க குளுக்கோஸ் சத்தினால் நிரம்பி இருக்கும். அதாவது, குழந்தைக்கு உடனடி ஆற்றல் கிடைக்கத் தேவைப்படும் விதமாக இயற்கை அமைத்துள்ளது.

குளுக்கோஸ் ஸ்பைக்...

ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகமாகும் போது ‘குளுக்கோஸ் ஸ்பைக்’ எனச் சொல்கிறோம். அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்து செரிமானம் ஆகி ரத்தத்தில் கலக்கும். அப்படி கலக்கும் போது ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக கலப்பதனை ஸ்பைக் என சொல்கிறோம்.

அறிகுறிகள் என்னென்ன..?

உடனடி அறிகுறிகளாக சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பசி எடுப்பது, நிறைய இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும் என உந்துதல் ஏற்பட்டு நிர்பந்தமாக உண்ணுவது (Sugar Cravings), தற்சமய மூளை மந்தம் (Brain Fog), தண்ணீர் தாகம் தோன்றுவது, உடல் அசதியாக இருப்பது.

எப்படிக் கண்டறிவது..?

* நாம் உண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்தால் 70 முதல் 140 mg/DL வரை இருந்தால் அது இயல்பான அளவுகள் ஆகும். அதுவே 180 அல்லது அதையும் தாண்டிய அளவுகள் இருந்தால் அது குளுக்கோஸ் ஸ்பைக் என எடுத்துக்கொள்ளலாம். இப்படி தினமும் அதிகமாக இருந்தால் நமக்கு எளிதில் சர்க்கரை நோய் வரும் என்பது தான் பொருள்.

* HbA1c ரத்தப் பரிசோதனை: இதில் கடந்த மூன்று மாதங்களின் ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான அளவு: 5.7 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால்.

சர்க்கரை நோயிற்கு முந்தைய நிலை: 5.7 முதல் 6.4 வரை.

சர்க்கரை நோய்: 6.5 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால்.

விளைவுகள்...

இளம் வயதில் ஞாபக மறதி ஏற்படுவது, பி.சி.ஓ.டி., குழந்தையின்மை, ஆண்களுக்கு விந்தணுக்கள் திடமாக இல்லாமல் இருப்பது, சர்க்கரை நோய், சர்க்கரை நோய்க்கு முந்தைய பிரீ டயபடீஸ் நிலை, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், கொழுப்படைந்த கல்லீரல் (Fatty Liver), எளிதில் வயதான தோற்றம், மந்தத்தன்மை அதிகமாக இருப்பது, ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை, எளிதில் எரிச்சல் அடைவது, முழுத் தூக்கம் தூங்கினாலும் தினமும் சோர்வுடன் காணப்படுவது.

தடுக்கும் வழிகள்...

* குளுக்கோஸ் அதிகம் உள்ள உணவுகளை குறைவாக உண்ண வேண்டும்.

* காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் என்று சொல்லப்படும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

* புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகளை நிறைய உண்ண வேண்டும்.

* சாப்பிட்ட பின் தூங்குவது அல்லது வெறுமனே உட்கார்ந்து இருப்பது என இல்லாமல் உடலுக்கு அசைவு தரும் வேலைகளை சிறிது நேரமாவது செய்ய வேண்டும்.

* நம் மனதினை ஒருநிலைப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

நாம் பயப்படுவது, கோபப்படுவது, பதட்டமாக இருப்பது போன்ற அதிக உணர்ச்சிவசப்படும் நேரத்திற்கு சிறிது நேரம் கழித்து நமக்கு பசி உணர்வு ஏற்படும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

அதனால் நாம் அளவில்லாமல் நிறைய சர்க்கரை சத்துக்களை நமக்குத் தெரியாமலேயே அந்த நேரத்தில் உண்ண பிரியப்படுகிறோம்.

என்னதான் தீர்வு..?

* சர்க்கரை சத்து இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தாலும் இன்றைய நவீன உலகில் குறைந்த அளவு சர்க்கரை சத்தே போதுமானதாக இருக்கிறது என்பதால் நாம் கட்டாயம் அவ்வகை உணவுகளை குறைக்க வேண்டும். உதாரணமாக, நான்கு தோசை சாப்பிடுவதற்கு பதில் இரண்டு தோசையும், உடன் ஒரு முட்டையும் சாப்பிடலாம்.

* காலையில் கண்டிப்பாக புரதச்சத்து நிறைந்த உணவைதான் தேர்வு செய்ய வேண்டும்.

* உணவில் முதலில் நார்ச்சத்து நிறைந்த உணவைதான் உண்ண வேண்டும். உதாரணமாக, காய்கறிகளை முதலில் உண்ண வேண்டும். பிறகுதான் வேறு உணவுகளை உண்ண வேண்டும்.

* சாப்பிட்ட பின் கட்டாயம் நடக்க வேண்டும். 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடப்பதினால் குளுக்கோஸ் ஸ்பைக்கை தடுக்கலாம்.

* இனிப்பு போன்ற உணவுகள், பழங்கள் எதுவாக இருந்தாலும் கடைசியில்தான் உண்ண வேண்டும். அதாவது, சாப்பிட்டு முடித்த பின்பே உண்ண வேண்டும்.

மொத்தத்தில் உணவுப் பழக்கங்களில் நிலையான மாற்றம் செய்வதால் மட்டுமே சர்க்கரை நோயினை தடுக்க முடியும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேபோல வாழ்நாள் முழுவதும் நமக்கு விருப்பமான உணவுகளை விரும்பும் நேரத்தில் சாப்பிட வேண்டும் என நினைத்தால் நாம் இப்போதே உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆரோக்கிய வழியில் நடப்போம்.

தொகுப்பு: நந்தினி சேகர்